

உலகில் ஒளிப்படங்களை விரும்பாதவர் யாருமில்லை. அதுவும் இன்றைய தலைமுறையினர் பற்றிச் சொல்லவே வேண்டாம். கையிலே செல்போன், செல்போனிலே கேமரா. அதனால், எல்லாவற்றையும் படம் எடுத்துத் தள்ளுகிறார்கள். ஆனால், இவர்களிலிருந்து மாறுபட்டவராக இருக்கிறார் கோவையைச் சேர்ந்த ஒளிப்படக் கலைஞர் ஸ்ரீதர் பாலசுப்ரமணியம்.
கலை ரசனை, சமூக யதார்த்தம் இரண்டையும் கலந்த ஒளிப்படங்களே இவரது தேர்வு. தமிழகத்துக்குப் புலம் பெயரும் வடஇந்தியர்களை ஆவணப்படுத்தும் முயற்சியில் இவர் இறங்கியிருக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளாகவே வட இந்தியாவிலிருந்து தென் மாநிலங்களுக்குப் புலம்பெயர்ந்து வருவோர் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் உள்ளது. பானிபூரி கடையில் தொடங்கி கட்டுமான வேலை, சர்வர் வேலை, மில் வேலை என ஒவ்வொரு ஊரிலும் இவர்கள் குவிந்துவருகிறார்கள்.
ஏழ்மையின் காரணமாக வெவ்வேறு மாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்து வரும் இவர்கள், குடிசைப் பகுதிகளிலும் நடைபாதைகளிலும் தஞ்சமடைகிறார்கள். பல இன்னல்களுக்கிடையே அன்றாட வாழ்க்கையை ஓட்டிவருகிறார்கள். தற்போது இவர்களை ஆவணப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் ஸ்ரீதர் பாலசுப்பிரமணியம். ‘ஹியர் அண்ட் எல்ஸ்வேர்’ என்ற பெயரில் ஒரு தொடராக இதை ஆவணப்படுத்திவருகிறார்.
இந்தத் தொடருக்கான யோசனை எப்படி வந்தது என்று கேட்டபோது, “எங்க ஊர்ல வேற மாநிலத்தச் சேர்ந்தவங்க நிறைய பேர் இருப்பாங்க, மில் வேலை போக கிடைக்கிற வேலைய செஞ்சுகிட்டு அதுல வர பணத்த ஊருக்கு அனுப்பிச்சுட்டும் இருப்பாங்க, நான் காலேஜ் படிக்கும்போது அவங்க அதிகமா வர ஆரம்பிச்சாங்க.
அவங்களுக்கும் ஊர்க்காரங்களுக்கும் அடிக்கடி சண்ட வரும். அது ஏனோ என்னைப் பாதித்தது.
அதனால் அப்போதிருந்தே அவங்களப் பத்தி பதிவு பண்ணணும்னு நெனச்சேன். அப்புறம், நான் ‘குகைமரவாசிகள்’ என்ற புலம்பெயரும் மக்களைப் பற்றிய நாடகத்தில் நடித்தேன். அதுதான் இந்தப் பதிவைத் தீவிரமா செய்ய வெச்சது. அஞ்சு வருசமா இருந்த யோசனைதான். இப்போ அதை செஞ்சிட்டு இருக்கேன்” என்றார்.
இப்போது ஒளிப்படத்தைப் பொறுத்த அளவில் அதிக வண்ணங்களை விரும்பும் காலத்தில் உங்களது படைப்புகள் பெரும்பாலும் கறுப்பு-வெள்ளையில் (monochrome) உள்ளதே என்றபோது, “என் மனதில் இருள் சூழ்ந்த ஒரு வலி நெறஞ்ச நிலையில எடுக்குற படத்த கறுப்பு-வெள்ளையில தான் காட்ட முடியுது, அது தான் சரியாவும் இருக்கு” என்றார் பெருமூச்சுவிட்டபடி.
மேலும், “இப்போ, பெரும்பாலான புகைப்படக்காரர்கள் சமூகப் பொறுப்பில்லாம செயல்படுறாங்க.
நான் ஒரு முறை குலசேகரப்பட்டினம் திருவிழாவுக்குப் போயிருந்த சமயத்துல, அங்கு பாரம்பரியமாக நடக்குற சடங்குகளுக்கு இடையூறு செய்யுற மாதிரி அவங்க செயல்பட்டாங்க.
சாமி வேசம் போட்டு தன்னை மறந்து அருள் வந்து ஆடிட்டு இருப்பாங்க, சில பேர் நாக்குல சூடம் வைச்சு ஆடுறது எனப் பல சடங்குகள் நடக்குற சமயத்துல போட்டோவுக்காக மீண்டும் அத செய்யச் சொல்றதும், அத நூற்றுக்கும் அதிகமான புகைப்படக்காரர்கள் படம் எடுக்குறதும் எந்த வகையில் சரின்னு தெரியல" என்றவர் ஒரு நிகழ்வோட பின்புலத்த தெரிஞ்சுகிட்டு நியாயமா செயல்படணும் சமூகத்துக்கு உண்மையா இருக்கணும்” என்ற தனது ஆதங்கத்தையும் பகிர்ந்துகொண்ட பிறகு தன் பேச்சை முடித்துக்கொண்டார்.