

இந்தக் காலத்து இளைஞர்கள், யுவதிகளைப் பற்றி எப்படி எழுத ஆரம்பிக்கலாம் என்று எவ்வளவோ அடித்து, திருத்தி, எழுதிப் பார்த்தும் ஒன்றும் விளங்கவே இல்லை. ஏனெனில், நாம் பேசவிருக்கும் உலகம் அப்படியானது. புத்தாயிரத்து இளைஞர்களின் உலகம்.
இவர்களின் உலகமே தனிதான். அதிகாலை 4 மணிக்கு புளியந்தோப்பு பிரியாணியில் தொடங்கி நள்ளிரவு 2 மணிக்கு பன், பட்டர், ஜாமில் முடிகிற உலகம். தமிழ்ரஸ்டர் பால் டப்பாவின் அதிரடியில் ஆரம்பித்து யுவனின் அப்பா இசை மடியில் முடிகிற உலகம். விதவிதமான ரீல்ஸில் தொடங்கி பிரேகிங் நியூஸில் முடிகிற உலகம். ஆனால், அப்படி ஆரம்பித்து இப்படி முடிவதற்கு இடையில்தான் என்னென்னவோ நடந்துவிடுகின்றன.
ஆம், ‘காலை எழுந்தவுடன் ‘டிவோஷனல்’ அக்கா, பின்பு ‘எனர்ஜி’ கொடுக்கும் ஜிம் அக்கா, மாலை முழுவதும் ‘டெய்லர்’ அக்கா என்று வழக்கப்படுத்திக்கொள் மக்கா’ என உல்டாவாக டைம்-டேபிள் போடுகிறார்கள். ரயில் நிலையங்களின் அடையாளமான மஞ்சள் ஊர்ப் பலகைகளின் கீழே, நாங்கள்தான் இந்த ஊருக்கே அடையாளம் என ஸ்லோ-மோஷனில் ஒவ்வொரு ஸ்டேஷனிலும் யாராவது ரீல்ஸ் விட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
பழைய ‘இந்திய’னைப் பார்த்து பெருமூச்சுவிடும் ஒரு 2கே கிட், ‘சுஜாதா மேடம்’ மட்டும் உயிரோடு இருந்திருந்தால், `இந்தியன் 2' சிறப்பாக வந்திருக்கும் எனக் கண்ணீர் சிந்துகிறான். உடனே, சுஜாதா என்பவரின் இயற்பெயர் ரங்கராஜன். அவர் சுஜாதா மேடம் இல்லை, சுஜாதா சார் எனப் பதற்றமாகிறது இணையத் தமிழ் சமூகம். `மன்மதராசா மாதிரி வின்டேஜ் பாட்டுங்க நிறைய கேட்பேன் ப்ரோ' என இன்னொரு 2கே கிட், காலச்சக்கரத்தில் தொங்கி விளையாட, பதறிப்போகும் மக்கள் அவனை இறக்கிவிட்டுவிட்டுத்தான் அடுத்த வேலையைப் பார்க்கிறார்கள்.
நல்லவேளை, எம்.எஸ். தோனி கேப்டனாக இருந்த காலத்தில் பேட் கம்மின்ஸ் கேப்டனாக இல்லை. இருந்திருந்தால், தோனி எல்லாம் எப்பவோ காலி எனப் போகிற போக்கில் போஸ்ட்டைத் தட்டியிருப்பார்கள் ஈராயிரக் குழவிகள். ரிக்கி பான்ட்டிங்கை நினைத்து நாம் பரிதாபப்படும் நிலை வரும் என எந்த இந்தியனும் நினைத்துகூடப் பார்த்திருக்க மாட்டான்.
மதன் கௌரி, அமலா ஷாஜி, டிடிஎஃப் வாசன், கேஜிஎஃப் விக்கி, பீட்டர் கே, ரசிகர்களின் ரசிகன் மணி என இந்த உலகில் யார் யாருக்கோ 20, 30 அடி கட்-அவுட்களும் 50 லிட்டர் பால் அபிஷேகங்களும் நாம் எதிர்பாராத அளவுக்கு நடந்து கொண்டிருக்கின்றன. நம் ஊர் விஜய், அஜித் ரசிகர்கள் சண்டையெல்லாம் உலகம் அறிந்தது. இங்கே, கவின், மணிகண்டன் ரசிகர்கள் சண்டை போட்டுக்கொண்டிருப்பதை நீங்களெல்லாம் அறிவீர்களா? இவற்றையெல்லாம் உற்சாகமாக நடத்திக்கொண்டிருக்கிறது 2கே கிட் சமூகம்.
இவற்றையெல்லாம் படித்ததுமே லேசாகத் தலை கிறுகிறுத்திருக்கும். கவலை வேண்டாம். நான் பார்த்ததிலேயே இதுதான் மோசமான பேட்ச் என வருடா வருடம் ஆசிரியர்கள் அலுத்துக்கொள்வது போல, நாமும் நமது அடுத்த தலைமுறையைக் கண்டு வருத்தப்படுகிறோம். ஒரு காலத்தில் நாம் என்னவெல்லாம் செய்தோமோ, அதையேதான் இந்தக் காலத்தில் இவர்கள் வேறு மாதிரி செய்து கொண்டிருக்கிறார்கள். சரி, இவர்கள் ஏன் இப்படிச் செய்கிறார்கள், இதற்கு என்ன காரணம் எனத் தேடி அலைந்தால், ஆயிரம் ஆராய்ச்சிக் கட்டுரைகள் உங்களுக்குக் கிடைக்கலாம்.
ஆனால், அப்படிக் கணிதமும், அறிவியலுமாக நம் அடுத்த தலைமுறையைப் புரிந்துக்கொண்டு நாம் என்ன செய்யப்போகிறோம். அவர்களுடன் வாழ்ந்து அனுபவித்து, ரசித்து, புரிந்துக்கொள்வதுதானே சரியாக இருக்கும். ஆக, என்னுடைய வாழ்க்கை அனுபவங்களிலிருந்து இவர்களைப் புரிந்துக்கொள்ளும் முயற்சிதான், இந்த ‘ஈராயிரத்தில் ஒருவன்’ தொடர்.
‘ஈராயிரத்தில் ஒருவன்’ தொடரை எழுதும் ப.சூரியராஜ் பத்திரிகையாளர். சினிமாவில் இணை இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். ‘வெப் சீரிஸ்’ ஒன்றை இயக்குகிற பணியில் இருக்கிறார். சில படங்களுக்குத் திரைக்கதையும் எழுதி வருகிறார். எல்லாவற்றையும்விட இவர் ஒரு 90'ஸ் கிட். தம்பி...
- iamsuriyaraj@gmail.com