அலப்பறைகளைக் கூட்டும் ‘ரீ-ரிலீஸ்’ ரசிகர்கள்!

அலப்பறைகளைக் கூட்டும் ‘ரீ-ரிலீஸ்’ ரசிகர்கள்!
Updated on
3 min read

முன்பெல்லாம் பொங்கல், தீபாவளி, புத்தாண்டு எனப் பண்டிகைகளுக்கு வெளியாகும் உச்ச நட்சத்திரங்களின் திரைப் படங்களால்தான் திரையரங்குகள் விழாக்கோலம் காணும். தற்போது டிரெண்டாகி வரும் ‘ரீ-ரிலீஸ்’ கலாச்சாரத்தால் ‘கொண்டாட்டம்’ திண்டாட்டமாகப் போய்விட்டது. ஏற்கெனவே ஒரு தசாப்தத்துக்கு முன்பு வெளியாகி ‘ஹிட்’டான படங்களை ‘ரீ-ரிலீஸ்’ செய்யும் போக்கு அதிகரித்துள்ள நிலையில், இளம் ரசிகர்களின் திரையரங்கக் கொண்டாட்டங்கள் கேள்விக்குள்ளாகி வருகின்றன.

மறக்க முடியாத அனுபவம்: முன்னணி நடிகர்களின் பிறந்த நாளன்றும், ஒரு திரைப்படம் வெளியாகி வெற்றிபெற்று 15, 20 ஆண்டுகளை நிறைவு செய்ததன் நினைவாகவும், ‘காதலர் தினம்’, ‘நண்பர்கள் தினம்’ போன்று சிறப்பு நாள்களிலும் பழைய படங்கள் ‘ரீ-ரிலீஸ்’ செய்யப்படுவது இன்று வாடிக்கையாகிவிட்டது.

அந்த வகையில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘கில்லி ’ திரைப்படம், அண்மையில் திரையரங்குகளில் மீண்டும் வெளியாகி வசூலை வாரிக்குவித்தது. ஒரு புதிய படத்துக்குக் கூட்டம் அலைமோதுவது போல் சிறியவர் முதல் பெரியவர் வரை திரையரங்குகளுக்குச் சென்று படத்தைப் பார்த்துக் கொண்டாடினர். இது மறக்க முடியாத அனுபவம் என்கிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த சகுந்தலாதேவி.

“சில படங்கள் நம் சிறு வயது நினைவுகளோடு ஒன்றிப்போயிருக்கும். 80ஸ், 90ஸ், 2கே என ஒவ்வொரு தலைமுறையினருக்கும் அப்படி ஓரிரு படங்கள் ‘ஃபேவரைட்’டாகக் கண்டிப்பாக இருக்கும். 90ஸ் கிட்ஸ் பெரும்பாலானோருக்கு ‘கில்லி’ அப்படியான ஒரு படம்தான். படத்தின் தொடக்கம் முதல் கிளைமேக்ஸ் வரை ஒவ்வொரு வசனமும் பாடலில் இடம்பெற்ற நடனமும் எனக்கு அத்துப்படி.

அப்போது திரையரங்கில் பார்க்க முடியாமல் போன இந்தப் படத்தைத் தற்போது பெரிய திரையில் பார்த்ததும், கொண்டாடியதும் மறக்க முடியாத அனுபவம். காலத்துக்கும் நிலைத்து நிற்கும் படங்கள் எனச் சொல்லக்கூடிய ‘ஹிட்’ படங்கள் ‘ரீ-ரிலீஸ்’ செய்யப்படுவது நல்ல விஷயமே” என்கிறார் சகுந்தலாதேவி.

‘கான்சர்ட்’ ஆகும் திரையரங்குகள்: எம்.ஜி.ஆரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’, சிவாஜியின் ’கர்ணன்’ எனத் தொடங்கி ‘பாட்ஷா’ ‘3’, ‘வேட்டையாடு விளையாடு’, ‘கில்லி’, ‘வாலி’, ‘விண்ணை தாண்டி வருவாயா’, ‘வாரணம் ஆயிரம்’, ‘யாரடி நீ மோகினி’ என ‘ரீ-ரிலீஸ்’ ஆன படங்களின் பட்டியல் நீள்கிறது.

இந்த வாரம்கூட கேரளத்தில் சூர்யாவின் ‘கஜினி’ படம் ரீ-ரிலீஸ் ஆகிறது. இதேபோல வரும் நாள்களில் ‘ரீ-ரிலீஸ்’ ஆகத் தயார் நிலையில் இருக்கும் படங்களின் பட்டியலும் நீள்கின்றன. தமிழ் சினிமா ரசிகர்களின் ‘நாஸ்டால்ஜியா’ உணர்வைக் கிளறி விடுவதற்காக ‘ரீ-ரிலீஸ்’ என்று தொடங்கப்பட்ட இந்தக் கலாச்சாரம், ‘இன்ஸ்டகிராம்’ ரசிகர்களின் பிடியில் தற்போது சிக்கிக்கொண்டதுதான் சோகம்.

‘ரீ-ரிலீஸ்’ படங்களைப் பார்க்கப் பிடிக்கும், ஆனால் ’சில’ விஷயங்கள் மட்டும் வேண்டாமே என ஆதங்கப்படுகிறார் சென்னையைச் சேர்ந்த அர்ஜுன். “சரியான கதைக்களமும் இசையும் பாடல்களும் சண்டைக் காட்சிகளும் நடிகர்களின் அட்டகாசமான நடிப்பும் ஒரு திரைப்படத்தை ‘ஒன்ஸ்மோர்’ பார்க்கத் தூண்டுவது இயல்பானதுதான்.

அர்ஜூன்
அர்ஜூன்

ஆனால், அப்படி ‘ஒன்ஸ் மோர்’ பார்க்க வைக்கும் படங்களின் எண்ணிக்கைக் குறைந்துவிட்டது. ‘பாட்ஷா’, ‘கில்லி’ போன்ற படங்களெல்லாம் தொலைக்காட்சியில் பல முறை பார்த்திருந்தாலும் பெரிய திரை தரும் அனுபவம் தனித்துவமானது. இதனால்தான் அப்போது ‘ஹிட்’ அடித்த படங்களை மீண்டும் திரையரங்குகளில் காண ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

படத்தைப் பார்த்தோம், கொண்டாடினோம் என்கிற அளவில் ‘ரீ-ரிலீஸ்’ கலாச்சாரம் போதுமானது. ஆனால், பெரும்பாலான ‘ரீ-ரிலீஸ்’ காட்சிகளில் திரைப்படத்தைத் திறன்பேசியில் படம் பிடித்துக்கொண்டும், ‘ரீல்ஸ்’ எடுத்துக்கொண்டும், பாடல்களைப் பாடிக்கொண்டும் திரையரங்கை ஒரு ‘கான்சர்ட்’ நிகழ்ச்சிக்கான இடம் போல மாற்றிவிடுகிறார்கள் ‘இன்ஸ்டகிராம்’வாசிகள்.

இது மாதிரியான கொண்டாட்டம் அனைவருக்கும் ஏற்புடையதாக இருப்பதில்லை. இதனால், படத்தைப் பார்க்க வருபவர்கள் எரிச்சல் அடையாமல் இருக்க முடியாது. இதுபோன்று சில விஷயங்களைத் தவிர்த்துவிட்டால் நன்றாக இருக்கும்” என்கிறார் அர்ஜுன்.

எல்லை மீறும் கொண்டாட்டங்கள்: இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக் ‘ரீல்ஸ்’ மோகத்தால் திரையரங்கில் பாடுவது, ஆடுவது என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் ‘ரீ-ரிலீஸ்’ காட்சியின்போது திரையரங்குக்குள் பட்டாசு வெடித்த நிகழ்வும் சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் அரங்கேறியது. தீவிர விசிறிகளின் ‘பேனர் அபிஷேகம்’, ‘கட்-அவுட்’ ஆகியவற்றின் நீட்சியாகவே இது பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே டிரெய்லர் வெளியீடு நிகழ்ச்சி ஒன்றில் விஜய் ரசிகர்கள் திரையரங்கு ஒன்றின் நாற்காலிகளை உடைத்து சேதாரத்தைக் கூட்டினர்.

அதற்குப் போட்டியாக யார் ‘கெத்து’ என்பதை நிரூபிக்கவும் (அப்படியாக நினைத்துக்கொண்டு) அஜித் ரசிகர்களின் எதிர்வினை செயலாகத் திரையரங்கில் பட்டாசுகள் கொளுத்தும் உபயம் அமைந்தது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல அண்டை மாநிலமான ஆந்திரத்திலும் ரீ-ரிலீஸை வேறு வடிவத்தில் கொண்டாடும் ரசிகர்கள் அதிகரித்தவண்ணம் உள்ளனர்.

சகுந்தலாதேவி
சகுந்தலாதேவி

இதற்கு முன்பும் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. எல்லை மீறும் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடிகர்களின் கட்-அவுட்டுக்கு மாலை சூட்டும்போது கீழே தவறி விழுவது, வரம்பு மீறிய சாகசச் செயலில் ஈடுபடுவது போன்ற சம்பவங்களால் உயிர் சேதமும் பொருள் சேதமும் ஏற்படுவதை இளம் ரசிகர்கள் எப்போது உணர்ந்துகொள்வார்கள் என்கிற கேள்விகள் எழாமல் இல்லை. குறைந்தபட்சம் பிறருக்கு இடையூறு தராத, அலைப்பறைகளைக் கூட்டாத கொண்டாட்ட மனநிலையை இன்றைய இளம் ரசிகர்கள் கற்றுக் கொள்வது நல்லது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in