Published : 01 Aug 2014 12:00 AM
Last Updated : 01 Aug 2014 12:00 AM

ஒரு ரூபாய்க்கு எத்தன பழம்?

ஒரு ரூபாய்க்கு எத்தன பழம் என்று கேட்டாலே போதும், மீதி எல்லாம் உங்களுக்குப் பட்டென்று புரிந்துவிடும். ஆனால் இப்ப கேள்வி அது இல்ல. ஒரு ரூபாய்க்கும் இரண்டு ரூபாய்க்கும் எவ்வளவு வித்தியாசம் என்று கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? இது என்ன சின்னப்புள்ளத் தனமா இருக்கு, இதுகூடத் தெரியாதா என்றுதானே? ஒரு ரூபாய்க்கும் இரண்டு ரூபாய்க்கும் வித்தியாசம் ஒரு ரூபாய் என்று சாதாரணக் கூட்டல் கழித்தல் தெரிந்தவர்களுக்குக் கூடப் புரிந்திருக்கும்.

ஆனால் இந்த வித்தியாசத்தை இப்போது புழக்கத்தில் உள்ள அந்த நாணயங்களைத் தொட்டுப் பார்த்துக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமம். அளவிலும் வடிவிலும் ஒரு ரூபாயும் இரண்டு ரூபாயும் ஒரே மாதிரி இருப்பதால் ஏகப்பட்ட பிரச்சினை. பஸ் கண்டக்டர் தொடங்கி பெட்டிக்கடை பாட்டி வரை எல்லோருக்கும் கஷ்டம்தான்.

ஒரு ரூபாய்க்குப் பதில் இரண்டு ரூபாய் கொடுத்துவிட்ட மனிதர்களின் அவதியைக் கோடி ரூபாய் கொடுத்தாலும் சரிக்கட்ட முடியாது.

ஒரு ரூபாயில் என்ன பெரிதாக வந்துவிடுகிறது என மெத்தனமாக இருந்துவிட முடியாது. ஒரு ரூபாய் குறைந் தால் கண்டக்டர் பாதி வழியில் இறக்கி விட்டுவிடுவார். ஒரு ரூபாயில் நம்ம ரஜினி, சிவாஜி படத்தில் கோடீஸ்வரராகவே ஆகிவிடுவார்.

முன் காலத்தில் இந்தப் பிரச்சினை இருந்ததில்லை. ஒரு பைசா, இரண்டு பைசா, இருபத்தைந்து பைசா அதுதாங்க நாலணா, ஐம்பது பைசா, ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் போன்ற அனைத்து நாணயங்களிலும் எடை, வடிவம் போன்றவற்றில் வித்தியாசத்தை எளிதாகக் காண முடியும்.

இதனால் நாணயம் தொடர்பாக அப்போது எந்தப் பிரச்சினையும் எழுந்த்தில்லை. ஆனால் இப்போது ஒரேபோல் நாணயங்கள் இருப்பதால், எழும் பிரச்சினைகள் மக்களிடையே முணுமுணுப்பை ஏற்படுத்து கின்றன. சாதாரண மனிதர்களுக்கே இப்படி என்றால் பார்க்கும் திறனற்றவர் களின் நிலைமையை எண்ணிப் பாருங்கள்.

மனிதர்களின் பொருமல் அரசின் காதையும் எட்டி விட்டது. ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா இந்த நாணயங்களை மாற்றிவிடும் உத்தேசத்தில் இருக்கிறது என்று தகவல்கள் வந்துள்ளன.

இரண்டு ரூபாய் நாணயத்தையும் ஐந்து ரூபாய் நாணயத்தையும் புதிதாக உருவாக்கப்போகிறார்கள். இப்போது புழக்கத்தில் உள்ள இரண்டு ரூபாய் ஒரு ரூபாய் போலவும் ஐந்து ரூபாய் ஐம்பது பைசா போலவும் காணப்படுகின்றன.

புதிய இரண்டு ரூபாயில் ஒரு புறத்தில் சிங்க முகம் கொண்ட அசோக சக்கரச் சின்னமும், அதனருகே இடப் பக்கத்தில் பாரத் (இந்தி) என்னும் வாசகமும் வலப் பக்கத்தில் INDIA என்னும் வாசகமும், கீழே சத்யமேவ ஜெயதே என்னும் வாசகமும் (இந்தியில்) பொறிக்கப்பட்டிருக்கும்.

மறு புறத்தில் 2 என்னும் எழுத்தும் அதன் இரு புறங்களிலும் பூக்கள் போன்ற வடிவமும், மேல் புறத்தில் ரூபாய் அடையாளமும் கீழே நாணயம் உருவாக்கப்பட்ட ஆண்டும் பொறிக்கப்பட்டிருக்கும். இதே போலவே ஐந்து ரூபாய் நாணயமும் உருவாக்கப்படும். இப்படியெல்லாம் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

எப்படியோ புதிதாக வரும் இரண்டு ரூபாயையும் ஐந்து ரூபாயையும் எளிதாக வித்தியாசம் கண்டுபிடித்துக்கொள்ளலாம். யாரும் ஏமாற வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால் பழைய நாணயங்களும் புழங்கிக்கொண்டுதான் இருக்கும் என்பதால் சிறிது எச்சரிக்கை தேவைதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x