

ஆறாவது விரலாக நம் கைகளில் எப்போதும் தவழ்கின்றன திறன்பேசிகள். இந்த யுகத்தில் ‘டெக்ஸ்ட் சாட்’களில் வார்த்தைகளை நீட்டி முழக்காமல் சுருக்கமாக ‘சாட்’ செய்வது பெரும் கலை. முன்பு ‘சாட்’களில் ‘Okay’ என்று குறிப்பிடப்பட்ட சொல் ‘Ok’வாகி, பின்னர் ‘K’ என்று சுருங்கிப் போனது. இப்படி வார்த்தைகளைச் சுருக்கி ‘சாட்’ செய்த புத்தாயிரத்து இளைஞர்களின் காலமும் பின்னர் மலையேறியது. ஆம், அந்த இடத்தை எமோஜிகள் ஆக்கிரமித்தன.
இப்போதைய இளைஞர்கள் எமோஜிகள் மூலமே சமூக ஊடங்களில் வாட்ஸ்அப், மெசஞ்சர்களில் நீண்ட நேரம் அரட்டையடிக்கிறார்கள். தொடக்கத்தில் சிரிக்க, அழுக, கோபப்பட, மகிழ்ச்சி எனப் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் பொம்மைச் சித்திரங்கள் எமோஜிகளாக அறிமுகமாயின. இது இளைஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறவே, அரட்டைகளில் நிரந்தர இடத்தைப் பிடித்து எமோஜி அரட்டைகள் வளர்த்தன.
தற்போது எமோஜி அரட்டையும் எங்கோ சென்றுவிட்டது. பழைய திரைப்படப் பாடல்களையும் சமீபத்திய படக் காட்சிகளையும், பாடல்களையும் இணைப்பது, பிரபல ஓவியங்களைப் பின்னணியாகக் கொண்டு திரைப்படக் காட்சிகளை இணைப்பது என்ற ‘மாஷ்-அப்’ முறையைப் போல எமோஜிகளும் ‘மாஷ்-அப்’ டிரெண்டுக்கு மாறின. கடந்த சில ஆண்டுகளாகவே ‘மாஷ்-அப்’ எமோஜிகளே அரட்டைகளில் முதன்மையான இடத்தைப் பிடிக்கின்றன.
மனிதர்களின் ஒவ்வொரு உணர்வையும் பிரதிபலிக்கும் எமோஜிகள் பெருகிவிட்ட நிலையில், ’சாட்’ உரையாடல்களிலும், அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. நீட்டி முழக்கி டைப் செய்யும் வேலையை ஒரு எமோஜி உடனே உணர்த்திவிடுகிறது. அந்த வகையில் மனிதர்களின் வாழ்க்கையோடு இன்று எமோஜிகளும் இரண்டற கலந்துவிட்டன.
ஜூலை 17: உலக எமோஜிகள் தினம்