

காதலில் சரி, தவறு என்ன? காதலே அழகுதானே எனச் சிலருக்குத் தோன்றலாம். உண்மைதான். ஆனால், இதில் சில தவிர்க்க முடியாத பிரச்சினைகள் எட்டிப் பார்க்கும்போது சுதாரித்துக் கொள்வதும் காதலில் ஓர் அம்சம்தான். அப்படிக் காதல் உறவுக்குள் இருக்கும் வெவ்வேறு சாதக பாதகங்களைப் பல்வேறு வண்ணங்களில் வகைப்படுத்தி வைத்திருக்கிறது, இந்தக் காலத் தலைமுறை. அவற்றைக் ‘கொடிகள்’ என்று அழைக்கிறார்கள். சுவாரசியமான அந்தக் கொடிகளில் சில.
சிவப்பு: உறவுகளுக்கான கொடிகளில் மிகப் பிரபலமானது, இந்த ‘சிவப்புக் கொடி’. ‘பிரேக்-அப்’பான காதலர்களும், இன்னும் காதலில் சிக்காத‘சிங்கிள்’களும் அவ்வப் போது இந்தச் சிவப்புக் கொடி பற்றிச் சமூக வலைதளத்தில் விவாதம் செய்துகொண்டிருப்பார்கள் பொதுவாக அபாயத்தின் அடையாளமாகச் சிவப்பைகுறிப்பிடுவதுண்டு.
காதல் உறவிலும் இதே பொருளில்தான் இது அடையாளப்படுத்தப்படுகிறது. காதல் உறவில் மரியாதை குறைவாக நடந்துகொள்வது, கருத்துகளைத் திணிப்பது, குடைச்சல் தருவது, தொட்டதற்கெல்லாம் சண்டை போடுவது போன்ற இயல்பைக் கொண்டவருக்கு ‘சிவப்புக் கொடி’ எப்போது வேண்டுமானாலும் உயரே எழலாம். சுருக்கமாக: சுதாரித்துக் கொண்டு சரியான நேரத்தில் பிரிவதே நல்லது.
பச்சை: சிவப்புக் கொடிக்கு அடுத்ததாகச் சொல்லப் போகும் கொடி பச்சையைத் தவிர வேறு இருக்க முடியுமா? சிவப்புக்கு நேரெதிரான குணங்கள் கொண்டவருக்குப் பச்சைக் கொடி காட்டப்படுகிறது. அதாவது, சுயமரியாதை, அன்பு, நம்பிக்கை, ஆதரவு, ஆறுதல் என ஒவ்வொரு விஷயத்திலும் தனக்கும் தன்னுடைய இணையருக்கும் சம உரிமை தந்து கொண்டாடு பவர்களைப் பரஸ்பரம் விரும்புவார்கள். எனில், பச்சைக் கொடிக் காட்டுவதுதானே நியாயம்! சுருக்கமாக: சரியான தேர்வு, வாழ்க்கை வளமாக இருக்கும்.
மஞ்சள்: சாலையில் மஞ்சள் வண்ணம் எரிந்தால், குழப்பத்துக்கு இடமில்லாமல் கவனமாகச் செல்ல வேண்டும் என்பதை உணர்த்தும். காதலிலும் அதேதான். மனம் விட்டுப் பேசாமல் இருப்பதாலும், தவறான புரிதலாலும் சிலருடன் ஒத்துப்போகாது என்கிற சூழல் ஏற்படலாம்.
இது சரியா, தவறா என்கிற குழப்பத்தில் உங்களைத் தள்ளுவதைத்தான் மஞ்சள் கொடி சுட்டுகிறது. ‘அவர் நல்லவர்தான், ஆனால் சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன’ என்கிற அளவில் இருக்கக்கூடியவருக்கு மஞ்சள் கொடியைக் காட்டிவிடலாம். சுருக்கமாக: பேசினால் சரியாகலாம், மீண்டும் ஒரு வாய்ப்பு தரலாம்.
ஆரஞ்சு: மஞ்சளுக்கும் சிவப்புக்கும் இடைப்பட்ட ரகம்தான் ஆரஞ்சு. இதில் வேண்டாம் என்று ஒதுக்கவும் தோன்றலாம். இல்லையெனில் அந்த முடிவுக்குச் செல்லலாமா என்று குழப்பமும் ஏற்படலாம். அதாவது, சரி செய்துகொள்ளக்கூடிய பிரச்சினைகள்தான் என்றாலும், உத்தரவாதம் இல்லாத உறவாக நீடிக்க வாய்ப்புள்ளது.
எதிர்காலத்தில் பிரச்சினைகள் வராமல் இருக்க, காலம் தாழ்த்தாமல் உடனடியாகப் பேசித் தீர்க்க வேண்டிய தேவை இருந்தால், ஆரஞ்சுக் கொடியைத் தூக்கிவிடலாம். சுருக்கமாக: புதுப் பிரச்சினைகளுக்கு இடம் அளிக்காத வகையில் தெளிவாகப் பேசித் தீர்த்தால் நல்லது.
இளஞ்சிவப்பு: பொதுவாக இளஞ்சிவப்பு வண்ணத்தைப் பிடிக்காதவர் இருக்க முடியாது. ஆனால், காதல் கொடியில் சற்று மாறுபட்டது. கவலை கொள்ள வேண்டிய அளவு பெரிய பிரச்சினைகளைத் தராதவருக்கு இந்தக் கொடி காட்டப்படுகிறது. இப்படிப்பட்டவர்கள் சில சூழ்நிலைகளில் பொறாமை, ‘ஈகோ’ போன்ற குணங்கள் உடையவர்களாக இருப்பார்கள். அவ்வப்போது சில பிரச்சினைகள் வந்து போகுமே தவிர, இதனால் உறவுக்குள் பெரிய சிக்கல்கள் எதுவும் ஏற்படாது. சுருக்கமாக: மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.
‘பீஜ்’ (Biege) - மாற்ற முடியாத சில பழக்கவழக்கங்கள் கொண்டவருக்கு இந்த ‘பீஜ்’ கொடியைக் காட்டிவிடுவார்கள். அதாவது, சிலருக்குச் சிறு வயது முதல் ஏதாவது ஓர் உணவைச் சாப்பிடும் பழக்கம் இருக்காது. ஆனால், ஓர் உறவு முறைக்குள் வந்த பிறகும் அந்தப் பழக்கத்தை மாற்ற முயற்சி செய்ய மாட்டார்கள். சிலருக்கு ஜன்னலோர இருக்கைதான் விருப்பமானதாக இருக்கும். அதை எக்காரணம் கொண்டும் இணை யருக்குக்கூட விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
இது போல ‘ஃபேஷன்’ மீது அதீத கவனம் கொண்டவர்கள், தூக்கத்தில் பேசுபவர்கள், குளிரிலும் ஏ.சி. போடுபவர்கள் போன்ற பழக்கம் உடையவர்கள் இந்த ரகத்தினர்தான். இதனால், இணையருக்கு எரிச்சல் ஏற்படலாம். ஆனால். அது சிக்கலாக மாறாத வரை நல்லது. சுருக்கமாக: எந்தவொரு பழக்கமும் இன்னொருவரை முகம் சுளிக்க வைக்காமல் இருக்கும்வரை ‘ஆல் இஸ் ஓ.கே.’தான்.
நீலம்: அன்பு, காதல் இவற்றைத் தாண்டி ஒருவருக்கு இன்னொருவர் பணிநிமித்தமாக உற்சாக மூட்டி ஆதரவு தருவது இந்த வகையைச் சேரும். செய்யக்கூடிய வேலையில் பல கனவுகளைச் சுமக்கும் இணை யருக்குப் பக்கபலமாக இருந்து அவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பதைத்தான் நீலக் கொடி உணர்த்துகிறது. சுருக்கமாக: எல்லாம் நன்மைக்கே.
கறுப்பு: காதலில் இருக்கவே கூடாத அம்சங்கள் என்றால் பொய், ஏமாற்றம், துரோகம் போன்றவைதான். இதுபோன்ற குணங்கள் நிறைந்த உறவு முறைக்குக் கறுப்புக் கொடியைக் கண்ணை மூடிக் கொண்டு காட்டிவிடுவார்கள். இந்தக் கொடி சொல்ல வரும் விஷயம், அளவுக்கு மீறி, தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவரை விட்டுப் பிரிவதே மேல் என்பதுதான். சுருக்கமாக: வாழ்க்கையை வீணடிக்காமல் விலகிச் செல்.