பயணம்: பாலி தீவு - இயற்கை வனப்பும் மனித வனப்பும்

பயணம்: பாலி தீவு - இயற்கை வனப்பும் மனித வனப்பும்
Updated on
3 min read

ந்தோனேசியாவின் புராதனமான சிறு தீவுப் பகுதி பாலி. இந்தோனேசியாவைவிட பாலி தீவுக்குச் சுற்றுலா செல்ல விரும்புபவர்களே அதிகம். தென்கிழக்கு ஆசியாவில் ஐரோப்பியர்களும் வெளிநாட்டவர்களும் கடந்த நூற்றாண்டில் அதிகம் காண விரும்பிய இடங்களுள் பாலி தீவும் ஒன்று.

நாற்பதாயிரம் ஆண்டுகளாக பாலி தீவில் மக்கள் வாழ்ந்துவருகிறார்கள். ஜாவாவிலிருந்து பலர் அங்கே குடிபெயர்ந்துள்ளனர். வெகுகாலமாக பாலி மக்கள் இந்துக்களாக வாழ்ந்துவருகிறார்கள். ஆனால், இந்தோனேசியா ஒரு முஸ்லிம் நாடு. பாலியில் முஸ்லிம்கள் பத்து சதவீதத்தினர்தான். அதற்கடுத்து, கிறிஸ்தவர்களும் பௌத்தர்களும் அதிக அளவில் உள்ளனர். மீதமுள்ள அனைவரும் இந்துக்கள்.

பாலி தீவு ஒரு கேளிக்கைத்தலம் என்ற எண்ணம் பரவலாக உள்ளது. நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த பயண நூல் ஒளிப்படங்களில் அத்தீவிலுள்ள பெண்கள் திறந்த மார்புடன் காணப்படுவார்கள். ஆனால், மாராப்பு இல்லாத பாலி பெண்களை அந்நாளைய கறுப்பு வெள்ளை ஒளிப்படங்களிலும் ஆவணப்படங்களிலும் மட்டும்தான் இப்போது காண முடியும்.

பாலி இன்று சுற்றுலாப் பயணிகளை பெருமளவில் ஈர்ப்பதற்கு காரணம் அதன் இயற்கை வனப்பும் கடற்கரைகளும்தாம். நவீன வசதிகளுடன் கூடிய கிராமங்கள்போல், அதன் பல பகுதிகள் தோன்றுகின்றன. உள்ளூர் பயணத்துக்குச் சாலை வழிகள் மட்டுமே உண்டு. ரயில் பாதை கிடையாது. கடற்கரைகளில் கூட்டம் கூட்டமாக வெளிநாட்டுப் பயணிகள் வெயிலில் காய்கிறார்கள். நீர் விளையாட்டுகளுக்காகவே பல வெளிநாட்டவர் அங்கு கூடுகின்றனர்.

பாலி உணவு அப்படியொன்றும் சுவையானது என்று கூறிவிட முடியாது. அரிசி உணவு முக்கியமானது. ஆனால், நம்மைப் போல் அதிக அளவில் அரிசியை உட்கொள்வதில்லை. அசைவ உணவில் கோழி, மீன், பன்றி இறைச்சி ஆகியவற்றுக்கு அதிக இடம் உண்டு.

பாலியில் ‘பாலே ராமாயணம்’ நடைபெறுகிறது. குறுகிய கால அவகாசம் மட்டுமே இருந்ததால், அதைப் பார்க்க இயலவில்லை. ஆனால், அது போன்றே புகழ்பெற்றுள்ள ‘கெசக் ராமாயண’ நாடகத்தைப் பார்க்க முடிந்தது. உலுவடு கோயில் திறந்தவெளி அரைவட்ட அரங்கில் கெசக் ராமாயண நாட்டிய நாடகம் நடைபெறுகிறது. மதகுரு ஒருவர் தீபம் ஏற்றியபின் நாடகம் தொடங்குகிறது. நாடகத்தில் மொத்தம் நாலு காட்சிகள். சீதையை ராவணன் இலங்கைக்குக் கடத்திச் செல்வதில் தொடங்கி அனுமன் அங்கே செல்வது, அவரது வாலில் தீ வைக்கப்படுவது, ராமன் சீதையை மீட்டு வருவது வரையிலான கதை சொல்லப்படுகிறது.

சீதை மட்டுமின்றி ராமன், லட்சுமணன் கதாபாத்திரங்களையும் பெண்களே ஏற்றுள்ளனர். ராமனும் சீதையும் அரங்கினுள் மெல்ல நடந்துவந்தார்கள். ஆனால், அவர்கள் மிதந்து வந்தார்களோ என்று எண்ணும்படியாக இருந்தது. சீதையாக நடித்தவர் புடவை கொசுவம் பின்னுவதுபோன்ற குறைந்த அபிநயத்தில் மிகுந்த நளினத்தைக் கொண்டுவந்தார். ராவணனின் வேலையாள் விகடம் செய்கிறான். அது கட்டியங்காரன் கதாபாத்திரம். அவன் பாலி மொழியிலிருந்து சட்டென மாறி பார்வையாளர்களுடன் பல மொழிகளில் தொடர்புகொண்டான்.

பாலி உள்ளிட்ட இந்தோனேசியாவின் பல இடங்களிலும் ஒரு புது வகை காபி தயாரிக்கப்படுகிறது. அதன் சுவை பற்றிச் சொல்வதற்கு முன்பாக அக்காபி தயாரிக்கப்படும் சுவையான (!) கதையைச் சொல்ல வேண்டும். பாலியில் ‘லுவாக் காபி’தோட்டத்துக்குச் சென்றோம். அங்குள்ள காபி பெர்ரிகளை புனுகு பூனை வகையைச் சார்ந்த மரநாய்கள் சாப்பிட்டுவிட்டு, அவை கழிக்கிற மலத்திலிருந்து பெறப்படும் கொட்டைகளிலிருந்து தயாராவதுதான் ‘லுவாக் காபி’.

மரநாய் தேர்ந்தெடுக்கும் காபி பெர்ரிகள் விசேஷமானவை என்றும் அவை பூனையின் குடலுக்குள் சென்று வெளி வருவதால் அவற்றுக்கு ஒரு புதிய பதம் கிடைக்கிறது என்றும் காபி தயாரிப்பாளர்கள் கூறுகிறார்கள். பூனையின் கழிவிலிருந்து பெறப்படும் காபிக் கொட்டைகளை வெந்நீரில் சுத்தமாகக் கழுவி எடுத்து அவற்றின் தோலை உரித்தெடுத்த பிறகு வாணலியில் இட்டு வதக்குகிறார்கள். பின்னர் உரலில் போட்டுப் பொடிசெய்து காபியாக விற்பனை செய்கிறார்கள்.

துவர்ப்பு கலந்த சுவை அக்காபிக்கு இருந்தது. அது அதிக விலையில் விற்கப்படுகிறது. ரஷ்யாவுக்கு அதிக அளவில் ஏற்றுமதியாகிறது. நாங்கள் குடித்த ஒரு ‘லுவாக் கப் காபி’யின் விலை இந்திய மதிப்பில் இருநூற்றைம்பது ரூபாய். பார்வையாளர்களுக்கு காட்டப்படுவதற்காக வைக்கப்பட்டிருந்த ஒரு பூனை உறக்கத்தில் இருந்தது. சப்தம் கேட்டவுடன் தலையை சற்றே தூக்கிப்பார்த்துவிட்டு கண்கள் சொருக மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்தது. இரவில் விழித்திருப்பதால் பகல் முழுவதும் அந்த இனம் தூங்கும் என்று சம்பந்தப்பட்டவர்கள் கூறினர்.

இந்தோனேசியாவில் போதைப் பொருள் வைத்திருப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படுகிறது. மது அருந்துவதற்குக் கட்டுப்பாடுகள் உள்ளன. ஆல்கஹால் அதிக அளவு இல்லாத மதுபானங்கள்தான் பார்களில் சப்ளை செய்யப்படுகின்றன. நாற்பது சதவீதம் ஆல்கஹால் கொண்ட பாலி சாராயத்தை வாங்கிச் சென்று தனியாக அருந்தலாம்.

ஆனால், அதையே உரிமம் பெற்ற பாரில் அருந்த முடியாது. ஆனாலும் அங்கே போதைப்பொருள் வணிகம் அதிகம். பாலியில் கஞ்சா புகை மணம் காற்றோடு கலந்த ஒன்றாக இருக்கிறது.

என்னைப் பெரும் பணக்காரனாக மகிழ வைத்த நாடு இந்தோனேசியா. ஒருமுறை பாலியிலுள்ள ஒரு நந்தவன ஓட்டலில் இயற்கை அழகின் சூழலில் அமர்ந்து நாங்கள் சாப்பிட்டோம். பில் வந்தது. நாங்கள் எட்டு லட்ச ரூபாய்க்குச் சாப்பிட்டிருந்தோம். ஆனால், அதிகம் அலட்டிக்கொள்ளாமல் பணத்தைக் கொடுத்துவிட்டு நகர்ந்தோம். ஏனெனில், அந்த அருமையான விருந்துக்கு இந்திய மதிப்பில் நாலாயிரம் ரூபாய்தான் ஆகியிருந்தது. இந்திய ரூபாய் ஒன்றின் மதிப்பு அங்கே இருநூறு ரூபாய். எனவே, ஒவ்வொருமுறை சாப்பிட்ட போதும் ஆளுக்கு நாற்பதாயிரம் அம்பதாயிரம் என்று செலவிட்டோம். ஆனால், இந்தோனேசியா ரூபாய் மதிப்பில்தான்.

‘ஏன் இப்படி அநியாயமாக பூஜ்யங்களைச் சேர்த்துக்கொண்டு எங்களைப் பயமுறுத்துகிறீர்கள்? நாணய மதிப்பை எளிதாக்கக் கூடாதா?’ என்று ஒரு பாலிவாசியிடம் கேட்டதற்கு அவர், ‘ஓ, நிச்சயமாக! நான் இந்தோனேசியாவின் அதிபராகப் பதவியேற்றவுடன், அந்தச் சீர்த்திருத்தத்தை முதலில் செய்துவிடுகிறேன்’ என்று கேலியாகச் சொல்லிவிட்டுக் கடகடவெனச் சிரித்தார். அவர்களுக்கு அது ஒரு பிரச்சினையே இல்லை. பாலியின் சொத்து இயற்கை வளங்கள் மட்டுமல்ல எல்லோரையும் இனிதாக வரவேற்கும் பாலி மக்களும்தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இருக்க முடியாது. அதுவும் ஒரு இயற்கைச் சொத்துதானே.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in