பிரேக் அப் பாடம்: பிரிந்தும் பிரியாமலும்

பிரேக் அப் பாடம்: பிரிந்தும் பிரியாமலும்
Updated on
2 min read

ந்தக் காலத்தில் ஒரு காதல் உறவு முறிந்துபோனால் முறிந்ததுதான். இப்போது இருப்பதுபோல முன்னாள் காதலரை இன்ஸ்டாகிராமிலும் ஃபேஸ்புக்கிலும் வாட்ஸ்அப்பிலும் யாரும் தேடிக்கொண்டிருக்க மாட்டார்கள். அப்போது காதல் பிரிவு வலி நிறைந்ததாக இருந்தாலும் குழப்பமில்லாமல் இருந்தது. ஆனால், இன்றைய சமூக ஊடகக் காலத்தில், காதல் பிரிவு என்பது முழுமையாகச் சாத்தியமில்லாத ஒன்றாக மாறியிருக்கிறது.

உண்மையில் சமூக ஊடகங்கள் பிரிந்தவர்களை முழுமையாகப் பிரியவிடாமல் தடுக்கின்றன. முன்னாள் காதலர்கள் இடையே நிலவும் இந்தத் தெளிவின்மையும் தடுமாற்றமும் வாழ்க்கையில் அவர்கள் முன்னேறிச் செல்வதைத் தடுக்கும் அம்சங்களாகவும் உள்ளன. ஒரு காதல் உறவு நியாயமான காரணங்களால் முறிந்துபோகும்போது, அதை ஏற்றுக் கொள்வதுதான் சிறந்தது. அப்படி அல்லாமல் முன்னாள் காதலரின் நடவடிக்கைகளைச் சமூக ஊடகங்களில் பின்தொடர்ந்துகொண்டிருப்பது எந்த வகையிலும் ஆரோக்கியமான விஷயமல்ல. அதனால், முன்னாள் காதலர்களைக் கையாள்வதில் எல்லைகளை வகுத்துக்கொள்வது அவசியம்.

காதல் முறிவுக்குப் பிறகு, முன்னாள் காதலரைச் சமூக ஊடகங்களில் பின்தொடர்வதை நிறுத்திக்கொள்வது நல்லது. குறைந்தபட்சம் பிரிவுத் துயரத்திலிருந்து வெளியே வரும்வரையாவது, சமூக ஊடகங்களில் பின்தொடர்வதைத் தவிர்க்கலாம். ஏனென்றால், இதனால் உங்கள் நேரம் விரயமாவதைத் தவிர வேறு எந்த மாற்றமும் நடக்கப்போவதில்லை. ஒருவேளை, காதல் பிரிவு துயரத்திலிருந்து நீங்கள் முழுமையாக வெளியே வந்துவிட்டீர்கள் என்ற நம்பிக்கை வந்தவுடன், பரஸ்பரம் இருவரும் விரும்பினால், உங்கள் முன்னாள் காதலரைச் சமூக ஊடகங்களில் நட்பில் தொடரலாம். ஆனால், பொதுவாக முறிந்துபோன காதலுக்குச் சமூக ஊடகங்கள் என்றுமே எதிரிதான் என்பதை நினைவில் வைத்துக்கொள்வது நல்லது.

காதல் முறிவுக்குப் பிறகு, தேவை இல்லாமல் முன்னாள் காதலருடன் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். உண்மையிலேயே முக்கியமான விஷயமாக இருந்தால் மட்டும் பேசினால் போதும். உங்கள் முன்னாள் காதலர் நீங்கள் பேசுவதை விரும்பாதபட்சத்தில், அந்த முயற்சியை எடுத்து உங்களை நீங்களே காயப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. பேச வேண்டும் என்று தோன்றும்போது உங்கள் கவனத்தை வேறு ஏதாவது உங்களுக்குப் பிடித்த விஷயங்களின் பக்கம் திருப்புங்கள். காதல் முறிவுக்குப் பிறகு, முன்னாள் காதலருடன் பேசுவது உங்களுக்குக் கவலையளிக்கும் விஷயமாக இருந்தால், அதைத் தவிர்த்துவிடுங்கள்.

முன்னாள் காதலருக்கும் உங்களுக்கும் பொதுவான நட்பு வட்டம் இருக்கும்பட்சத்தில் அவரைச் சந்திப்பதை உங்களால் தவிர்க்க முடியாது. அதனால், முன்னாள் காதலரைச் சந்திக்கவே கூடாது என்பதற்காக நட்பு வட்டத்திலிருந்து விலக வேண்டிய அவசியமில்லை. நண்பர்களின் நிகழ்ச்சிகளில் முன்னாள் காதலரை எதிர்கொள்ளும்போது, சாதாரண நலம் விசாரிப்புகளுடன் அவரைக் கடந்துவிடுவது சிறந்தது. இதனால், நீங்கள் நட்பு வட்டத்திலிருந்து வெளியேறுவதைத் தவிர்க்கலாம்.

காதல் முறிவுக்குப் பிறகு, முன்னாள் காதலரிடம் உங்கள் சுக துக்கங்களைப் பகிர்வதற்கு முயல வேண்டாம். ஏனென்றால் அது உங்கள் வலியை அதிகரிக்க மட்டுமே செய்யும். காதல் முறிவின் சில காலத்துக்குப் பிறகு, உங்கள் முன்னாள் காதலருடன் உங்களால் நட்புப் பாராட்ட முடியும். ஆனால், அவரிடம் உங்கள் உணர்வுநிலைகளைப் பகிர்ந்துகொள்வது தேவையில்லாத குழப்பங்களையே உருவாக்கும். ஒரு காதல் உறவு முறிந்துவிட்டால், அந்த உறவு அதுவரை அளித்துவந்த உணர்வுநிலை ஆதரவும் முறிந்துவிட்டதாகத்தான் அர்த்தம்.

இந்த அம்சங்களையெல்லாம் புரிந்துகொண்டால், காதல் பிரிவு துயரத்திலிருந்து வெளியேறுவது குழப்பமில்லாமல் இருக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in