

நில், கவனி, கடந்து செல் என்று நம் ஊர்ச் சாலைகளில் எழுதப்பட்டிருக்கும். ஆனால், கனடாவின் வான்கூவரில் உள்ள கிரீன்வில் தீவுச் சாலைகளில் பாதசாரிகள் கடக்கும் இடத்தில் இருபுறமும் செங்கற்களை வைத்துள்ளனர். சாலையைக் கடக்க நினைக்கும் பாதசாரிகள் ஒரு செங்கல்லைக் கையில் எடுத்துக்கொண்டு இருபுறமும் வந்துகொண்டிருக்கும் வாகன ஓட்டிகள் பார்வையில் படும்படி சாலையைக் கடந்து செல்கிறார்கள். இந்தாண்டு மட்டும் இதுவரை அங்கு 18 பேர் சாலையைக் கடக்க முயன்று விபத்தில் இறந்துவிட்டார்களாம். சாலையைக் கடப்பவர்களைப் பாதுகாக்க விநோதமான முடிவைப் பாதசாரிகள் பாதுகாப்பு அமைப்பு முன்னெடுத்துள்ளது.
அதாவது, ‘கவனி, கல் எடு’ (Be Seen, grab a brick) என்று எழுதி வைத்திருப்பதோடு சாலையின் இருபுறங்களிலும் செங்கற்களையும் குவித்து வைத்துள்ளனர். சாலையில் விதிகளை மீறி வேகமாக வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் இந்த ‘செங்கல்’ பாதுகாப்பை கையில் எடுத்துள்ளனர். ரூ.50 லட்சம் காரைக் கொண்டு அச்சுறுத்துபவர்களுக்கு ரூ.5 மதிப்புள்ள கல்லை வைத்து அங்கு பதிலடி தருகிறார்கள்.
ஒரு ‘குப்பை’ ஃபேஷன் ஷோ!: உலகில் நிலம், நீர், காற்று என மனிதன் மாசுபடுத்தாத இடமே இல்லை. அந்த வகையில் சிலி நாட்டிலுள்ள அடகாமா பாலைவனத்தையும் விட்டுவைக்கவில்லை. உலகில் உற்பத்தி செய்யப்படும் நாகரிக ஆடைகளின் குப்பை மலையாகக் காட்சியளிக்கிறது இந்தப் பாலைவனம். சுமார் 1800 கி.மீ. நீளத்துக்கு இந்தக் குப்பைகள் பரவிக் கிடக்கின்றன. விண்வெளியிலிருந்து வெறும் கண்களால் பார்க்க முடிந்தவற்றில் இந்தப் பாலைவனக் குப்பை மலைக்கும் இடமுண்டு. ஒவ்வோர் ஆண்டும் 39 ஆயிரம் டன் ஃபேஷன் குப்பைகள் இங்கு கொட்டப்படுகின்றன. இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகத் தன்னார்வச்செயற்பாட்டாளர்கள் அண்மையில் இந்தக் குப்பைகளுக்கு இடையே ‘ஃபேஷன் ஷோ’வை நடத்திக் கவனிக்க வைத்துள்ளனர்.
- ஆர். மனோஜ்