

உலகில் விசித்திரமான, விநோதமான திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்தத் திருவிழாக்கள் அந்தந்த நாட்டின் அல்லது அங்குள்ள ஒரு பகுதியின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கின்றன. பொதுவாக வளமான வாழ்வைப் பெற வேண்டி நடத்தப்படும் இந்த விழாக்கள், வேடிக்கையாகவும் விநோதமாகவும் அமைந்துவிடுகின்றன.
அந்த வகையில் ஜப்பானில் ஆண்டுதோறும் நடைபெறும் அரை நிர்வாணத் திருவிழா பிரசித்தி பெற்றது. அரை நிர்வாணத் திருவிழா என்றதும் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட வேண்டாம். இது ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் விநோதத் திருவிழா. இதன் பெயர் சைதை-ஜி-யோ ஹடக்கா மட்சுரி (Hadaka Matsuri). நம் ஊரில் ஆண்கள் மட்டுமே பங்குபெறும் திருவிழாக்கள் உண்டல்லவா? அது போன்றதுதான் இதுவும்.
சுமார் 1300 ஆண்டுகளாக ஜப்பானில் இந்தத் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு அணிவிக்கப்படும் டயபர் போலவும் ஜப்பானிய சுமோ வீரர்கள் அணியும் இடுப்புக் கச்சை போலவும் தோற்றம் தரும் துணியை இடுப்பைச் சுற்றிக் கட்டிக்கொள்கிறார்கள். கால்களில் வெள்ளை சாக்ஸும் தலையில் ரிப்பனும் கட்டிக்கொண்டு, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஓரிடத்தில் ஒன்றுகூடுகிறார்கள்.
அங்கு அவர்கள் மேல் குளிர்ந்த நீர் பீய்ச்சி அடிக்கப்படுகிறது. இதன் மூலம் அவர்களுடைய ஆன்மா தூய்மைப்படுத்தப்படுவதாக நம்பப்படுகிறது. பின்னர் அவர்களில் ஒருவரை அந்த ஆண்டுக்கான அதிர்ஷ்டசாலியாகத் (shin-Otoko) தேர்ந்தெடுக்கிறார்கள். அப்படித் தேர்ந்தெடுக்கப்படுபவருக்கும் அரை நிர்வாணக் கோலம்தான்.
கண் இமை முதற்கொண்டு உடலில் எந்த இடத்திலும் முடி இல்லாதவாறு அவருக்கு மழிக்கப்படுகிறது. அந்த நபர் கோயிலுக்குச் செல்லும்போது அவரைத் தொடுவதற்கும் அடிப்பதற்கும் மக்கள் முண்டியடித்துச் செல்கிறார்கள். அப்படி அந்த அதிர்ஷ்டக்கார இளைஞரைத் தொடுவது அல்லது அடிப்பதன் மூலம் தங்களுடைய எதிர்மறை ஆற்றல்கள் கடத்தப்படுவதாக நம்புகிறார்கள்.
ஆண்கள் மட்டுமே பங்குபெற்று வந்த இந்தத் திருவிழாவில், கடந்த ஆண்டிலிருந்து குறைந்த அளவிலான பெண்களும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு இந்த உடைக் கட்டுப்பாடு கிடையாது.