

திறன்பேசியை வைத்து இன்று பல வேலைகளைச் செய்துவிட முடிகிறது. அதற்கு ’பிளே ஸ்டோ’ரில் கொட்டிக்கிடக்கும் செயலிகளும் உதவுகின்றன. அப்படி ஒரு செயலிதான் ‘Vaux - Video and Audio Editor’ நீங்கள் இப்போதுதான் வீடியோ, போட்டோ எடிட்டிங் செயலிகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் இந்தச் செயலியைப் பயன்படுத்தலாம்.
இது எடிட்டிங் வேலைகளை மிகச் சுலபமாக செய்து முடிக்க உதவுகிறது. அதேபோல் எளிதில் புரிந்துகொள்ளும்படியும் இருக்கிறது. இந்தச் செயலியில் வீடியோ எடிட்டிங் மட்டுமல்ல, ஆடியோ எடிட்டிங்கும் செய்யலாம்.
எடிட்டிங் செயலிகளை ஏற்கெனவே ஓரளவுக்கு நீங்கள் பயன்படுத்திய அனுபவம் இருந்தால், அடுத்த கட்டமாக ‘Video Editor & Maker - InShot’ என்கிற செயலியைப் பயன்படுத்தலாம். ஒளிப்படங்களை ஸ்டிக்கராகவும், வீடியோ, ஆடியோவை ‘ஃபில்டர் எஃபெக்ட்’ மூலம் விதவிதமாகவும் மாற்றிக்கொள்ளலாம். செயற்கை நுண்ணறிவுத் (ஏ.ஐ.) தொழில்நுட்பமும் இந்தச் செயலியில் உள்ளதால் இன்னும் பல விஷயங்களைச் செய்யலாம். எடிட்டிங்கில் ஓரளவு அனுபவம் உள்ளவர்களுக்கு இது மிகவும் உபயோகமான செயலியாக இருக்கும்.
எடிட்டிங்கில் நீங்கள் ஏற்கெனவே கைதேர்ந்தவர்? எனில், ‘VN - Video Editor & Maker’ என்கிற செயலி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தொழில்முறையில் எடிட்டிங் பணியில் என்னென்ன விஷயங்களைச் செய்ய முடியுமோ, அனைத்தையும் இதில் செய்ய முடியும். ஒளிப்படம் அல்லது வீடியோவில் பின்னணியை நீக்குதல், கலர் கிரேடிங் ஃபில்டர் எஃபெக்ட் போன்ற அம்சங்கள் இதில் இருக்கின்றன. அனிமேஷன் பணிகளுக்கும் இந்தச் செயலியைத் தாராளமாகப் பயன்படுத்தலாம்.
சமூக வலைதளங்களில் உங்கள் பக்கங்களைப் தனித்துவமாகக் காட்ட இந்தச் செயலிகளை வைத்து அசத்தலாம். இவற்றை இலவசமாகப் பயன்படுத்தலாம். சில கூடுதல் பயன்பாட்டுக்கு மட்டும் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
- சுரேஷ். ஜி