Published : 04 May 2018 10:06 AM
Last Updated : 04 May 2018 10:06 AM

பயணம்: அந்தத் திருவிழா நாட்கள்!

ந்தியில் மேளா. தமிழில் சந்தை. படங்களில் மட்டுமே நாம் கண்ட சந்தை, எங்கேயோ கிராமங்களில் சின்னதாக எஞ்சியிருந்து இப்போது நலிந்துகொண்டே வருகிறது. அதுவே பெரிய திருவிழாவாக மாறி, எல்லாக் கேளிக்கைகளுடனும் இறை அம்சமும் நிறைந்து, நவீனமும் இணைந்து உலக அளவில் கொண்டாடப்பட்டுவருவது தெரியுமா? அதுவும் ஒரு பாலைவனத்தில்.

உலகமே ஒரு சந்தை

இடம் புஷ்கர். ராஜஸ்தானில் ஒரு புனிதத் தலம். ‘புஷ்’ என்றால் புஷ்பம். கர் என்றால் கரம். பிரம்மனின் கையிலிருந்து பூ விழுந்த இடமாக இது அறியப்படுகிறது.

இங்கே டிசம்பர் மாதத்தில் நடைபெறும் முப்பெரும் விழா மிகப் பிரபலமானது. புஷ்கர், இயற்கைக் சூழலில் எழிலுற அமைந்திருக்கிறது. மூன்று பக்கங்களிலும் ஆரவல்லி மலைகள். நடுவில் அழகிய குளம். மேலும் இரண்டு சிறிய குளங்கள் என்று குளிர்ச்சி தரும் நீர்நிலைகள் உண்டு. ஊருக்குள் நுழையும்போதே விழாக் கோலம் களைகட்டுகிறது. சைக்கிள்போல ஒட்டக வண்டிகள். வண்ணங்களின் கலவையில் உடை அணிந்த ராஜபுத்திர மக்கள். ஊரின் எல்லைப் பகுதியில்தான் விழா. பெரிய மைதானம். அதற்கு அப்பால் மணற்குன்றுகள். இங்கேதான் ஒட்டகச் சந்தை நடக்கிறது. வியாபாரிகள் இங்கேயே கூடாரமிட்டுத் தங்குகின்றனர். மைதானத்தில் ஒரு பெரிய அரங்கம் போன்ற அமைப்பு. அங்குதான் எல்லா விழா வைபவங்களும் நடைபெறுகின்றன.

அதற்கு நடுவே கலை நிகழ்ச்சிகளுக்கான மேடை. இந்த இரண்டுக்கும் இடையே பொருட்காட்சி, கேளிக்கை அமைப்புகள், அரங்குகள், சர்க்கஸ், ராட்சத அளவு ராட்டினங்கள், மாயாஜாலம், விதம் விதமான பண்டங்களை விற்பனை செய்யும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. நம்மை வரவேற்பதும் இவைதான். முதலில் நாம் பார்த்தது சில்பக்ராம் என்ற கைவினைக் கண்காட்சி.

சந்தை

இங்கு அரக்கு, வளையல்களாக மாறும் காட்சி ஆச்சர்யப்பட வைக்கிறது. பகலவன் மறைந்து இருளவன் ஆட்சி தொடங்குகிறது. எங்கும் ஜகஜோதியாக வெளிச்சம். ‘இது வாழ்க்கையின் விழா’ என்ற பொருள் பெற்ற இந்திப் பாடல் (ஏ ஜிந்தகி கே மேளா) ஒலித்து மனதை வருடுகிறது.

மறு நாள் வீதி உலா. முதலில் வருவது பிரம்மா கோயில். உலகத்திலேயே பிரம்மாவுக்குக் கோயில் இங்கேதான் உள்ளது. அருகிலேயே பிரம்ம தீர்த்தம் எனும் புஷ்கர் குளம். ஊருக்குப் பெயர் வரக் காரணமாயிருக்கும் குளம். முதன்மை பஜாரைத் தாண்டித்தான் போக வேண்டும். சிறியதும் பெரியதுமான பல தெருக்கள் உள்ளன. ஒவ்வொரு தெருவிலும் கோயில்கள் / தர்மசாலைகள் அமைந்துள்ளன. ஒட்டகத் தோலால் ஆன பொருட்கள் இங்கு விசேஷம்.

இந்தச் சந்தைக்கென்றே ஏற்பட்ட, மெருகூட்டப்பட்ட கடைகள். ஒரே மக்கள் கூட்டம். முண்டாசு மனிதர்கள். கை நிறைய வெள்ளை வளையல்களுடனும் வண்ண வண்ண சேலைகளில் முக்காடு போட்ட பெண்கள். மூக்கில் பெரிய பெரிய பேசரி அணிந்திருக்கிறார்கள். கால்களில் ராஜபுத்திரர்களின் பாரம்பரிய செருப்புகள். வண்ணங்களையே எண்ணங்களாக மாற்றுவதில் கரை கண்டவர்கள் இவர்கள்.

உணவும் போட்டிகளும்

சந்தையில் மதிய உணவுக்காகச் செல்லும்போது ஒரு தெரு முழுக்க இனிப்புப் பலகாரக் கடைகள். தெருப் பெயரே மிட்டாய்க் கடைத் தெரு. அதிரசம் போன்ற மால்புவா இங்கு விசேஷம். திரண்ட பாலை ஊற்றிச் செய்கிறார்கள். பின்னர், சர்க்கரைப் பாகில் ஊற வைத்து எடுக்கப்படுகிறது. கூடவே ராபடி எனப்படும் பண்டத்தைப் பாலில் ஊறவைத்துத் தருகிறார்கள். அடுத்தது மிஸ்ரி மாவா எனப்படும் நம்மூர் பால்கோவா.

சுவையில் சற்றே வித்தியாசப்படுகிறது. கார வகைகளில் ஆமை வடிவ கச்சோரி. மதிய உணவுக்கு தால், பாடி, குருமா. இப்படிக் கொழுப்பு நிறைந்த உணவாக உண்டாலும் இவர்கள் ஊசி உடம்புடன்தான் இருக்கிறார்கள். வெயில் அனைத்தையும் உறிஞ்சிவிடுகிறது போலும்.

மேளா மைதானத்தில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு போட்டி அரங்கேறிக்கொண்டே இருக்கிறது. காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை. இதில் வெளிநாட்டவரும் பங்கேற்க ஊக்குவிக்கப்படுகின்றனர். மீசை போட்டியில் மீசையை வளர்ப்பதற்கே இருப்பவர்கள் பங்கேற்கிறார்கள். நீவி விட்டால் 5 அடிக்கு மேல் வருகிறது.

எண்ணெய், மசாஜ் போன்றவற்றின் மூலம் மீசையைப் பராமரிக்கிறார்களாம். கயிறு இழுக்கும் போட்டி, ஒட்டக போலோ, மண் பானையைத் தூக்கிக்கொண்டு ஓடும் மட்கா ரேஸ், பாரம்பரிய உடை அணிந்துகொண்டு விளையாடும் கிரிக்கெட், தலைப்பாகை கட்டும் போட்டி, அழகுப் பெண்கள் போட்டி - எல்லாவற்றிலும் அயலாருக்குப் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

பலூன் பயணம்

மறுநாள் விடியற்காலை. நான்கு கி.மீ. தொலைவில் வேறு ஒரு இடத்துக்குச் செல்கிறோம். வெப்பக் காற்று பலூன்கள் பறக்க விடப்படும் களம். எரிவாயு உதவியுடன் அடுப்பு வழியாக உள்ளிருக்கும் காற்று சூடேற்றப்படுகிறது. வெளியிலிருக்கும் தட்பவெப்ப நிலையைவிட பலூனுக்குள் இருக்கும் காற்று சூடாகும்போது (90 டிகிரி சென்டிகிரேட்டிலிருந்து 100 டிகிரிவரை) பலூன் மேலெழுந்து மிதக்கத் தொடங்குகிறது.

சுமார் 100 அடி உயரத்தில் பறந்து செல்கிறது. காற்று எந்தப் பக்கம் அடிக்கிறதோ அந்தப் பக்கம் செல்லும், காற்றாடியைப் போல. கடும் வெயிலிலோ வசதியான காற்றில்லாத பருவ நிலையிலோ இதை இயக்க முடியாது என்கிறார்கள். சாகசத்தை விரும்புவோருக்காக, இளைஞர்களுக்காக இந்த விழாவில் பலூன் பயணம் சேர்க்கப்பட்டுள்ளது.

நிறைந்தது கொண்டாட்டம்

இப்படியே விழாவின் கடைசி நாளும் வந்துவிடுகிறது. நிறைந்த பௌர்ணமி. ஊரே மைதானத்தில் கூடியிருக்கிறது. அப்போதும் சின்னச் சின்னப் போட்டிகள். விதவிதமான அணிவகுப்புகள். பரிசுகள் வழங்கப்படுகின்றன. எல்லோருக்கும் விடை கொடுக்கிறார்கள் விழா அமைப்பாளர்கள். வறண்ட பாலைவனத்துக்கு நீரோடைபோல வந்த இந்தக் கோலாகலம் முடிவுறும் நிலையைக் காணும்போது மக்களிடையே ஓர் ஏக்கம். கண்களில் ஒரு பரிதவிப்பு. ஏதோ ஒன்றைப் பிரிவதைப் போல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x