

சென்னையில் ‘போட்டோ வாக்’, ‘ஹெரிடேஜ் வாக்’ போன்ற நடைகளுக்குப் பஞ்சமில்லை. நகரின் பெருமையை அறிய இதுபோன்ற நடைகளில் பங்கேற்பவர்கள், தாங்கள் பதிவு செய்யும் ஒளிப்படங்களைச் சமூக வலைதளங்களில் ஆவணப்படுத்தவும் தவறுவதில்லை. அந்த வகையில் இன்ஸ்டகிராமில் ‘ஸ்ட்ரீட்ஸ் ஆஃப் சிங்காரச் சென்னை’ என்கிற பக்கத்தில் பதிவுசெய்யப்படும் ‘போட்டோ வாக்’ ஒளிப்படங்கள் சென்னை மாநகரின் பிரம்மாண்டத்தை உலகுக்கு உணர்த்திவருகின்றன.
உதித்த யோசனை: வந்தாரை வாழ வைக்கும் சென்னையைப் பிடிக்காத வெளியூர் ஆள்களே இருக்க முடியாது. வெவ்வேறு ஊர்களிலிருந்து படிப்பு, வேலை என வாழ்வாதாரத்துக்காகச் சென்னைக்கு வருவோரை வாரி அரவணைத்துக் கொள்ளும் ஊர் இது. அதனால்தான், வெளியூரிலிருந்து வந்தவர்களும் சென்னையைத் தங்கள் சொந்த ஊரைப் போல கொண்டாடுகிறார்கள். ‘ஸ்ட்ரீட்ஸ் ஆஃப் சிங்காரச் சென்னை’ என்கிற பெயரில் இன்ஸ்டகிராமில் சென்னையின் படங்களைப் பதிவிடத் தொடங்கிய 31 வயதான சார்லஸின் சொந்த ஊரும் சென்னை அல்ல, மதுரை. இவருடன் சேர்ந்து பயணிக்கும் 3 இளைஞர்களும்கூட சென்னையைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஆனால், சென்னையின் மூலை முடுக்குகளெல்லாம் பயணித்து ஒளிப்படங்களை எடுத்து, அவற்றைப் பதிவிட்டும் ஆவணப்படுத்தியும் வருகிறார்கள்.
இதற்கான யோசனை எப்படி உதித்தது? “எனக்கு போட்டோகிராபி மீது மிகுந்த ஈடுபாடு உண்டு. நான் பெங்களூருவில் பணியாற்றியபோது ‘போட்டோ வாக்’ செல்வது வழக்கம். அவற்றைச் சமூக வலைதளங்களில் பதிவிடவும் செய்வோம். சென்னைக்கு வந்த பிறகு பல ‘போட்டோ வாக்’ குழுக்கள் சமூக வலைதளங்களில் செயல்படுவது என் கவனத்துக்கு வந்தது. ஆனால், இன்ஸ்டகிராமில் சென்னையை மையப்படுத்திய ‘போட்டோ வாக்’ குழுக்கள் இல்லாததைக் கண்டேன். அதன் தொடர்ச்சியாகவே ‘ஸ்ட்ரீட்ஸ் ஆஃப் சிங்காரச் சென்னை’ என்கிற பக்கத்தை இன்ஸ்டகிராமில் உருவாக்கினேன்” என்கிறார் சார்லஸ்.
விருப்பமான பாரீஸ்: ஒளிப்படங்களுக்கும் காணொளிகளுக்கும் முக்கியத்துவம் தரும் இன்ஸ்டகிராமில் சார்லஸும் அவருடைய நண்பர்கள் மட்டும் சென்னைப் பற்றிய படங்களைப் பதிவிடுவதில்லை. இந்தப் பக்கத்தைப் பின்தொடரும் யார் வேண்டுமானாலும் சென்னையில் எடுக்கும் ஒளிப்படங்களைப் பதிவிட முடியும். அப்படிப் பதிவிடுவோரோடு சேர்ந்து சார்லஸும் தொடர்ந்து சென்னை ஒளிப்படங்களைப் பதிவிட்டு வருகிறார். சென்னையில் ஒளிப்படங்கள் எடுப்பதற்காகவே அவ்வப்போது வெளியே கிளம்பிவிடுகிறார்கள் சார்லஸும் அவருடைய நண்பர்களும்.
“ஏழு ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் இப்பக்கத்தை உருவாக்கினேன். அப்போது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ‘போட்டோ வாக்’ செல்வது வழக்கம். இடையில் கரோனா தொற்று வந்த பிறகு அது குறைந்து போனது. இப்போது நேரம் கிடைக்கும்போது ‘போட்டோ வாக்’ செல்கிறேன். எந்தப் பகுதிக்குச் சென்றால் நல்ல ஒளிப்படங்கள் கிடைக்கும் என்பதைத் திட்டமிட்டுதான் ‘போட்டோ வாக்’ செல்வோம்.
அப்படிச் செல்லும் வழியில் ஒரு இடத்தை மிச்சம் வைக்காமல் ஒளிப்படங்கள் எடுத்துவிட்டு வந்துவிடுவோம். சில நேரம் ஒரு மையக்கரு சார்ந்து ‘போட்டோ வாக்’ செல்வதும் உண்டு. சென்னையில் எனக்கு பாரீஸ் கார்னரைச் சுற்றியுள்ள இடங்களில் ஒளிப்படங்கள் எடுக்க மிகவும் பிடிக்கும். இன்னமும் பழமை மிச்சமிருக்கும் ஒரு பகுதியாக இது இருப்பதால் இங்குள்ள இடங்களையும் மக்களையும் ஒளிப்படம் எடுக்க மிகவும் விரும்புவேன்” என்கிறார் சார்லஸ்.
சென்னையின் பெருமை: இந்த இணைய யுகத்தில் சமூக வலைதளங்கள் சம்பாதிக்கவும் வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகின்றன. அந்த வகையில் ’ஸ்ட்ரீட்ஸ் ஆஃப் சிங்காரச் சென்னை’ பக்கத்தில் இடம்பெறும் ஒளிப்படங்ளை விலை கொடுத்து கேட்பவர்களும் இருப்பதாகச் சொல்லும் சார்லஸ், “சிலர் சென்னையை ஒளிப்படங்கள் எடுத்து தரும்படி வேலையும் தருகிறார்கள்” என்கிறார். அதனால்தான் வாழ வைக்கும் ஊர் என்கிற பதத்துக்கு நெருக்கமாக இருக்கிறது சென்னை.
படங்கள் உதவி: ஸ்ட்ரீட்ஸ் ஆஃப் சிங்காரச் சென்னை இதன் பக்கத்தைக் காண: https://rb.gy/o1797l