

கூ
ச்ச சுபாவம் கொண்டவன் ‘எண்’. பெண்களுடன் எளிதில் நட்பு பாராட்டக்கூடியவன் ‘விக்’. இவர்கள் லண்டன் பள்ளி ஒன்றில் படிக்கிறார்கள். இருவருக்குமே 15 வயது. ஒரு கலாச்சார பரிவர்த்தனையின்போது பழக்கமான ஜெர்மானிய மாணவியின் அழைப்பின்பேரில் இருவரும் ஒரு பார்ட்டிக்குப் போகிறார்கள். ஆனால், பார்ட்டி நடக்கும் இடத்தின் முகவரியை விக் மறந்துவிட, ஊகத்தில் இருவரும் ஒரு முகவரியை அடைகிறார்கள். இசை, நடனம் என்று அந்த இடமே கலகலப்பாக இருக்கிறது.
‘கூச்சம் போக, பெண்களிடம் பேசு’ என்று விக் அறிவுரை கூற, எண் தலையாட்டியபடியே உள்ளே நுழைகிறான். ஸ்டெல்லா என்ற பெண் இவர்களை வரவேற்க, விக் ஸ்டெல்லாவுடன் நடனமாடச் செல்கிறான். அந்த பார்ட்டியில் இருக்கும் மூன்று பெண்களுடன் எண் பேசுகிறான். அவனது உரையாடலும் அதற்கான எதிர் வினையும் மிகவும் புதிரான போக்கில் இருக்கிறது.
முதலில் தனியாக உட்கார்ந்திருக்கும் ஒரு பெண்ணிடம் எண் பேச ஆரம்பிக்கிறான். இடது கையில் ஆறு விரல்களைக் கொண்டவள் அவள். தன்னுடைய பெயர் வெய்ன்’ஸ் வெய்ன் என்று அறிமுகப்படுத்திக்கொள்கிறாள். அவளை நடனமாட அழைக்கிறான் எண். ஆனால், நடனம் தடை செய்யப்பட்டுள்ளது என்று மறுக்கிறாள். அவளது பேச்சுகள் புதிராக இருக்கிறது. தண்ணீர் எடுத்து வர எண் சமையலறைக்குச் செல்கிறான். திரும்பி வரும்போது அவள் அங்கே இல்லை.
இரண்டாவதாக இன்னொரு பெண்ணிடம் எண் பேச ஆரம்பிக்கிறான். தான் ஒரு பயணி என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் அந்தப் பெண், கடைசியாகத் தான் சூரியனுக்குச் சென்றதாகவும் பூமி ஒரு புதிரான இடமென்றும் சொல்கிறாள். அப்போது அங்கே வரும் விக், இது நாம் நினைத்து வந்த பார்ட்டி இல்லை என்கிறான். இப்போது மூன்றாவதாக வேறொரு பெண் தான் ஒரு கவிதை என்று சொல்லி அறிமுகமாகிறாள். எண்ணுக்குப் புரியாத ஒரு மொழியில் கவிதையை சொல்கிறாள். அப்போது விக் ஓடி வருகிறான். திடீரென்று கதையில் ஒரு திருப்பம் வருகிறது. இப்படி திருப்பங்களையும் புதிர்களையும் கொண்ட ‘ஹவ் டூ டாக் டூ கேர்ள்ஸ் அட் பார்ட்டி’ என்ற திரைப்படத்தின் கதைதான் இது.
கதைப்படி விக், எண் என இரண்டு இளைஞர்கள் மட்டுமே பார்ட்டிக்குப் போவார்கள். ஆனால், திரைப்படத்தில் மூன்றாவதாக இன்னொரு இளைஞரும் பார்டிக்கு வரும்படி பல புதுமைகளைப் புகுத்தியிருக்கிறார் இயக்குநர் ஜான் மிட்செல். 2006-ல் நீய்ல் கேய்மென் எழுதி நாவலாக வெளிவந்த இந்தக் கதை, இந்த வாரம் படமாகவும் வெளிவர இருக்கிறது.