

இ
ளம் பெண்களுக்குப் பிடித்த விஷயங்களில் நெய்ல் பாலிஷ் போட்டுக்கொள்வதும் ஒன்று. முன்பெல்லாம் நெய்ல் பாலிஷ் என்றாலே அடர் சிவப்பு நிறமே பெரும்பாலானோரின் தேர்வாக இருக்கும். ஏனென்றால், அந்த நிறத்தில் மட்டுமே நெய்ல் பாலிஷ் அதிகமாக வெளிவந்த காலம் அது.
ஆனால், இப்போது அப்படியல்ல; பளிச்செனக் கண்ணைப் பறிக்கும் விதவிதமான வண்ணங்களில் நெய்ல் பாலிஷ் வருகிறது. எனவே, ஆடையின் நிறத்துக்கு ஏற்ப நெயில் பாலிஷ் இட்டுக்கொள்ள இளம்பெண்கள் விரும்புகிறார்கள். தினம் ஒரு நெய்ல் பாலிஷ் எனும் அளவுக்கு அந்த மோகம் மாறியிருக்கிறது.
இப்போது இன்னும் ஒரு படி மேலே போய், ஒவ்வொரு விரலுக்கும் ஒவ்வொரு வண்ணத்தில் நெயில் பாலிஷ் இட்டுக்கொள்கிறார்கள். பார்ப்பதற்கு வானவில் போலத் தெரியும் இந்த ஸ்டைலைத்தான் இந்தக் கால இளம் பெண்கள் ஃபேஷன் என்கிறார்கள். அடர் சிவப்பு, நீலம், பச்சை, பிங்க் போன்ற வண்ணங்களை அதிக அளவில் வாங்கும் இளம் பெண்கள், ரூபி ரெட், ஹாட் பிங்க், பவளம் போன்ற வண்ண நகப் பூச்சுகளையும் விரும்பவே செய்கிறார்கள்.
ஒரு காலத்தில் விரும்பப்பட்ட ஜிகுஜிகு என மின்னும் நெயில் பாலிஷை எல்லாம் இளம் பெண்கள் இப்போது ஒரு பொருட்டாக நினைப்பதில்லை. மினுமினுப்பு இல்லாத வண்ணங்கள் மட்டுமே இளம் பெண்களின் தேர்வாக இருக்கிறது.
நகங்களில் வெறும் பாலிஷை மட்டும் போடுவதைவிட அதை அழகாக அலங்கரிப்பதும் இப்போது பரவலாகிவருகிறது. ரம்மியமான பூக்கள் கொண்ட டிசைன்களை நகங்களில் வரைந்துகொள்வதும் அதிகரித்திருக்கிறது. இது விரல்களை எடுப்பான தோற்றத்தில் காட்ட உதவுவதாக இளம் பெண்கள் நம்புகிறார்கள்.
3டி முறையில் நகத்தை அழகுபடுத்தும் போக்கும் இப்போது அதிகரித்திருக்கிறது. நகங்களின் மீது சின்ன சின்ன ஸ்டட்களையும் ஸ்டோன்களையும் விதவிதமான வடிவங்களில் பொருத்திக்கொள்வதும் பழக்கமாகியுள்ளது. இவை எல்லாம் சேர்ந்து உங்கள் நகங்களைத் தனித்துக் காட்டும். அதேநேரம், அது பாதிப்பு தராத வகையில் பார்த்துக்கொள்வது அவரவர் பொறுப்பு.