

‘மூக்குப் புடைப்பாக இருந்தால் இப்படியெல்லாம் யோசிக்கத் தோணும்’ என்கிற வடிவேலு காமெடி மிகப் பிரபலம். ஆனால், நம் நாட்டைச் சேர்ந்த ஒருவர், மூக்கை வைத்து கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்! கணினி ‘கீ போர்டில்’ மூக்காலேயே ஆங்கில எழுத்துகளை வேகமாக டைப் செய்து, இந்தச் சாதனையைப் படைத்திருக்கிறார் 44 வயதான வினோத்குமார் சௌத்ரி.
அதுவும் 26.73 விநாடிகளில். டைப்பிங் செய்வதைப் பணியாகக் கொண்டிருந்தவர், அதில் மேற்கொண்டு என்ன சாதிக்கலாம் என்று யோசித்ததின் விளைவுதான் இந்த கின்னஸ் சாதனை. ஏற்கெனவே 2023இல் 27.8 விநாடிகளில் தான் செய்த சாதனையை அவரே இப்போது முறியடித்து, மற்றவர்கள் மூக்கின் மேல் விரல் வைக்கும்படி செய்திருக்கிறார்!
ஒரு ‘முக்கி’யப் பிரச்சினை! - பொதுவாகக் காலைக் கடனைக் கழிப்பதில் சிலருக்குப் பிரச்சினை இருக்கலாம். ஆனால், குழப்பம் இருந்தால் என்ன செய்வது? புரியவில்லையா? சீனாவில் கழிப்பறையை வடிவமைக்கும் கட்டடக்கலை வல்லுநர்கள் செய்த வேலை இப்போது பிரச்சினையில் கொண்டுபோய் விட்டிருக்கிறது. பொதுக் கழிப்பிடங்களில் ஆண் - பெண் கழிவறைகள் என்பதை அடையாளப்படுத்த ஆண் - பெண் உருவங்களைப் பொறித்து வைப்பார்கள்.
ஆனால், சீனாவில் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப ஆண் - பெண் உருவங்களை யாரும் புரிந்துகொள்ள முடியாத வகையில் கழிவறைக்கு வெளியே பொறித்து வைத்துவிட்டனர். இதனால் யார் எந்தக் கழிவறைக்குச் செல்வது என்பதில் குழப்பம் ஏற்பட்டுவிட்டது. பலரும் இடம் மாறிக் கழிவறைக்குச் சென்றதால் களேபரமாக மாறிவிட்டது.
காவல் நிலையம் வரை புகார் சென்றுவிட்டதாம். நம் ஊரைப் போல எளிமையாக யோசிக்க வேண்டியதை டிசைன் டிசைனாக யோசித்ததால் வந்த வினை இது. - ஆர். மனோஜ்