

அ
ண்மையில் பெங்களூருவில் நாய்களுக்காகத் தொடங்கப்பட்ட ‘சர்வோஹம்’ (Sarvoham) என்ற நாய் மறுவாழ்வு மையம் நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ளது. உடல் ஊனமுற்ற, நோயால் பாதிக்கப்பட்ட நாய்களுக்காக இந்த மையம் தொடங்கப்பட்டிருப்பது தனிச் சிறப்பு. இந்த மையத்தை ஹாரிஸ் அலி என்ற 25 வயதான இளைஞர் நடத்திவருகிறார். நாய்களுக்காக இந்த இளைஞர் மேற்கொண்டிருக்கும் முயற்சி வீடியோவாக வெளியாகி, சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
பெங்களூருவைச் சேர்ந்த ஹாரிஸ் அலி சிறு வயதிலிருந்தே நாய்கள் மீது அளவு கடந்த பாசத்துடன் இருந்திருக்கிறார். அவை வீட்டு நாய்களாக இருந்தாலும் சரி; தெரு நாய்களாக இருந்தாலும் சரி, அவரது அன்பில் பாரபட்சம் இருந்ததில்லை. பொதுவாக, தெருவில் சுற்றித் திரியும் நாய்களுக்கு நோய்த் தாக்குதல் சற்று அதிகமாகவே இருக்கும். எனவே, இந்த நாய்களுக்கு உதவுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார் அவர். சிறுவயதிலிருந்து ஏற்பட்ட இந்த நாய் அன்பு, பெரியவரானதும் ‘சர்வோஹம்’ என்ற நாய்கள் மறுவாழ்வு மையத்தைத் தொடங்கும் அளவுக்கு பெருகியிருக்கிறது.
நாய்களுக்கு மையம் அமைக்கும் அளவுக்குத் தூண்டுகோலாக இருந்தது எது என்று அவரிடம் கேட்டோம். “சின்ன வயசுல இரும்புக் கம்பியால் ஒரு சின்ன நாய்க்குட்டியைச் சிலர் அடித்து கொன்ற சம்பவம் என்னை மனத்தளவில் பாதிச்சது. அதனாலேயே நாய்கள் மீது கரிசனம் வந்துச்சு. குறிப்பா உடல்நிலை பாதிக்கப்பட்ட நாய்களை மீட்டு அவற்றுக்கு உணவு, தங்குவதற்கான இடம், மருத்துவ வசதிகளைச் செய்ய ஆரம்பிச்சேன்.
தொடக்கத்தில் அறுபதாக இருந்த நாய்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது. படிப்பை முடிச்சு வேலைக்குப் போன பிறகும் என்னுடைய சம்பளத்தின் ஒரு பகுதியை நாய்களுக்காகச் செலவழிச்சேன். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த மையத்தைத் தொடங்கினேன். எதிர்காலத்துக்காகப் பணத்தை சேமித்துவைக்கிறதைவிடக் கண்ணெதிரில் கஷ்டப்படும் வாயில்லாத பிராணிகளுக்காக இந்தப் பணத்தைச் செலவு செய்வது மனநிம்மதியைத் தருகிறது” என்கிறார் ஹாரீஸ் அலி.
‘சர்வோஹம்’ மறுவாழ்வு மையத்தின் மூலம் நாய்கள் தொடர்பாக விழிப்புணர்வு பிரச்சாரங்களிலும் ஈடுபட்டு வருகிறார் இந்த இளைஞர். இந்த முயற்சியின் விளைவாக கடந்த ஆண்டில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறார் இவர்.
தற்போது பாதிக்கப்பட்ட நாய்களை உடனடியாக மீட்க வசதியாக ஆம்புலன்ஸ் வாங்கவும் இவர் உத்தேசித்துள்ளார். இதற்காக ‘கிரவுட் ஃபண்டிங்’ உதவியையும் நாடியுள்ளார். இதையடுத்து கிரவுட் ஃபண்டிங்குக்கு உதவும் வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை ஹாரிஸ் வெளியிட்டார். அந்த வீடியோவை லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இதனால் அவருக்குப் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் உதவிகள் குவிந்துவருகின்றன.