சமூக ஊடகத்தில் ஊசலாடும் காதல்!

சமூக ஊடகத்தில் ஊசலாடும் காதல்!
Updated on
1 min read

ன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் அன்றாட வாழ்க்கைச் சம்பவங்கள் தொடர்பான படங்களைப் பகிர்ந்துகொள்ளும் பழக்கம் காதலர்கள், தம்பதிகளிடையே பெருகிவருகிறது. தாங்கள் மகிழ்ச்சியான வாழ்வு வாழ்கிறோம் என்று காட்டிக்கொள்ள பெரும்பாலான காதலர்கள் விரும்புவதால்தான் இப்படியான படங்களை அவர்கள் பகிர்ந்துகொள்கிறார்கள்.

தங்களுடைய காதல் வாழ்க்கை, திருமண வாழ்க்கை போன்ற அந்தரங்கமான தருணங்களின்போது எடுக்கப்பட்ட படங்களைப் பேரார்வத்துடன் பகிர்ந்துகொள்கிறார்கள். அத்துடன், தங்களுடைய மனநிலையையும் பரஸ்பர அன்பையும் வெளிப்படுத்தும் வகையிலான படங்களையும் நிலைத்தகவல்களையும் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்கிறார்கள்.

தங்களை மகிழ்ச்சியானவர்களாகச் சமூக ஊடகங்களில் காட்டிக்கொள்ளும் காதலர்களும் தம்பதிகளும் உண்மையில் மகிழ்ச்சியானவர்களாக இருக்கிறார்களா? இல்லை என்றே பல உளவியல் ஆய்வுகள் சொல்கின்றன. ஏனென்றால், மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழும் காதலர்களும் தம்பதிகளும் தங்களுடைய உறவை வெளியுலகம் அங்கீகரிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை என்கின்றன ஆய்வு முடிவுகள்.

மகிழ்ச்சியாக இருக்கும் காதலர்கள், தங்களுடைய உறவைப் பற்றிச் சமூக ஊடகங்களில் வாயே திறப்பதில்லையாம். மகிழ்ச்சியற்ற வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்தாம் மெய்நிகர் உலகத்தில் தங்களை மகிழ்ச்சியானவர்களாகக் காட்டிக்கொள்வதாகச் சொல்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். யாரெல்லாம் இப்படிப் பகிர்கிறார்கள்?

சமூக ஊடகங்களில் அதிகமான ஒளிப்படங்களையும் நிலைத்ககவல்களையும் பகிரும் காதலர்கள் உண்மையில் தங்களுடைய உறவில் பாதுகாப்பின்மையை உணர்பவர்களாக இருக்கிறார்கள்

சமூக ஊடகங்களில் தங்களுடைய மகிழ்ச்சியான உறவைப் பார்த்து மற்றவர்கள் பொறாமைப்பட வேண்டும் என்று நினைப்பவர்கள் அதிகரித்துவருகிறார்கள். மற்றவர்களிடம் அப்படிக் காட்டிக்கொள்வதால், தங்களுடைய உறவு வெற்றிகரமாக இருப்பதாக நினைத்துக்கொள்கிறார்கள்.

உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் காதலர்களுக்குச் சமூக ஊடகங்களில் அதை நிரூபிக்க வேண்டிய தேவை எழுவதில்லை. அவர்களுக்குப் பொறாமை ஏற்படுத்தும் நோக்கம் இருப்பதில்லை. இருவருக்குமிடையில் இருக்கும் பரஸ்பர முக்கியத்துவத்தை வெளிப்படுத்த வேண்டிய அவசியமும் இருப்பதில்லை. அவர்கள் தங்களுடைய உறவில் பாதுகாப்பையும் திருப்தியையும் உணர்பவர்களாக இருக்கிறார்கள்.

டென்மார்க்கின் மகிழ்ச்சிக்கான ஆய்வு மையம், ஃபேஸ்புக்கை ஒரு வாரம் பயன்படுத்தாமல் இருப்பவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை ஆய்வுசெய்தது. அந்த ஆய்வில், ஒரு வாரம் ஃபேஸ்புக்கை விட்டு விலகி இருந்தவர்களுக்கு வாழ்க்கையின் மீதான மனத்திருப்தி அதிகரித்திருப்பது தெரியவந்திருக்கிறது.

காதலர்கள், தம்பதிகளில் யாராவது ஒருவர், சுயமோக (narcissism) பிரச்சினையாலும், மனநிலை பாதிக்கப்பட்டிருந்தாலும் அது சமூக ஊடகங்களில்தான் முதலில் வெளிப்படுகிறது. இவர்கள் தொடர்ந்து சுய படங்களைப் பகிர்ந்துகொள்பவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் மோசமான வாழ்க்கைத் துணைகளாக இருப்பதற்கு சாத்தியமிருப்பதாக உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

காதலர்கள் தொடர்ந்து தங்களுடைய பரஸ்பர அன்பை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்திக்கொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம் தங்களுடைய உறவு வெற்றி கரமாக இருக்கிறது என்று மற்றவர்களை நம்ப வைப்பதற்குத்தான். மற்றவர்களை நம்பவைப்பதோடு மட்டுமல்லாமல் தங்களைத் தாங்களே மகிழ்ச்சியான, திருப்தியான உறவில் இருப்பதாக ஏமாற்றிக் கொள்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in