

மாற்றுத் திறனாளிகளுக்காக நடத்தப்படும் பாராலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களின் கனவு, உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வெல்வதாகத்தான் இருக்கும். சேலம் மாவட்டம் பெரிய வடக்கம்பட்டியைச் சேர்ந்த 28 வயதான மாரியப்பன் தங்கவேலுவின் அந்தக் கனவு ஜப்பானின் கோபே நகரில் நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நிறைவேறியிருக்கிறது. ஆம், உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்று புதிய உயரத்தை எட்டியிருக்கிறார் மாரியப்பன்.
2016இல் பிரேசிலின் ரியோடி ஜெனிரோவிலும் 2021இல் ஜப்பானின் டோக்கியோவிலும் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் முறையே தங்கம், வெள்ளி ஆகிய பதக்கங்களை மாரியப்பன் வென்றிருந்தார். 2022இல் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்ற ஆசிய பாரா போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தார்.
பாராலிம்பிக், ஆசிய பாரா ஆகிய போட்டிகளில் பதக்கங்களை வென்றிருந்த மாரியப்பனுக்கு உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வெல்லாதது மட்டும் குறையாக இருந்தது. கடந்த ஆண்டு பாரிஸில் நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை நூலிழையில் மாரியப்பன் இழந்தார்.
எனவே இந்த ஆண்டு நடைபெறும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் எப்படியும் பதக்கம் வெல்ல வேண்டும் என்கிற எதிர்பார்ப்பில் இருந்தார். இந்த முறை கோபே நகரில் நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் அவர் சாதித்துக் காட்டிவிட்டார்.
உயரம் தாண்டுதலில் (டி63 பிரிவு) களமிறங்கிய மாரியப்பன், 1.88 மீ.உயரம் தாண்டி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இந்த முறை 1.95 மீ. உயரம் தாண்டுவதை மாரியப்பன் இலக்காகக் கொண்டிருந்தார். ஆனால், குளிரில் தசைகள் இறுக்கமாகிவிட்டதால் அவரால் 1.88 மீ. மட்டுமே தாண்ட முடிந்திருக்கிறது.
உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்காக அமெரிக்கா சென்று 4 மாதங்களுக்கு வெளிநாட்டுப் பயிற்சியாளர் உதவியிடன் இத்தொடருக்குத் தயாராகியிருக்கிறார். அதற்கு அவருக்கு கை மேல் பலனும் கிடைத்திருக்கிறது. மேலும் இந்த ஆண்டு ஆகஸ்ட் - செப்டம்பரில் பாரிஸில் பாராலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தப் போட்டியில் நம்பிக்கையுடன் பங்கேற்பதற்கு உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் மாரியப்பன் தங்கப் பதக்கம் வென்றது உத்வேகம் அளிக்கும் என்று நம்பலாம்.