நீங்கள் ஸ்மார்ட் போன் அடிமையா?

நீங்கள் ஸ்மார்ட் போன் அடிமையா?
Updated on
1 min read

ளைஞர்கள் மொபைல் போனை அதிக நேரம் பயன்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக உள்ளது. அந்தக் குற்றச்சாட்டை உண்மையாக்கியிருக்கிறது அண்மையில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு முடிவு. இந்திய இளைஞர்கள் தினமும் சராசரியாக 150 முறைக்கும் மேலாக தங்கள் மொபைல் போனைப் பார்ப்பதாக அந்த ஆய்வு சொல்கிறது.

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகமும் இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலும் (ICSSR) இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டன. ‘ஸ்மார்ட்போனை சார்ந்திருத்தல், வாங்கும் மனநிலை: டிஜிட்டல் இந்தியா முயற்சிகளின் தாக்கங்கள்’ என்ற தலைப்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவில் உள்ள 20 மத்திய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 200 மாணவர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

மனக் கலக்கம், தகவலைத் தவறவிட்டுவிடுவோமோ என்ற பயம் காரணமாகப் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் மொபலை தினமும் சராசரியாக 150 முறையாவது எடுத்துப் பார்க்கிறார்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது. மாணவர்களின் இந்த நடத்தை அவர்களின் ஆரோக்கியத்தையும் கல்வியையும் பெரிய அளவில் பாதிப்பதாக ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஆய்வில் பங்கேற்ற 26 சதவீத மாணவர்கள் மட்டுமே மொபைல் போனை பேசுவதற்காக மட்டும் பயன்படுத்துவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். மற்றவர்கள் சமூக ஊடகங்கள், கூகுள் தேடல்கள், பொழுதுபோக்கு அம்சங்களுக்காக (திரைப்படங்கள் பார்ப்பது, பாடல்கள் கேட்பது) மொபைல் போனைப் பயன்படுத்துவதாகக் கூறியுள்ளனர்.

14 சதவீத மாணவர்கள் தினமும் ஸ்மார்ட் போனை மூன்று மணி நேரம் பயன்படுத்துவதும் ஆய்வில் அம்பலமாகியுள்ளது. ஆனால், இவர்களைவிட 63 சதவீத மாணவர்கள் தினமும் நான்கு முதல் ஏழு மணி நேரம் மொபைல் போனிலேயே மூழ்கிக் கிடக்கின்றனர் என்கிறது ஆய்வு. ஒட்டுமொத்தமாக கணினிக்கு மாற்றாக ஸ்மார்ட் போனைப் பயன்படுத்துவதாக இந்த ஆய்வில் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல 2017-ம் ஆண்டில் தென் கொரியாவில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் மன அழுத்தம், மனக் கலக்கம், தூக்கமின்மை போன்ற பிரச்சினைகள் இளைஞர்களுக்கு ஏற்படுவது தெரியவந்தது. கொரிய பல்கலைக்கழகம் நடத்திய இந்த ஆய்வில், இணைய பயன்பாட்டுக்கும் ஸ்மார்ட் போன்களுக்கும் அடிமையாகியிருக்கும் இளைஞர்களின் மூளைகள் வேதிப்பொருட்களின் சமநிலையின்மையால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in