

தலைநகர் சென்னையில் ‘பேச்சிலர்களின்’ சொர்க்கபுரி எது? திருவல்லிக்கேணிதான் என்று உதடு உடனே உச்சரிக்கும். வாழ வைக்கும் நகரான சென்னையில் இளைஞர்களை ஆரத்தழுவி அரவணைத்துக் கொள்ளும் இடம் திருவல்லிக்கேணிதான். ஆம், வாழ்வாதாரத்துக்காகச் சென்னையைத் தேடிவரும் பலதரப்பட்ட இளைஞர்களுக்கும் திருவல்லிக்கேணியில் உள்ள ‘மேன்சன்’கள் ஒரு வேடந்தாங்கலைப் போல.
மேன்சனைத் தேடி... சென்னையில் மேன்சனில் தங்குபவர்கள் எல்லாருமே பேச்சிலர்கள் கிடையாது. ஆனால், பேச்சிலர்கள் நாடிவரும் இடமாக மேன்சன்களே இருக்கின்றன. ஏனெனில், சென்னையில் ஓர் இளைஞருக்கு வீடு கிடைப்பது என்பது குதிரைக்கொம்பு. அதனால்தான் படித்து முடித்துவிட்டு வேலைக்கோ அல்லது வேலை தேடியோ சென்னைக்கு வருவோருக்கு, எங்கு தங்குவது என்கிற கேள்வி தலைவலியாக இருக்கும்.
ஏற்கெனவே நண்பர்கள் அறை எடுத்துத் தங்கியிருந்தால், அங்கு ஐக்கியமாகிவிடலாம். உறவினர்கள் வீடு என்பது பலருக்கும் ‘பிரைவசி’யைப் பாதிக்கும் என்பதால், வெளியே தங்கவே விரும்புவார்கள். இப்படிப்பட்டவர்களை வரவேற்று அரவணைத்துக்கொள்கின்றன மேன்சன்கள்.
சிறிய இடமாக இருந்தாலும் குறைந்த வாடகை, இரவில் தூங்குவதற்கும், பகலில் குளித்துவிட்டு வேலைக்கோ வேலை தேடிச் செல்வதற்கோ ஓரிடம் இளைஞர்களுக்கு வேண்டும். அந்தத் தேவையை மேன்சன்கள் பூர்த்திசெய்கின்றன. சென்னையில் ஒண்டுக்குடித்தனம் வீடுகளைப் பலரும் பார்த்திருக்கக்கூடும்.
மேன்சன்களும் ஒண்டுக்குடித்தனம் போன்றவைதான். வெறும் பத்துக்குப் பத்து என்கிற அளவில் உள்ள ஒரு சிறிய அறைதான் மேன்சன்களில் தங்கும் இளைஞர்களின் கூடு. இளைஞர்களுக்கே உரிய அழுக்கேறிய துணிகள், ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் தின்பண்டங்கள், பல நாள்களாகப் பெருக்காத அறை, கலைந்து கிடக்கும் படுக்கை விரிப்பு, கட்டிலை ஆக்கிரமித்திருக்கும் பெட்டி, கணினி, மூலையில் சிதறிக் கிடக்கும் வார இதழ்கள், மதுபாட்டில்கள் என அந்தச் சிறிய அறையும் அலங்கோலமாகத்தான் காட்சியளிக்கும். என்றாலும், அதுவே மேன்சன் வாழ்க்கையின் அடையாளம்.
திருவல்லிக்கேணி மேன்சன்கள்: சென்னை மாநகரைச் சுற்றிப் பல்வேறு இடங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேன்சன்கள் உள்ளன. இதில் திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் பகுதிகளில் மட்டும் 250க்கும் மேற்பட்ட மேன்சன்கள் இருக்கின்றன. இந்தப் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு தெருவுக்குச் சென்றாலும் மேன்சன்கள் இருப்பதைக் காணலாம். 100, 150க்கும் மேற்பட்ட சிறிய அறைகள் கொண்ட மேன்சன்கள் ஏராளம் உண்டு.
நீளவாக்கில் செல்லும் சில மேன்சன்கள், ஒரு தெருவிலிருந்து இன்னொரு தெரு வரைகூட நீண்டிருப்பதும் உண்டு. சராசரியாக இரண்டு மாடிகள் கொண்ட மேன்சன்கள் அதிகம் உள்ளன. ஒவ்வொரு மாடியிலும் தலா இரண்டு அல்லது மூன்று பொதுக் கழிப்பறைகள், குளியலறைகள் இருக்கும். அதிகாலை 4 மணிக்குக் கேட்கத் தொடங்கும் குளியல் சத்தம் மதியம் வரை கேட்டுக் கொண்டேயிருக்கும்.
காலை 6 மணி முதல் 8 மணிக்குள் கழிவறையைப் பயன்படுத்த வரிசையில் காத்திருக்கும் நிலையும் ஏற்படும். முன்பெல்லாம் பல மேன்சன்களில் அயர்ன் பாக்ஸ், தொலைக்காட்சி போன்றவற்றைப் பயன்படுத்த அனுமதி இருக்காது. எனவே, காலை வேளையில் மேன்சன்களைச் சுற்றியிருக்கும் அயர்ன் வண்டிக் கடைகள் பரபரப்பாகவே காட்சியளிக்கும்.
தங்குவதற்கு இடம் கிடைத்தால் மட்டும் போதுமா? உணவுக்கு எங்கு போவது என்கிற கேள்விக்கு, திருவல்லிக்கேணி - சேப்பாக்கத்தில் தேவை இருக்காது. மேன்சனை விட்டுக் கீழே இறங்கி வந்தால் தேநீர் கடைகள்தான் நம்மை வரவேற்கும். அதுபோலவே மேன்சன்களைச் சுற்றி சிறியது, பெரியது என ஏராளமான மெஸ்கள், ஹோட்டல்கள் இருக்கின்றன.
அவரவர் பொருளாதார வசதிக்கேற்ப உணவு வகைகளை உண்பதற்கு வாய்ப்புகளும் உள்ளன. இங்கு ரூ. 5க்கும் இட்லி; ரூ.40க்கும் இட்லி கிடைக்கும். பெரும்பாலான மெஸ்களில் கணக்கு வைத்து, மாதந்தோறும் பணம் செலுத்தும் இளைஞர்களே அதிகம். இந்த இளைஞர்களை நம்பி வீட்டிலேயே உணவுத் தொழில் செய்வோரும் இங்கு இருக்கவே செய்கிறார்கள்.
இவர்கள் அறையைத் தேடிவந்து அன்பாக உணவை அளித்துவிட்டுச் செல்வார்கள். பெரும்பாலான இளைஞர்களுக்கு ஆந்திரா மெஸ்தான் ஆசீர்வதிக்கப்பட்ட இடம். லிமிட் இல்லாமல் இங்கு சாப்பிடலாம் என்பதால், இளைஞர்களின் வயிறை நிறைத்து, பாக்கெட்டைக் காக்கும் ஆந்திரா மெஸ்தான் ஆபத்பாந்தவன்.
இருக்கும் சிறிய அறையில் ஊரிலிருந்து வரும் நண்பரையோ, உறவினரையோ ‘கெஸ்ட்’ டாக (அதற்குத் தனியாகக் கட்டணம்) அனுமதிக்காத அறைகளே மேன்சனில் இல்லை என்கிற அளவுக்கு ‘கெஸ்ட்’கள் படையெடுப்பும் மேன்சன்களில் நிறையவே இருக்கும். மேன்சனின் வரவேற்பறையில் இருக்கும் ஒற்றை டிவியைப் பார்க்க அவ்வளவு கூட்டம் இருக்கும். அதுவும் ஐபிஎல் நடக்கும் காலத்தில் சொல்லவே வேண்டாம்.
இளைஞர்களின் வேடந்தாங்கல்: பறவைகள் கூடடைவதைப் போல மாலை 6 மணிக்கு மேல் ஒவ்வொரு மேன்சனிலும் இளைஞர்கள் அந்தச் சிறிய அறையைச் சொர்க்கமாகக் கருதி வந்து சாயத் தொடங்கிவிடுவார்கள். இரவில் அருகருகே உள்ள இளைஞர்கள் ஓர் அறையில் கூடி அரட்டை அடிப்பது, வெளியிலிருந்து உணவை வாங்கி வந்து பகிர்ந்து உண்பது, சிகரெட், மது என எதற்கும் பஞ்சமிருக்காது. கூப்பிடும் தூரத்தில் உள்ள மெரினா பீச்சுக்கு நண்பர்கள் புடைசூழ நடந்து சென்று, இரவை உருக்கும் நிலா வெளிச்சத்தில் மணல் பரப்பில் படுத்துக்கொண்டு கதைகள் பேசியதைக் கடந்து செல்லாத மேன்சன்வாசிகளே இருக்க முடியாது.
போரடித்தால் அருகில் இருக்கும் தேவி, சாந்தி (இப்போது இல்லை), கேசினோ, அண்ணா, உட்லண்ட்ஸில் தஞ்சமடைந்துவிடலாம். இரவு நேரத்தில் விளக்கை அணைத்து படுத்த பிறகும் தூக்கம் வரவில்லையென்றால், ஏதோ ஓர் அறையிலிருந்து கேட்கும் ‘இரவின் மடி’ பாடல்கள் நம்மைத் தாலாட்டித் தூங்க வைத்துவிடும்.
நிச்சயமாக மேன்ஷன்வாசிகளின் உலகம் வேறு மாதிரியானது. மேன்சனில் தங்கியிருக்கும் ஒவ்வொருவருக்குள்ளும் ஆயிரம் கதைகள், கஷ்டங்கள் உண்டு. ஆனால், அவற்றையெல்லாம் முகத்தில் காட்டிக்கொள்ளவே மாட்டார்கள். மேன்சன் என்றாலே எப்போதும் ஜாலியாக இருந்த முகங்கள் மட்டுமே ஞாபகத்துக்கு வரும். பள்ளி, கல்லூரிக்குப் பிறகு சாதி மதம், ஏற்றத்தாழ்வு இன்றி எல்லாரும் பழக வாய்ப்பைத் தரும் மேன்சன்கள் விசித்திரமானவை. மேன்சனில் வாழ்ந்தவர்களுக்குத்தான் அது ஒரு சொர்க்கபுரி என்பது புரியும்.