அது ஒரு பேகி பேன்ட் காலம்! | ஈராயிரத்தில் ஒருவன்

அது ஒரு பேகி பேன்ட் காலம்! | ஈராயிரத்தில் ஒருவன்
Updated on
2 min read

ஆடையைப் பற்றி என்றால், ஒற்றைப் பகுதிக்குள் சுருக்கி விடக்கூடிய முடியுமா? எடுத்து வீசினால் வீச்சு பரோட்டா அளவுக்கு விரிகிற விஷயமாச்சே.

கெளபாய் கெட்டப்: 90'களின் கிட்ஸ்கள் பெரும்பாலும் கோடுகளும் கட்டங்களும் ஜியாமெட்ரி வடிவங்களும் கொண்ட சட்டைகளைத்தான் அணிந்தார்கள். அதை கேஷுவல் உடைகள் எனச் சொன்னாலும், அதுவும் ஃபார்மல் ஆடைதான். சிறு வயதிலிருந்தே பொங்கி வழியும் எனது ஃபேஷன் ஆர்வம் பள்ளிச் சீருடையைக்கூட விட்டு வைக்காது.

ஆரம்பத்தில், சீருடையில் இருக்கும் ஓட்டைகளை மறைக்க அயர்ன் ஸ்டிக்கர்கள் ஒட்டியவர்கள், பிறகு அயர்ன் ஸ்டிக்கர் ஒட்டவே ஓட்டைப் போடும் அளவுக்கு நிலைமை முற்றிவிட்டது. ஏலியன், மண்டை ஓடு, துப்பாக்கி, யிங்-யாங் என விசித்திரமான ஸ்டிக்கர்களோடு நான் வலம் வந்தபோது, ஆசிரியர்கள் ஆரம்பத்திலேயே கண்டுகொண்டு அணைக்காமல் விட்டதன் விளைவு, பிளஸ் ஒன்னில் எரிமலையாக வெடித்தது.

நான் படித்த பள்ளியில் பிளஸ் ஒன் வகுப்பிலிருந்து புதிய சீருடை. ஒரு வாரமாகத் தையல்காரருக்குக் குடைச்சல் கொடுத்து, இடுப்பிலிருந்து தொடை வரை இறுக்கிப் பிடித்து கணுக்காலுக்குக் கீழே குடை போல விரியும் பெல்ஸ் பேன்ட், பெல்ஸின் அளவை குறைப்பதற்கு ஏதுவாக இரண்டு கால்களிலும் செங்குத்தாக ஜிப்கள்.

ஜிப்பை மூடினால் சாதா பேண்ட், திறந்தால் பெல்ஸ் பேண்ட். பேண்ட் தரையில் உரசி டார்டாராகக் கிழிந்துவிடக் கூடாது என்பதற்காக உரசுகிற இடங்களில் எல்லாம் உலோகம் இருக்குமாறு மடக்கி தைக்கப்பட்ட ஜிப்கள். மொத்தம் இரண்டு பின் பாக்கெட்கள், இரண்டிலும் வகை தொகையில்லாமல் அடிக்கப்பட்ட ரிவிட்கள், பிரெஸ் பொத்தான்கள்.

பேன்ட்டின் இருபுறமும் கூரான குல்ஃபி ஐஸ், அச்சு போலத் தைக்கப்பட்ட இரண்டு ராக்கெட் பாக்கெட்கள். சட்டையில் பட்டர்ஃபிளை காலர், அரைக்கைச் சட்டை என்றாலும் அதையும் ஒரு மடி மடித்துவிட்டு, அது அவிழ்ந்துவிடாமல் லாக் செய்யும் செட்டப்கள். இரண்டு பக்கமும் கௌபாய் பாணியில் பாக்கெட்டுகள், அதில் பொதிகை மழைச் சாரலைப் போலப் பரபரவெனத் தூவி விடப்பட்ட அயர்ன் ஸ்டிக்கர்கள், ப்ரெஸ் பொத்தான்கள், சில எம்பிராய்டரிகள் என ஏக செட்டப்புகள். மேலும் எழில் கூட்ட சிவப்புத் துணி பெல்ட், பச்சை செருப்பு என வகுப்புக்குள் நுழைந்தேன். வகுப்பாசிரியர் திகைத்துப் போனார்.

மற்ற ஆசிரியர் களிடம் இதைப் பற்றி அவர் சொல்லப் போக, ஒவ்வோர் ஆசிரியராக வகுப்பறைக்கு வந்து என்னை எழுந்து நிற்கச் சொல்லியும் திரும்பச் சொல்லியும் பார்த்துவிட்டுப் போனார்கள். கடைசியாக, தலைமை ஆசிரியரும் வந்து பார்த்துவிட்டுப் போனார். ‘ரைட்டு, சைத்தான் சைக்கிள்ல வருது' என வெளுத்து வாங்கவிருக்கும் அடைமழைக்குத் தயாரானேன். நினைத்தது போலவே, ஸ்டாஃப் ரூமில் அரை நாள் ஊறப்போட்டு அடித்து அனுப்பினார்கள்.

மீட்டுருவாக்கங்கள்: கட்டம் போட்ட சட்டையும் பூட்கட் பேண்ட்டும் என்கிற ஃபேஷன் ஒருபுறம் டிராவிட்போல நிலைத்து ஆடிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் வெவ்வேறு ஃபேஷன்கள் வருவதும் போவதுமாக இருந்தன. பூட்கட்டுடன் முதலில் ஸ்பேரிங் போட்டது கார்கோஸ். ஆறு பாக்கெட், எட்டு பாக்கெட், பத்து பாக்கெட் என யார் பேன்ட்டில் பாக்கெட் அதிகமாக இருக்கிறதென எண்ணிக் கொண்டிருப்பார்கள். கார்கோ பேன்ட்டுக்கு ரவுண்டு நெக் டி-ஷர்ட்டோ அல்லது ஹூடி வைத்த முழுக்கை டி-ஷர்ட்டோ போட்டால் அள்ளும். அதுவும் சேகுவேரா டி-ஷர்ட்களுக்குத் தனி மவுசு இருந்தது. சேகுவேராவை யார் என்றே அறியாத பலரும், சேகுவேரா டி-ஷர்ட்டோடு சுற்றிக்கொண்டி ருந்தார்கள்.

கார்கோஸ், கிரஷ், ஆன்டி ஃபிட், பென்சில் ஃபிட் என பேன்டுகளும் ரகரகமாக இருந்தன. பிஸ்தா, பஞ்சுமிட்டாய், ராமர் பச்சை, கிளிப் பச்சை, பால் பச்சை என எல்லா வண்ணங்களிலும் இருக்கும். அதையும் வாங்கிச் சிலர் அணிந்திருக்கிறோம். கட்டுக்கோப்பான கட்டம் போட்ட சட்டைகளுக்கு மத்தியில் இப்படியாக ஆடைகள் அணிந்த 90'களின் கிட்ஸ்களும், இப்படியான ஆடைகள் அணிபவர்களுக்கு மத்தியில் கட்டுகோப்பான ஆடைகள் அணியும் 2கே கிட்ஸ்களும் இருக்கிறார்கள்.

‘A Character with no bad outfits' என்கிற கேள்விக்கு `விடிவி' சிம்புவையும் `அயன்' சூர்யாவையும் 90'களின் கிட்ஸ்கள் சொல்கிறார்கள். அதேபோல், `தள்ளுமால' டோவினோவையும் `மாஸ்டர்' விஜய்யையும் 2கே கிட்ஸ்கள் சொல்கிறார்கள். பூட்கட், பட்டர்ஃப்ளை காலர் என 90'களின் கிட்ஸ்கள் 80'களின் ஃபேஷன்களை மீட்டுருவாக்கம் செய்ததுபோல, ஓவர்சைஸ் டி-ஷர்ட், பேகி பேன்ட் என 2கே கிட்ஸ்கள் 90'களின் ஃபேஷன்களை மீட்டுருவாக்கம் செய்கிறார்கள். அம்புட்டுதேன்!

(வருவான்)

- iamsuriyaraj@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in