

சினிமா, தொழில்நுட்பம், விளையாட்டு போன்ற துறைகளில் மட்டுமே இன்றைய தலைமுறை ஈடுபாடு காட்டுகிறது. அரசியல் குறித்தெல்லாம் அவர்களது நட்பு வட்டங்களில் பெரிதாகப் பேசுவதும் இல்லை, கண்டுகொள்வதும் இல்லை என்று பொதுவான விமர்சனம் உண்டு.
ஆனால், வழக்கத்துக்கு மாறாக, இந்த மக்களவைத் தேர்தலில் இணையத்தில் இளைய தலைமுறையினர் பலரும் போட்டிபோட்டுக் கொண்டு அரசியல் கருத்துகளை முன்வைத்து பேசியதை பார்க்க முடிந்தது. குறிப்பாக, யூடியூபில் இன்ஃபுளூயன்சர்கள் அரசியலை முன்வைத்து பொதுத்தளத்தில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தத் தவறவில்லை.
துருவ் ராத்தி: இந்த மக்களவைத் தேர்தல் குறித்து ஆழமான அரசியல் பார்வையை முன்னிறுத்திய இன்ஃபுளுயன்சர்களில் முதன்மையானவர் துருவ் ராத்தி. தரவுகளை அடுக்கிக் கூறும் துருவ்வின் ஒவ்வோர் அரசியல் வீடியோவும் வட இந்திய இளைஞர்களிடம் பெரும் கவனத்தை ஈர்த்தன.
இவருடைய ஒவ்வொரு காணொளியும் கோடிக்கணக்கில் பார்வைகள் பெற்றது ஓர் உதாரணம். குறிப்பாக அரசுக் கொள்கைகள், சமூகப் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டிய துருவ்வின் காணொளிகள் மொழிகளைக் கடந்து அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைந்தன. குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு எதிராக இவருடைய காணொளிகள் இருப்பதாகக் கருதப்பட்டாலும், அதையும் முகம் சுளிக்காமலும் தரவுகளின் அடிப்படையிலும் அவர் பேசும் விதம் இவருடைய காணொளிகளுக்கு ரசிகர்களைக் கூட்டியது.
‘சாமானிய மக்களின் பலத்தைக் குறைவாக எண்ணாதீர்கள்’ எனக் கூறும் துருவ், சாமானிய மக்களின் குரலாகவே இத்தேர்தலில் ஒலித்தார். இவர் தமிழிலும் பிரத்யேகமாக ஒரு யூடியூப் அலைவரிசையைத் தொடங்கி காணொளிகளைப் பதிவேற்றி வருகிறார்.
பீர் பைசெப்ஸ்: ‘பீர் பைசெப்ஸ்’ என்கிற யூடியூப் அலைவரிசை மூலம் அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், பொருளாதார வல்லுநர்கள் என அனைத்துத் துறைசார் ஆளுமைகளிடமும் சுவாரசியமான முறையில் நேர்காணல்களைப் பதிவுசெய்து வருகிறார் ரன்வீர் அல்லாபாடியா.
இவருடைய நேர்காணல்கள் பலவும் தகவல்களுடன் யதார்த்தமாக இருப்பதால், இன்றைய இளைஞர்களின் இன்ஃபுளுயன்சர்கள் விருப்பத் தேர்வில் ரன்வீரும் இருக்கிறார்.
சம்திஷ் பாட்டியா: அரசியல் பிரபலங்களை நையாண்டி செய்து ஆக்கபூர்வமாக நேர்காணல் செய்வதில் சம்திஷ் தேர்ந்தவர். சம்திஷின் அரசியல் தரவுகள் கருத்துகளை ஒளிவு மறைவின்றி தெரிய வைப்பவை. அரசியல் பிரச்சாரப் பேரணிகளில் பங்கேற்ற சம்திஷ், மக்களை நேரடியாகச் சந்தித்து, அரசியல் கட்சிகளிடம் மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதைக் களத்திலிருந்து வெளிப்படுத்தினார்.
மேலும் இந்தியாவின் குக்கிராமங்களுக்குப் பயணம் செய்து, எளிய மக்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளையும் சம்திஷ் வெளிச்சம் போட்டுக் காட்டினார்.
ராண்டிங் கோலா: நகைச்சுவை நிகழ்த்துக் கலைஞரான ஷமிதா யாதவ் வேலையின்மை, விலைவாசி உயர்வு, சுகாதாரம், பெண் பாதுகாப்பு குறித்துத் தொடர்ச்சியாகக் குரல் கொடுக்கும் இன்ஃபுளூயன்சர்.
'ராண்டிங் கோலா’ (Ranting gola) என்கிற யூடியூப் அலைவரிசை மூலம் அன்றாட அரசியல் நிகழ்வுகளை அவருக்கே உரிய நகைச்சுவைப் பாணியில் பொது மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார் ஷமிதா யாதவ். காட்டமான செய்திகளையும் லகுவாக மக்களிடம் சேர்ப்பது இவரது தனித்துவம்.