

தமிழ் சினிமாவில் ‘ரவுடி பேபி’ பாடல் மூலம் பிரபலமானவர், பாடகி தீ என்கிற தீட்சிதா. மெலடி, ‘குத்து’ என வித்தியாசமான இசையில் தனது குரலைப் பொருத்திப் பாடும் பாடகர், பாடலாசிரியர், சுயாதீன இசைக் கலைஞர், பாடல் தயாரிப்பாளர் எனப் பல விஷயங்களில் ஆர்வத்துடன் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவர்.
சினிமாவும் சுயாதீன இசையும்: இலங்கை யாழ்ப்பாணத்தைப் பூர்விகமாகக் கொண்ட தீ, ஆஸ்திரேலி யாவில் வளர்ந்தவர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் மகள் இவர். அந்த வகையில் ‘பீட்சா 2’ திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
தொடர்ந்து சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவான ‘ஏய் சண்டக்காரா’, ‘உசுரு நரம்புல’ (இறுதிச்சுற்று), ‘அன்பரே..’ (குலுகுலு), ‘மாமதுர..’ (ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்) போன்ற பாடல்களைப் பாடி ஹிட் அடித்தார். ஏ.ஆர் ரஹ்மான், யுவன்சங்கர் ராஜா, ஜி.வி பிரகாஷ் குமார், அனிருத் என முன்னணி இசையமைப்பாளர்களோடும் பணியாற்றியுள்ள தீ, சுயாதீன இசை உருவாக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
2021 இல் யூடியூபில் வெளியான ‘எஞ்சாயி எஞ்சாமி...’ பாடல் சர்வதேச அளவில் வைரலானது. சந்தோஷ் நாராயணன் இசையில், ‘தெருக்குரல்’ அறிவின் வரிகளில் உருவான இந்தப் பாடலைப் பாடிய தீக்குத் தனி அடையாளம் கிடைத்தது.
யூடியூபில் மட்டும் 40 கோடிக்கும் அதிகமானப் பார்வை யாளர்களைக் கொண்ட இந்தப் பாடல், சினிமா அல்லாத பாடல்களில் தனி இடத்தைப் பிடித்தது. இந்தப் பாடலை அடுத்து 2023இல் பாடகர் விஜய் நரேனின் இசையில் ‘ஏதோ மாயம்...’ என்கிற பாடலைப் பாடினார் தீ.
சில மாத இடைவெளிக்குப் பிறகு 2024 மே மாதம் ‘தீ’ என்கிற யூடியூப் அலைவரிசையைத் தொடங்கினார். சுயாதீன இசையில் கவனம் செலுத்தப் போவதாகத் அறிவித்த அவர், கடந்த இரண்டு மாதங்களில் ‘Can’t you stay a little longer’, ‘I wear my roots like a medal’ என இரண்டுப் பாடல்களை எழுதி, இசையமைத்து, பாடி தனது யூடியூப் அலைவரிசையில் வெளியிட்டுள்ளார். இதுவரை அவர் பாடிய பாடல்களிலிருந்து சற்று வேறுபடும் இந்த இரண்டு பாடல்களையும் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார் தீ.
வேரைத் தேடி... வெவ்வேறு ஊர்களிலுள்ள ‘தூரத்து’ காதலர்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் வகையில் ‘Can’t you stay a little longer’ என்கிற பாடல், காதலனைப் பிரிந்து வாடும் காதலியின் வருத்தத்தைப் பதிவுசெய்யும் விதமாக உருவாக்கப்பட்டது. இந்தப் பாடலை லட்சக்கணக் கானோர் பார்த்துள்ளனர். வழக்கமாக இந்திய சுயாதீன இசைப் பாடல்களைப் போல அல்லாமல், மேற்கத்திய இசைப் பாடல்களின் சாயலில் இந்தப் பாடல் உருவாக்கப் பட்டுள்ளது.
ஒரு காதல் பாடலை அடுத்து முற்றிலும் மாறுபட்ட கருத்தைப் பிரதிபலிக்கும் பாடலையும் தீ வெளியிட் டுள்ளார். ‘I wear my roots like a medal’ என்கிற பாடலில் தனது சொந்த மண்ணான யாழ்ப்பாணப் பகுதி மக்களின் வாழ்க்கையைப் பற்றி எழுதியுள்ளார். ‘தவிர்க்க முடியாத சமூக சிக்கல்களால் அவரவர் சொந்த ஊரைவிட்டு வெளிநாடு, வெளி ஊர்களில் வசிப்பவர்களுக்கு இந்தப் பாடல் அர்ப்பணிப்பு’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதில் இடம்பெயர்வு, சுதந்திரம், அடையாளம், பண்பாடு, மீட்டெடுத்தல், நாடு திரும்புதல் போன்றவற்றைப் பற்றி தீயின் பாடல் பேசுகிறது. ‘நான் அகப்பட்டிருந்தேன்... மறுக்கப்பட்டு நெடுநாளாகத் தொலைந்ததாக உணர்ந்தேன்’, ’ ‘கடந்தகாலம் என் உடலோடு, எதிர்காலம் இனி என் மனதோடு’ போன்ற வரிகள் இடம் பெயர்ந்தோரின் வலிகளைப் பேசுகின்றன. ‘என் சொந்த மண்ணின் அடையாளத்தை ஒரு பதக்கம்போல அணிகிறேன்’ என்பதை அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கிறார் தீ.
இந்தப் பாடலின் வரிகள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தாலும் உள்ளூர் இசை மெட்டில் இயற்றப்பட்டிருப்பதால் தமிழ் இசையில் ஓர் ஆங்கிலப் பாடல் போல ஒலிக்கிறது. ‘ஜாக்ஃப்ரூட் ஆல்பம்’ என்கிற இசைத் தொகுப்பின் முதல் பாடலாக இது வெளியாகியுள்ளது. பாடல் வரிகள் எழுதி, பாடி தீ தயாரிக்கும் இந்த இசைத் தொகுப்பின் அடுத்தடுத்த பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளன.
தீயின் காணொளியைப் பார்க்க: https://shorturl.at/4uiQv