

பெயரைக் கேட்டவுடனேயே சட்டென்று ஒரு நெருக்கம் நம் மனத்தில் வந்து ஒட்டிக்கொள்கிறது. தமிழில் போற்றப்படும் வார்த்தையை, பெயரின் முன்பகுதியாகக் கொண்டது இதற்குக் காரணமாக இருக்கலாம். இந்தியர்கள் அதிகம் சுற்றுலா செல்லும் நாடுகளில் தாய்லாந்து முக்கியமானது. 3 மணி நேரத்தில் சென்றுவிடக்கூடிய தொலைவில் இருக்கும் தாய்லாந்து, நில அமைப்பிலோ தட்பவெப்ப நிலையிலோ பெரிய மாற்றங்களைக் கொண்டிருக்காவிட்டாலும் கலை, கலாச்சாரம், ஆண்-பெண் சமத்துவம், கேளிக்கைகள் போன்றவற்றில் வித்தியாசமானது.
தலைநகர் பாங்காக் விமான நிலையத்தில் கால் பதித்து, அங்கிருந்தே கடற்கரை நகரான பட்டாயாவை நோக்கிப் பயணப்படத் தொடங்கினோம். இரண்டு நகரங்களுக்கு இடையில் சீனப் பெருஞ்சுவர்போல் மைல் கணக்கில் நீண்டிருந்த பாலத்தில் பயணம் செய்தது சிலிர்ப்பூட்டும் அனுபவமாக இருந்தது. 2 மணி நேரத்துக்குப் பிறகு ரச்சா வேங்கைப் புலிப் பூங்காவுக்குள் நுழைந்தோம். இங்கே கண்ணாடிச் சுவருக்கு அந்தப் பக்கம் இருக்கும் புலிகளின் கொஞ்சல், சண்டை, சோம்பல் முறித்தல் போன்றவற்றை ரசித்தபடியே காலைச் சிற்றுண்டியைச் சாப்பிட்டோம்.
இங்கே புலிக் குட்டியை மடியில் வைத்துப் பால் புகட்டி, ஒளிப்படம் எடுத்துக்கொள்வதற்குக் கட்டணம் அதிகம். ‘புலிக்கே பால் கொடுத்த சாதனையாளர்’ என்று சரித்திரத்தில் இடம்பெறுவதற்கு இந்தக் கட்டணம் எல்லாம் தூசு என்று பலரும் நினைக்கிறார்கள்!
தாய்லாந்து என்றவுடன் நினைவுக்கு வருவது ‘மிதக்கும் சந்தை’ (ஃபுளோட்டிங் மார்க்கெட்). இங்கே ஆறு, கழிமுகம் போன்றவற்றில் சிறிய படகுகளில் மக்களைத் தேடிவந்து வியாபாரம் செய்கிறார்கள். சில படகுகளில் சுடச்சுட உணவும் காபி, தேநீர், பழச்சாறு போன்றவையும் கிடைக்கின்றன.
மறுநாள் பவழத் தீவு (கோரல் ஐலாண்ட்) நோக்கிப் புறப்பட்டோம். பயணப்பட்டது ஸ்பீட் போட் என்பதால், படகின் வேகம் சற்றுத் திகிலை அளித்தது. கடலுக்குள் இருந்து பட்டாயா நகரைப் பார்க்கும் காட்சி முற்றிலும் புதிய அனுபவத்தைத் தந்தது.
பவழத் தீவில் பார்த்தது போன்ற மணலை இதுவரை வேறெங்கும் பார்த்ததில்லை! வெள்ளை நிறத்தில் மாவுபோல் மெல்லிய மணல் துகள். அமைதியான குளம்போல் நிற்கும் நீலக் கடலில் மணிக்கணக்கில் மக்கள் நீந்துகிறார்கள். கரைகளில் ஓய்வெடுக்கிறார்கள். சாப்பிடுகிறார்கள்.