Last Updated : 29 Jun, 2018 10:22 AM

 

Published : 29 Jun 2018 10:22 AM
Last Updated : 29 Jun 2018 10:22 AM

நான்டிராய்ட் எனும் தோழன்

 

ரப்பா மொஹஞ்சதாரோ காலம் எல்லாம் இல்லை அது, 1980-கள்தான். அப்போது ஊருக்கு ஒரு தொலை பேசிதான் இருந்தது. அதன்பின் அவை மெல்ல அதிகரித்து தெருவுக்கு ஒன்று என ஆகி, பின் வீட்டுக்கு ஒன்று என ஆனது. செல்போன் வந்த பின், அது ஆளுக்கு ஒன்று எனப் பல்கி பெருகிவிட்டது. இன்றைய ஆண்ட்ராய்ட் யுகத்தில், பழைய செங்கல் போன்கள் ஸ்மார்ட் போன்களாக உருமாறிவிட்டன. வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் கணக்குகள் போன்றவை பிறக்கும் குழந்தைக்கு மட்டும்தான் இன்று இல்லை.

எங்கும் எதிலும் ஆண்ட்ராய்ட் கோலோச்சும் இந்த நவீன யுகத்தில் புதிதாக ஒரு ‘ட்ராய்ட்’ போன் வந்து ‘டிரெண்ட்’ ஆகி உள்ளது. அதன் பெயர் ‘நான்டிராய்ட்’. ஆண்ட்ராய்ட் தெரியும், நமக்குத் தெரியாமல் அது என்ன புதிதாக நான்ட்ராய்ட் என மூளைக்கு நீங்கள் வேலை கொடுக்க வேண்டாம். ஆண்ட்ராய்ட் இல்லாத போனே நான்ட்ராய்ட் போன். உடனே அது ஆப்பிள் போனாக இருக்குமோ விண்டோஸ் போனாக இருக்குமோ என்று எல்லாம் உங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட வேண்டாம். நான்ட்ராய்ட் என்பது முன்பு நம்மால் ஏளனம் செய்யப்பட்ட பழைய செங்கல் போன்தான்.

வாட்ஸ் அப் இம்சைகள்

நம் வாழ்வு முறையை ‘ஆண்ட்ராய்ட்’ முற்றிலும் மாற்றிவிட்டது. காலையில் வாட்ஸ் அப்பில் வந்த ‘குட் மார்னிங்’ மெஸேஜ்களைப் பார்த்து, யாரெல்லாம் அனுப்பவில்லை என ஆராய்ந்து, பின் அனுப்பியவர்களுக்குப் பதில் ‘குட் மார்னிங்’ சொல்லி எனக் காலையில் கண்ணைத் திறந்தவுடன் படுக்கையிலேயே நாம் பிஸியாகி விடுகிறோம்.

பின்பு எழுந்து, குளித்து, மொக்கை மீம்களைப் பார்த்து வீடு குலுங்கச் சிரித்து, அதை நம் பங்குக்குப் பலருக்கு ஃபார்வார்ட் செய்து, பின்பு அரதப் பழசான வாட்ஸ் அப் வீடியோக்களைப் பார்த்தவாறு வேலைக்கோ கல்லூரிக்கோ செல்வதற்குள் நமக்குப் போதும் போதும் என்றாகிவிடும். வேலை ஆரம்பித்த சில மணி நேரத்துக்குள், சில ஆர்வக் கோளாறுகள் அனுப்பும் ‘குட் நைட்’ மெசேஜ்களைப் பார்த்து, அவர்களைத் திட்டியபடியே பொறுப்பாகப் பதிலுக்கு ‘அட்வான்ஸ் குட் நைட்’ மெசேஜ்களை வேறு நாம் அனுப்ப வேண்டும்.

ஃபேஸ்புக் இம்சைகள்

‘வாட்ஸ் அப்’புக்கே இந்த நிலை என்றால், ‘பேஸ் புக்’ பற்றிக் கேட்கவா வேண்டும். ‘ஐயம் கோயிங் டூ ஆபீஸ்’, ‘ஹேவிங் டீ அட் நாயர் கடை’, ‘ஹேவிங் பஜ்ஜி அட் ஆச்சி கடை’, ‘ஹேவிங் பிரியாணி அட் ராவுத்தர் கடை’ என நொடிக்கு ஒரு ஸ்டேட்டஸ் போட்டு உலகையே அலற வைப்போம். அவ்வப்போது தேசம், தமிழ் குறித்த படங்களை ஷேர் செய்து ‘தாயின் மணிக்கொடி’ அர்ஜுன் போன்று ஃபீல் செய்து நம் நாட்டுப் பற்றையும் மொழிப் பற்றையும் உலகுக்குப் பறை சாற்றுவோம். இவை போதாது என்று, பல வருடங்களாக ‘வாட்ஸ் அப்’பில் வலம் வரும் அரசியல் மீம்களை அவ்வப்போது ஷேர் செய்து சமூகப் போராளி அவதாரத்தை எடுத்து உலகை மிரட்டுவோம்.

எதற்கும் நேரமில்லை

இவற்றுக்கிடையில் கொஞ்சம் நேரம் கிடைத்தால், ட்விட்டர், யூடியூப் போன்ற சமூகத் தளங்களுக்குச் சென்று உலாவி, பிரபலங்களின் படங்களை லைக் செய்து, ‘வாவ் சூப்பர்’ என கமெண்ட் செய்து நம்மையும் பிரபலமாக நினைத்துக்கொள்வோம். இதெல்லாம் முடித்தபின், பேஸ்புக்கில் குட்நைட், ட்விட்டரில் குட்நைட், மெஸஞ்சரில் குட்நைட், வாட்ஸப்பில் குட்நைட் எனச் சம்பிரதாயங்கள் முடிவதற்குள் ‘குட்மார்னிங்’ மெசேஜ்கள் வரத் தொடங்கிவிடும். அதன் பின் சாப்பிட நேரமில்லை, உட்கார நேரமில்லை, படுக்க நேரமில்லை, நடக்க நேரமில்லை, பேச நேரமில்லை என்று ‘தெனாலி’ படத்தில் ‘எல்லாம் பயம் மயம்’ எனச் சொன்ன கமல் மாதிரி, ‘எதற்கும் நேரமில்லை’ என்று சொல்லத் திரிவது நமக்கு வாடிக்கையாகி விட்டது.

நம்மை மீட்டெடுக்கும் நான்டிராய்ட்

இத்தகைய ‘ஆண்ட்ராய்ட்’ இம்சையிலிருந்து நம்மை விடுவிக்க வந்து இருக்கும் ஆபத்பாந்தவனே இந்த ‘நான்டிராய்ட்’ போன். ஆண்ட்ராய்ட் இல்லாத போனை எப்படி உபயோகப்படுத்துவது, வாட்ஸ் அப்பும் ஃபேஸ் புக்கும் இல்லாமல் எப்படி வாழ்வது என்றெல்லாம் மலைக்க வேண்டாம். இவை இல்லாததால் உங்களுக்குப் பசியும் தூக்கமும் இல்லாமல் போகப் போவதும் இல்லை, நீங்கள் உயிர் வாழாமல் இருக்கப் போவதும் இல்லை. நம் பார்வையை நம்மைச் சுற்றி இருக்கும் உலகின் மீது கொஞ்சம் திருப்பினால், இந்த நான்டிராய்ட் பல ஆச்சரியங்களை அளித்து நம் வாழ்வின் தரத்தை உயர்த்தும். முக்கியமாக ‘நேரமில்லை’ என்பதையே இல்லாமல் செய்யும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x