அலப்பறை பாதி; ஆடை பாதி! | ஈராயிரத்தில் ஒருவன்

(வருவான்)
(வருவான்)
Updated on
2 min read

சில நாள்களுக்கு முன் ‘A Character with no bad outfits' என்றொரு புது பதார்த்தம் இணையத்தில் சுற்றிக்கொண்டிருந்தது. அதாவது, ‘அட்டகாசமான ஆடைகளை மட்டுமே அணிந்துவரும் சினிமா கதாபாத்திரம்.’ சரி, நாமும் இதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தைச் சொல்வோமே என யோசிக்கத் தொடங்கியவுடன் நினைவடுக்குகளில் இருந்து சரிந்து விழுந்தன சில நினைவுகள்.

ரஜினி போட்ட சட்டை: `படையப்பா' படத்தில் கறுப்பு பேண்ட், கறுப்பு டி-ஷர்ட், அதன்மேல் பொத்தான்களைத் திறந்துவிட்டபடி ஒரு வெள்ளைச் சட்டையோடு மௌத் ஆர்கன் வாசித்துக்கொண்டு வருவாரே ஆறுபடையப்பன், அந்த உடையின் மீது சிறுவயதில் பித்துப் பிடித்துவிட்டது. வீட்டில் அந்த ஆறு படையப்பன் டிரெஸ் வேண்டுமென ஆறு நாள்கள் அடம்பிடிக்க, ஒரு டெய்லர் கடைக்கு அழைத்துகொண்டு போய் அளவெடுத்தார்கள். டெய்லரும் இன்முகத்தோடு அளவெடுத்துவிட்டு, ரசீது எல்லாம் எழுதிக் கொடுத்து, அடுத்த வாரம் வந்து வாங்கிக்கொள்ளச் சொன்னார்.

25 ஆண்டுகள் ஆகிவிட்டன, இப்போது என் அம்மாவிடம் கேட்டால்கூட, `இன்னும் தைச்சு முடிக்கலையாம். அடுத்த வாரம் வந்து வாங்கிக்கச் சொன்னாரு' என வார்த்தை மாறாமல் பதில் வரும். அதேபோல், சில படங்களில் தமிழகத்தின் தட்பவெட்பச் சூழலுக்குச் சற்றும் பொருந்திடாத, லெதர் ஜாக்கெட்களும் பேண்ட்டுகளும் நீளமான பூட்ஸ்களுமாக உலவிக் கொண்டிருப்பார் ரஜினி. குறிப்பாக, அந்த நீளமான பூட்ஸை நினைத்துப் பல நாள்கள் ஏங்கியிருக்கிறேன். கடைசியில் தார் சாலை அமைக்கும் தொழிலாளர்களின் கம் பூட்ஸை அணியும் அளவுக்கு நிலைமை முற்றிவிட்டது.

திருப்பதி கலாட்டா: `குத்து' படத்தில் சிம்பு, சட்டை ஸ்லீவைச் சுருட்டி மடித்து லேஸ் கொண்டு முடிச்சு போட்டிருப்பார். எனக்கோ ஷூ லேஸ் கிடைக்காமல் பம்பரம் விடப் பயன்படும் சிவப்புச் சாட்டையைச் சட்டையில் வைத்து தைத்து, அடுத்த நாளே சட்டையில் சிவப்புச் சாயம் ஏறியதைப் பார்க்கையில் கண்ணே கலங்கிவிட்டது. `தாஜ்மஹால்' படத்தில் பெல்ட்டுக்குப் பதிலாக பேண்ட்டில் கயிறு கட்டியபடி சுற்றுவார் மனோஜ். `அட, இது நல்லாருக்கே' என ஆர்வத்தில் சடம்பு கயிறுக்குப் பதிலாகக் கொச்சைக் கயிறைக் கட்டியதில் இடுப்புச் சுற்றிப் புண்ணாகி மருந்து தடவியது, இன்னும் ரணமாக மனதில் பதிந்திருக்கிறது.

`நீங்கள் முதல் முறையாகத் திரையரங்கில் பார்த்த அஜித் படம் எது?' என்கிற கேள்விக்கு ஒரு 2கே கிட், `திருப்பதி' எனப் பதில் சொல்லியிருந்தார். அதற்கு கீழே இன்னொரு 2கே கிட், `ப்ரோ, நீங்க எந்த ஊர்ல பார்த்தீங்கன்னு கேட்கல, எந்தப் படம் பார்த்தீங்கன்னு கேட்குறாங்க' எனத் `திருப்பதி' என்றோர் அஜித் படம் வந்ததே தெரியாமல் கலவரம் செய்துகொண்டிருந்தார். ஆனால், அந்தத் `திருப்பதி' படத்தைப் பார்த்துவிட்டுக் காலிலும் காலரிலும் நாய்பெல்ட்களை அணிந்துகொண்டு திரிந்ததை நினைத்தால் இன்றும் தர்ம சங்கடமாகத்தான் இருக்கிறது.

தீக்கு இரையான சட்டை: `பையா' படம் வந்த நேரம், ஹூட் வைத்த கட்டம் போட்ட சட்டைகள் சென்னை தி. நகரில் உள்ள சத்யா பஜாரில் விற்றுத் தீர்ந்தன. அந்த ஆண்டு தீபாவளிக்கு நாங்கள் நண்பர்கள் மொத்தமாகச் சென்று 12 வகையான வண்ணங்களில் சட்டையை அடித்துப் பேசி அள்ளிக்கொண்டு வந்தோம். அந்த 12 பேரில் ஒருவனுடைய அப்பா, `பையா' படத்தில் காஸ்டியூம் டிபார்ட்மெண்ட்டில் பணியாற்றியவர். சண்டைக் காட்சிகளில் பயன்படுத்தப்பட்ட ஒன் ப்ளஸ் காஸ்டியூம் ஒன்று அவரிடம் வந்துசேர, அது நண்பனின் வழியாக என்னிடம் வந்துசேர்ந்தது.

எப்போதும் அந்தச் சட்டையைப் போட்டுக்கொண்டு திரிகிறேன் என நான் பள்ளிக்குச் சென்றிருந்த நேரத்தில் அதைத் தீயிட்டுக் கொளுத்தியிருக்கிறார் என் அம்மா. இப்போது என் அம்மாவிடம் கேட்டால்கூட, `எனக்கு தெரியலையே அந்தச் சட்டை எங்கே போச்சுனு. பீரோல நல்லா தேடிப் பாரு' என வார்த்தை மாறாமல் பதில் வரும். கடைசியாக, `பிரேமம்' படத்தில் வரும் கறுப்புச் சட்டை, கரை வேட்டியுடன் முடிந்துப்போனது எங்கள் அத்தியாயம்.

90ஸ் கிட்களின் ஏக்கம்: இன்றைய 2கே கிட்கள், `மாரி' படம் வந்த புதிதில் பூப்போட்ட சட்டையாகப் போட்டுக்கொண்டு திரிந்தார்கள். விஜய் தனது படங்களின் இசை வெளியீட்டு விழாக்களுக்கு அணிந்துவரும் ஆடைகள்அவ்வளவு பிரபலமாகின்றன. வெளியிடங் களில் பிரபலங்கள் அணிந்துவரும் உயர் ரக ஆடைகளின், அச்சு அசலான நகல்கள் உடனடியாக சத்யா பஜாருக்கு வந்துவிடும். திரைக்குள் நடிகர்கள் அணிந்த ஆடைகளைத் திரைக்கு வெளியே இவர்கள் போட்டுக்கொண்டு திரிகிறார்கள்.

90'ஸ் கிட்கள் அதிகமாகக் கோடுகளும் கட்டங்களும் ஜியாமெட்ரிக் வடிவங்களும் கொண்ட சட்டைகளை அணிந்தார்கள். அதை கேஷூவல் உடைகள் எனச் சொல்லிக் கொணட போதும், அதுவும் ஃபார்மலான ஒன்றாகவே இருந்திருக்கின்றன. ஆனால், இந்தக் கால இளைஞர்கள் அணிகிற பூப்போட்ட சட்டைகளும் அனிமெ ஓவியங் களும் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட்களில் எந்த வரையறைக்கும் சிக்காத ஒருவிதச் சுதந்திரத்தன்மையும், விசாலமான கற்பனையும், மனம்மகிழ் வண்ணங்களும் நிரம்பியிருக்கின்றன.

இந்த அனிமெ டி-ஷர்ட்களுக்கு இடையே சில டாம் அண்ட் ஜெர்ரி, ஸ்கூபி டூ, டெக்ஸ்டர் டி-ஷர்ட்களை நீங்கள் காணலாம். அவர்கள் வேறு யாருமல்ல, இந்த நவீன உலகின் நெரிசலும் நெடியும் தாளாமல் மீண்டும் பால்யத்திற்குத் திரும்ப முயலும் 90'ஸ் கிட்கள்தான்.

- iamsuriyaraj@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in