

பார்வையில் ஏதாவது பிரச்சினை இருந்ததால் கண்ணாடி அணிந்த காலம் மலையேறிவருகிறது. ஸ்டைலுக்காகக் கண்ணாடி அணியும் டிரெண்டைத் தொட்டு சில ஆண்டுகள் ஆகிவிட்டன. கண் பார்வைக்கேற்ப ‘பவர்’ கண்ணாடிகளில்கூட ‘கேட் ஐ’, ‘ஓவர் சைஸ்’ போன்று புது மாடல்கள் வந்துவிட்டன. ஃபேஷன் உலகில் டிரெண்ட் அடித்திருக்கும் இந்தக் கண்ணாடி மாடல்களை ‘டம்மி’ கண்ணாடியாகவும் அணிந்து ஸ்டைலுக்கு ஸ்டைல் கூட்டிவருகிறார்கள், இந்தக் காலத்து இளசுகள்!
‘கலர்’ கண்ணாடி: பெரும்பாலும் கறுப்பு, பழுப்பு நிறங்களால் ஆன கண்ணாடிகளைப் பார்த்திருப்போம். ஆனால், தற்போது சிவப்பு, நீலம், பச்சை எனப் பல வண்ணங்களில் கண்ணாடி அணியவே பலரும் விரும்புகிறார்கள். இன்னும் ஒருபடி மேலே போய், இரண்டுக்கும் மேற்பட்ட வண்ணக் கலவையாலான கண்ணாடியை அணிபவரையும் பார்க்க முடிகிறது. ‘மேட்ச்’ செய்தது அந்தக் காலம்; ஆடைக்கும் கண்ணாடியின் வண்ணத்துக்கும் தொடர்பில்லாமல் இருப்பது இந்தக் காலம். இதையெல்லாம் ‘காண்ட்ராஸ்ட்’ எனச் சொல்லும் ஃபேஷன் பிரியர்கள், வண்ணக் கண்ணாடிகளை அணிந்து ஸ்டைலாக வலம்வருகிறார்கள்.
‘ஓவர் சைஸ்’ கண்ணாடி: கண், முக அமைப்புகளுக்கு ஏற்ப கண்ணாடியின் அளவைப் பார்த்துத் தேர்வு செய்வதுதான் சென்ற தலைமுறை வரை வழக்கம். ஆனால், சிறு வயதினர் முதல் பெரியோர் வரை அனைவரையும் கவர்ந்திருக்கிறது, இந்த ‘ஓவர் சைஸ்’ கண்ணாடி. அதாவது, கண்ணாடியின் ‘ஃபிரேம்’ வழக்கத்தைவிடப் பெரிதாக இருக்கும். இதுபோன்ற அமைப்பிலான கண்ணாடிகள் ‘பவர்’ பொருந்தியதாகவே இருந்தாலும், அவையும் ஸ்டைல் லுக்கைத் தருகின்றன. செவ்வக, வட்ட வடிவிலான எந்தக் கண்ணாடி என்றாலும், அது பெரிதாக இருந்தால் ‘ஓவர் சைஸ்’ என்கிற வரையறையில் வந்துவிடுகிறது.
‘கேட் ஐ’ கண்ணாடி: பெண்கள் பலரும் அணிய விரும்பும் ஒரு கண்ணாடிதான் ‘கேட் ஐ’ கண்ணாடி. வட்ட, செவ்வக வடிவிலான கண்ணாடியைப் போல அல்லாமல், கண்ணாடியின் இரண்டு பக்கமும் கூர்மையாக வடிவமைக்கப்பட்டிருக்கும். பார்ப்பதற்குப் புதிதாகவும் அழகாகவும் இருக்கக்கூடிய இந்த ‘கேட் ஐ’ கண்ணாடியைப் பிரபலங்கள் பலர் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் அணிந்துவந்து டிரெண்டிங் ஆக்கிவிடுகிறார்கள். இந்த வடிவிலான கண்ணாடியை ‘பவர்’ கண்ணாடியாக அணிவதைவிட ‘டம்மி’ கண்ணாடியாக ஃபேஷனுக்காக அணியலாம்.
‘திக் அண்ட் க்ளியர்’ கண்ணாடி: கறுப்புக் கண்ணாடிகளுக்குப் பதிலாக கலர் கண்ணாடிகள் சந்தையில் பிரபலமடைந்திருக்கின்றன. வெள்ளைக் கண்ணாடிகளுக்கு எப்போதுமே தனி மவுசு இருக்கவே செய்கிறது. இதை ‘க்ளியர்’ கண்ணாடி என வகைப்படுத்தியிருக்கும் ஃபேஷன் ஆர்வலர்கள், பெரும்பாலும் ‘பவர்’ கண்ணாடியாக இதைப் பயன்படுத்துகிறார்கள். இந்த வகை கண்ணாடிகளின் ‘ஃப்ரேம்’ மெலிதாக அல்லாமல், தடியாக இருப்பது இதன் சிறப்பு. ‘திக் அண்ட் க்ளியர்’ கண்ணாடிகளை ஸ்டைலுக்காக மட்டுமல்ல, பார்வையில் பிரச்சினை இருப்பவரும் அந்தந்த ‘பவர்’ பொருத்தி நாள்தோறும் பயன்படுத்தலாம்.
‘விண்டேஜ் ரவுண்டு’ கண்ணாடி: என்னதான் புதியன தோன்றினாலும், அவ்வப்போது பழைய விஷயங்கள் மீண்டும் டிரெண்ட் அடிப்பதும் வழக்கம்தானே. அந்த வகையில், ‘விண்டேஜ் ரவுண்டு’ கண்ணாடிகள் மீண்டும் கண்ணாடிச் சந்தையை ஆக்கிரமித்து வருகின்றன. 90ஸ் கிட்ஸ்களுக்கு இந்த வகைக் கண்ணாடி ‘ஹாரிபாட்டர் கண்ணாடி’யாகவே பரிச்சயம்! வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கக்கூடிய, நன்கு படிக்கக்கூடிய மாணவர்களின் விருப்பமாக இருந்த இந்த ரவுண்டு கண்ணாடிகளே தற்போது சில மாற்றங்களுடன் வந்துள்ளன. வழக்கமான கறுப்பு, வெள்ளை, பழுப்பு நிறங்களைத் தவிர்த்து ‘பேஸ்டல்’ நிறங்களிலான வட்டக் கண்ணாடிகள் ஸ்டைல் லுக்கைத் தரும் என்கிறார்கள் ஃபேஷன் பிரியர்கள்.
இப்படிப் புது மாடல்களில் வந்துவிட்ட கண்ணாடிகளை ‘பவர்’ பொருத்தி அணியலாம். அல்லது ‘கூலர்ஸ்’ ஆகவும் அணியலாம். ஆனால், பெரும்பாலானோர் ஸ்டைலுக்காக ‘டம்மி’ கண்ணாடியாகவே அணிந்து ஒளிப்படங்களை ‘கிளிக்’கிக் கொண்டிருக்கிறார்கள்! நீங்களும் வாங்கித்தான் பாருங்களேன்!