

இந்தக் காலத்து இளைஞர்கள் நேரத்தைப் போக்க எங்கும் செல்ல வேண்டாம். உள்ளங்கையில் இருக்கும் திறன்பேசியே போதும். அதிலுள்ள சமூக வலைத்தளங்களில் நுழைந்தால், நேரம் போவதே தெரியாத அளவுக்கு மூழ்கிவிடலாம். இப்படி நேரத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் சமூக வலைத்தளங்களிலிருந்து ஒதுங்க நினைக்கும் சிலர், பலவிதமான முயற்சிகளையும் எடுக்கின்றனர். சிலர் வாரத்தில் ஒரு நாள் திறன்பேசியைத் தொடாமல் கூட இருக்கின்றனர். ஆனால், கனடாவைச் சேர்ந்த 24 வயதான ஓர் இளைஞர் வேறுவிதமான முயற்சியை எடுத்திருக்கிறார்.
ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் தன்னை அடிமையாக்குவதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்! சமூக வலைத்தளங்கள் அதிக நேரம் செலவழிக்க தூண்டுவதாகவும், இதனால் தூக்கத்தை இழப்பதாகவும் அந்த இளைஞர் புகார் கூறியிருக்கிறார். சமூக வலைத்தளங்கள் மீது வழக்கு தொடர்ந்த அந்த இளைஞரின் செயல், சமூக வலைத்தளங்களிலேயே டிரெண்ட் ஆனதுதான் இதில் நகைமுரண்.
கல்யாண பிரியாணி: நள்ளிரவு 2 மணிக்கே பிரியாணியைச் சாப்பிட தொடங்கிவிடும் இன்றைய இளைஞர்களுக்கு விதவிதமாகப் பிரியாணி சாப்பிடுவதென்றால் அலாதிப் பிரியம்தான். ஹைதராபாத், திண்டுக்கல், ஆம்பூர், தலசேரி, மலபார் என எந்த ஊர் பிரியாணியையும் விட்டுவைப்பதில்லை. இன்று கல்யாண பிரியாணியையும் தேடி உண்ண ஆரம்பித்துவிட்டனர்.
அதென்ன கல்யாண பிரியாணி? இஸ்லாமிய இல்லத் திருமணங்களிலும், பண்டிகைகளின்போதும் இஸ்லாமியர் வீடுகளில் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படுவதுதான் இந்தக் கல்யாண பிரியாணி. அதுபோன்ற பிரியாணி இன்று சென்னைப் பிரியாணி கடைகளில் கிடைக்கத் தொடங்கிவிட்டது. அப்புறமென்ன, அதையும் வெளுத்துக்கட்ட வேண்டியதுதானே.