

கிரிக்கெட்டில் கத்துக்குட்டி அணிகள் என்று விளிக்கப்படும் சிறிய அணிகள் அரிதாகச் சாதனைகளைப் படைப்பதுண்டு. 1983 உலகக் கோப்பையில் கத்துக்குட்டி அணியாக வர்ணிக்கப்பட்ட கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது மட்டுமல்லாமல், உலகக் கோப்பையையும் வென்று வந்தது.
2003 உலகக் கோப்பையில் டெஸ்ட் அந்தஸ்து பெறாத கென்ய அணி அரையிறுதிப் போட்டி வரை முன்னேறி எல்லாரையும் ஆச்சரியப்பட வைத்தது. 2024இல் டி20 உலகக் கோப்பையில் பலம் பொருந்திய நியூசிலாந்து, முன்னாள் டி20 சாம்பியன்களான ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய அணிகள் சுற்றுப் போட்டிகளோடு மூட்டைக் கட்ட, ஆப்கானிஸ்தான் அணி கம்பீரமாக அரையிறுதி வரை முன்னேறி அசத்தியது.
1999ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் தொடர்களில் பங்கேற்றுவரும் வங்கதேச அணி, இதுவரை ஒருமுறைகூட அரையிறுதி வரை முன்னேறியதில்லை. 2010இல் முதல் முறையாக வெஸ்ட்இண்டீஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் பங்கேற்ற ஆப்கானிஸ்தான் அணி, சரியாக 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் ரஷித் கான் தலைமையில் அரையிறுதிக்கு முன்னேறி வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறது!
வெற்றிக் கொண்டாட்டம்: அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியதையே ஆப்கானிஸ்தானில் கொண்டாடித் தீர்த்துவிட்டனர். அவற்றின் காணொளிக் காட்சிகள் ஆச்சரியமூட்டின. பொதுவாகக் கொண்டாட்டங்களை வெறுக்கும் தலிபான்கள்கூட மக்களின் கிரிக்கெட் வெற்றிக் கொண்டாட்டத்துக்குத் தடை ஏதும் விதிக்கவில்லை. அரையிறுதிக்குச் சென்றதையே ஆராதிக்கும் அளவுக்கு ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் கிளைவிட்டு வளரத் தொடங்கிவிட்டதைத்தான் இக்கொண்டாட்டங்கள் காட்டுகின்றன.
கணிக்க முடியாத அணியாகக் கருதப்படும் இன்றைய ஆப்கானிஸ்தான் அணி, சூப்பர் 8 பிரிவில் ஜாம்பவான் அணியான ஆஸ்திரேலியாவைச் சாய்த்துவிட்டு அரையிறுதிக்கு முன்னேறியவிதம் கத்துக்குட்டி அணி என்கிற விமர்சனங்களுக்குப் பதிலடிக் கொடுத்துவிட்டது.
தனி மனிதனின் உருவாக்கம்: ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் கிராஃப் உயர்ந்து சென்றுகொண்டிருக்கும் வேளையில், தாஜ் மாலிக் ஆலம் என்கிற மனிதரைப் பற்றி நிச்சயம் பேசாமல் இருக்க முடியாது. ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் முளைவிட விதைப் போட்டவர் இவர்தான்.
ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட்டை வளர்க்க வேண்டும் என்று எண்ணிய தாஜ் மாலிக்குக்குப் பின்னணிக் காரணமாக இருந்ததும் ஓர் உலகக் கோப்பை தொடர்தான். 1987இல் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் கூட்டாக உலகக் கோப்பை தொடர் நடைபெற்றபோது, பாகிஸ்தானில் உள்ள ஓர் அகதிகள் முகாமில் சிறுவனாக இருந்தவர்தான் தாஜ் மாலிக் ஆலம்.
அகதிகள் முகாமில் உலகக் கோப்பை போட்டிகளைப் பார்த்து கிரிக்கெட் விளையாடக் கற்றுக்கொண்ட அவர், விளையாட்டு களுக்குக்கூடத் தடை விதிக்கப்பட்டிருந்த தலிபான்கள் ஆட்சியின்போதே, ஆப்கானிஸ் தானில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்த முயற்சிகளை முன்னெடுத்தவர். ‘ஆப்கன் கிரிக்கெட் கிளப்’ என்கிற பெயரில் ஓர் அணியைத் தயார் செய்தார்.
தலிபான்கள் வீழ்ச்சிக்குப் பிறகு, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி உருவாகக் காரணமாக இருந்தது மட்டுமன்றி, அந்த அணிக்கு முதல் பயிற்சியாளராகவும் இருந்தார் தாஜ் மாலிக். கிரிக்கெட் வீரர், அணியின் நிர்வாகி, அணித் தேர்வாளர் எனப் பல முகங்கள் இவருக்கு உண்டு. இவரின் கடும் முயற்சியால் உருவான ஆப்கன் அணி, 2018இல் டெஸ்ட் அந்தஸ்து பெற்றது. இன்றோ டி20 உலகக் கோப்பை அரையிறுதி வரை சென்று சாதித்துள்ளது.
மாற்றம் முன்னேற்றம்: கலைகளுக்கும் விளையாட்டுக்கும் எப்போதுமே ஒரு முக்கியத்துவம் உண்டு. ஆன்மாக்களை இணைக்கும் சங்கிலிகள் அவற்றுக்கு உண்டு என்பதுதான் அது. பல ஆண்டுகளாக நடைபெற்ற யுத்தம், தலிபான்களின் ஆதிக்கம் எனப் பாழ்பட்டுக் கிடக்கும் பூமியான ஆப்கானிஸ்தான் வரலாற்றில் கிரிக்கெட், நல்ல மாறுதலைக் கொண்டு வரத் தொடங்கியிருக்கிறது.
ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற அரையிறுதி வெற்றிக் கொண்டாட்டங்கள் அதை உணர்த்துகின்றன. அரையிறுதிப் போட்டியில் படுதோல்வி அடைந் திருந்தாலும், ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் பாய்ச்சல் வளரும் கிரிக்கெட் அணிகளுக்கெல்லாம் ஓர் உற்சாக டானிக்.