

“சார், லட்டூ..." காமெடி சானல்களில் இந்த வசனம் இடம்பெறும் காட்சி தேய்ந்து போகும் அளவுக்கு ஒளிபரப்பப் படுகிறதா, தெரியவில்லை. ஆனால், எளிதாக மறந்துவிட முடியாத நகைச் சுவைப் படங்களில் ஒன்று 'அரங்கேற்ற வேளை'யில் இடம்பெற்ற வசனம் அது.
அதில் தன் தந்தை பார்த்த வேலை தனக்கு ஏன் தரவில்லை என்று கேட்டுப் பிரபு ஒரு அலுவலகத்துக்குச் சென்றிருக்கும்போது, அவரது வேலை வேறொரு பெண்ணுக்கு வழங்கப்பட்டிருக்கும். அதைக் கொண்டாடும் விதமாக அந்தப் பெண் சார்பில் ஆஃபிஸ் பியூன் தட்டில் லட்டைக் கொண்டுவந்து ஒவ்வொருவரிடமும் "சார், லட்டூ..." என்று இழுத்துஇழுத்து பேசிக்கொண்டிருப்பார். பிரபுவிடம் வரும்போது, கோபத்தில் பிரபு தட்டை தட்டிவிடுவார்.
இந்தச் சினிமா காட்சி நகைச்சுவைக்காக வைக்கப்பட்டது என்றாலும், இன்றைக்கும் எந்தக் கொண்டாட்டம் என்றாலும், லட்டு இல்லாமல் நிறைவடையாது. அதன் அடையாளமே, இந்தச் சினிமாக் காட்சியில் இடம்பெற்றுள்ள லட்டு. ஆனால், லட்டு கொண்டாட்டங்களில் இடம்பிடிக்க ஆரம்பித்து அதிக நூற்றாண்டுகள் ஆகவில்லை. லட்டின் தாயகம் தமிழகம் அல்ல, குஜராத்.
தாயகம் எது?
மூலப்பொருள் எண்ணெயில் பொரித்தெடுக்கப்படுதல், திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படுவதில் இருந்தே லட்டு நம்முடைய இனிப்பு அல்ல, வெளியிலிருந்து வந்த அயல் இனிப்பு என்பதைப் புரிந்துகொள்ளலாம். பன்னிரெண்டாம் நூற்றாண்டு குஜராத்தி இலக்கியத்தில் லட்டு தயாரிப்பு பற்றி குறிப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அங்கே அதற்கு மோத்திசூர் லட்டு என்று பெயர்.
தமிழகத்தில் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பெரியாழ்வார், லட்டைப் பற்றி குறிப்பிடும்போது இலட்டுவம் என்று கூறியுள்ளார். பன்னிரெண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஔவையார் பாடிய புகழ்பெற்ற பிள்ளையார் துதி பாடலில் "பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும், இவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பாகும் பருப்பும்தான் லட்டின் உண்மையான மூலப்பொருள்கள். 16ஆம் நூற்றாண்டில் மதுரையைக் கைப்பற்றிய நாயக்க மன்னர்களின் ஆட்சிக் காலத்தில், வெளி மாநிலங்களில் இருந்து பல தொழில்களைச் செய்பவர்கள் தமிழகம் வந்தனர். அப்படி வட நாட்டில் இருந்து தமிழகம் வந்தவற்றுள் லாலா மிட்டாய் கடைகளும் ஒன்று. வழக்கமான இனிப்புக் கடைகளில் இருந்து மாறுபட்டு, சர்க்கரை, கடலைமாவு, நெய் சேர்த்துச் செய்யப்படும் இனிப்பு வகைகளை இந்தக் கடைகள் அறிமுகப்படுத்தின.
இவர்களது வருகைக்குப் பிறகே இனிப்பு, கார நொறுக்குத்தீனிகளை எண்ணெயில் பொரித்தெடுக்கும் பழக்கம் பரவலானது.
இப்போதும் கிராமத்துத் திருவிழாக்களில் பல்வேறு இனிப்பு வகைகளைப் பிரம்மாண்ட அடுக்குகளாக அடுக்கி வைத்து விற்கக்கூடிய கடைகளைப் பார்க்கலாம். இந்தக் கடைகளுக்கு மிட்டாய் கடை என்று பெயர். மிட்டாய் என்பது வடமொழி சொல் என்பதைக் கவனிக்க வேண்டும்.
திருப்பதி லட்டு
லட்டு என்றவுடன் மறக்க முடியாத மற்றொரு விஷயம், திருப்பதி கோயில் லட்டு. "திருப்பதிக்குப் போய்விட்டு வந்தேன்" என்று யாராவது சொன்னால், உடனடியாக அவர்களிடம் கையை நீட்டி "லட்டு எங்கே?" என்றுதான் நம்மில் பலரும் கேட்போம். திருப்பதி லட்டின் தனிச்சுவை அந்த அளவுக்குப் பிரபலம். 1920கள் முதல் லட்டு இங்கே பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறதாம். திருப்பதி வேங்கடாசலபதி கோயிலில் ஒரு நாளைக்கு 1.5 லட்சம் லட்டுகளுக்கு மேல் தயாரிக்கப்படுகின்றன. இதன் மூலம் ஒரு வருஷத்துக்குக் கிடைக்கும் லாபம் ரூ. 2 கோடி என்கிறார்கள்.