

இ
ந்திய வீரர் ஒருவர் சர்வதேச அரங்கில் பதக்கம் பெறுகிறார் என்றால் அந்தத் துறை விளையாட்டுக்கான எதிர்காலம் நம் நாட்டில் சுடர்விடத் தொடங்கியுள்ளது என்று அர்த்தம். அந்த வகையில் பலருக்கு ஆர்வமில்லாமல், அதிமுக்கியத்துவம் பெறாமல் இருந்த டேபிள் டென்னிஸ் விளையாட்டு ஆஸ்திரேலியாவின் கோல்டுகேஸ்ட் நகரில் சமீபத்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளின் மூலம் உலக கவனத்தை தன்பக்கம் திருப்பியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக விளங்கியவர் 22 வயதே நிரம்பிய மணிகா பத்ரா.
நடந்துமுடிந்த காமன்வெல்த் போட்டியில் டேபிள் டென்னிஸ் மட்டையுடன் களத்தில் இறங்கிய மணிகா பத்ரா சீறும் புலி போலவே தன்னுடைய விளையாட்டைத் தொடங்கினார். எதிராளியை நோக்கி இவர் வீசிய ஒவ்வொரு பந்தும் காற்றைக் கிழித்துக்கொண்டு சென்றது. தனிநபர் பிரிவில் தரவரிசையில் நான்காவது வீராங்கனையான சிங்கப்பூரைச் சேர்ந்த ஃபெங் தியான்வேயை (Feng Tianwei) எதிர்கொண்ட மணிகா 11-8, 8-11,7-11,11-9,11-7 என்ற செட் கணக்கில் வென்றார்.
உலகின் தரவரிசையில் மேம்பட்ட வீராங்கனையை எதிர்கொண்டது மணிகாவுக்கு அதுவே முதன்முறை. இரண்டாவது, மூன்றாவது ஆட்டங்களில் பின்னடைவைச் சந்தித்த மணிகா, பின்னர் எதிரியின் பல வீனத்தைக் கண்டுபிடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேபோல் குழு ஆட்டத்தில் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் பலமுறை சாம்பியன் பட்டத்தைப் பெற்ற சிங்கப்பூர் அணியை எதிர்கொண்டது இந்திய மகளிர் அணி.
இந்த ஆட்டத்தின் இறுதிப் போட்டியில் பங்கேற்ற மணிகா பலம் பொருந்திய சிங்கப்பூர் அணியினரை 3-1 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைக்க உதவினார். கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம், காமன்வெல்த் போட்டியில் இரண்டு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் எனப் பதக்க மழையில் நனைந்தார். ஒவ்வொரு பிரிவு ஆட்டத்திலும் மணிகாவின் ஆட்டம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.
தன்னுடைய நான்கு வயதிலிருந்து டேபிள் டென்னிஸ் விளையாடி வரும் மணிகா சர்வதேச அளவில் 58 -வது இடத்தில் உள்ளார். பல்வேறு சர்வதேசப் போட்டிகளில் மணிகா பத்ரா வெற்றிபெற்றிருந்தபோதிலும் காமன்வெல்த் போட்டிதான் அவருக்கான அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளது.
இந்திய விளையாட்டு துறையில் ஆண் விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை அதிகம் என்றபோதும், ஒவ்வொரு விளையாட்டையும் அனைத்துத் தரப்பட்ட மக்களிடமும் கொண்டுசேர்த்ததில் முக்கியப் பங்காற்றியவர்கள் வீராங்கனைகளே. தடகளத்துக்கு பி.டி உஷா, டென்னிஸுக்கு சானியா மிர்ஸா, பேட்மிண்டனுக்கு சாய்னா நேவால், பி.வி. சிந்து எனத் தொடங்கி தற்போது டேபிள் டென்னிஸ் என்றாலே மணிகா பத்ராதான் என்ற நிலை உருவாகியுள்ளது. விளையாட்டில் சாதிக்க வேண்டும் என நினைக்கும் இளம் வயதினருக்கு இந்த வீராங்கனைகளே உந்துதலைத் தருகிறார்கள்.