

செ
ன்னையின் பூர்வகுடிகள் அதிகம் வசிக்கும் பகுதியாகக் கருதப்படுகிறது வட சென்னை. அப்பகுதி தொழிலாளர்களை மையப்படுத்தி ‘உழைக்கும் சனங்க’ என்ற பெயரில் ஒளிப்படக் கண்காட்சி காசிமேடு கடற்கரையில் அண்மையில் நடைபெற்றது.
சென்னையின் வரலாறு அடுத்த தலைமுறையினருக்கு சரியாக சொல்லப்பட வேண்டும், சிறுகுறு தொழிலாளர்களின் வாழ்வு ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்கிற நோக்கில் ‘மெட்ராஸ் மரபினர்’ என்ற அமைப்பு இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தது.
இந்தக் கண்காட்சியில் வட சென்னையைச் சேர்ந்த பல்வேறு தொழிலாளர்களின் வாழ்க்கையையும் அவர்கள் தங்கள் தொழிலில் பயன்படுத்தும் உபகரணங்களையும் காட்சிப்படுத்தியிருந்தனர்.
ஒளிப்படக் கண்காட்சி மட்டுமல்லாது, ‘ஓசோன் அவெர்னஸ்’ என்கிற அமைப்புடன் இணைந்து கடற்கரை பாறைகளில் சென்னையின் வரலாற்றுச் சின்னங்களையும் வரைந்திருந்தனர்.
இந்தக் கண்காட்சியின் நோக்கம் என்ன என்று அதன் அமைப்பாளர் சுகுமாரிடம் கேட்டோம். “அடுத்த தலைமுறையினருக்கு வாய்வழிச் செய்திகளால் வரலாற்றை கொண்டு செல்ல முடியாது. அதற்குரிய ஆதாரங்களுடன் ஒரு செய்தியை கொண்டு செல்லவே வட சென்னை வாழ் தொழிலாளர்களின் வாழ்க்கையையும் அவர்களுடைய உணர்வுகளையும் ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தியிருக்கிறோம்” என்கிறார் சுகுமார்.
- சு. அருண் பிரசாத்