

“சும்மா இருக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? நீ வேணா ஒரு நாள் சும்மா இருந்து பாரேன்” என்று திரைப்படம் ஒன்றில் நடிகர் வடிவேலு நகைச்சுவையாகச் சவால் விடுவார். ஆனால், உண்மையாகவே இப்படி ஒரு தலைமுறை சீனாவில் உருவாகி வருகிறது.
கரோனா காலத்துக்குப் பிறகு வாழ்க்கையில் பல மாற்றங்கள் உருவாகி வருகின்றன. குறிப்பாக வாழ்க்கை முறை சார்ந்து புதிய புதிய சோதனைகளுக்கு இளைஞர்கள் தங்களை உள்படுத்திக் கொள்கிறார்கள். அவற்றுள் ஒன்றுதான் ‘ஹங் இங்’ (Tang Ping) என்கிற வாழ்க்கை முறை. இதை ஆங்கிலத்தில் ‘லையிங் ஃபிளாட்’ (lying Flat) என அழைக்கிறார்கள்.
தப்பித்தல்: வேலை, சமூகப் படிநிலைகளை நிராகரிப்பதே ‘ஹங் இங்’ வாழ்க்கை முறையின் தத்துவம். அதாவது, நமக்குக் கற்பிக்கப்பட்ட வாழ்க்கையின் போட்டிமயத்திலிருந்து (Rat Race) தப்பித்துக் கொள்வது.
எப்போது உருவானது? - உலகின் பல நாடுகளிலும் 2021இல் கரோனா உச்சத்தில் இருந்தபோது சீனாவின் சமூக வலைதளங்களில்தான் ‘ஹங் இங்’ என்கிற சொல் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. ஊரெங்கும் கடைப்பிடிக்கப்பட்ட பொது முடக்கத்தின் விளைவால், வாழ்க்கைப் பரபரப்பை இழந்து மெதுவாகச் செல்லத் தொடங்கியது அல்லவா? அப்போதுதான் வேலையே வாழ்க்கை அல்ல என்பதைச் சீன இளைஞர்கள் உணரத் தொடங்கினர்.
அதன் வெளிப்பாடாகவே ‘ஹங் இங்’ வாழ்க்கைமுறையை சீன இளைஞர்கள் நாடத் தொடங்கினர். ‘ஹங் இங்’ கலாச்சாரம் சீனாவில் மட்டுமல்ல, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் தற்போது பரவிவருகிறது.
என்ன செய்கிறார்கள்? - ‘ஹங் இங்’ வாழ்க்கை முறையை ஏற்றுக் கொண்ட இளைஞர்கள் வேலை, திருமணம், குழந்தை, சொந்தமாக வீடு என எதையும் தங்கள் வாழ்வில் இலக்காகக் கொண்டிருப்பதில்லை. மாறாக, உண்பது, நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடுவது, பிடித்ததைச் செய்வது, நிம்மதியாக உறங்குவது போன்ற செயல்களையே ‘ஹங் இங்’ இளைஞர்கள் பின்பற்றுகின்றனர்.
இந்த வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிப்பவர்கள் கடைசிக் காலம் வரை வேலைக்கே செல்லமாட்டார்களா என்கிற கேள்வி எழலாம். சிலர் பணம் தேவைப்படும்போது வேலைக்கும் செல்கிறார்கள். ஆனால், அந்த வேலை எந்த அழுத்தத்துக்கும் உள்பட்டதாக இருக்கக் கூடாது என்பதே அவர்களுடைய தேர்வாக இருக்கிறது.
சுயத்தைத் தேடல்: கடந்த மூன்று ஆண்டுகளில் ‘ஹங் இங்’ முறையால் ஈர்க்கப்பட்ட சீனாவின் 90ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ் தங்கள் வேலைகளை உதறித் தள்ளியிருக்கிறார்கள்.
சீனாவில் ‘ஹங் இங்’ வாழ்க்கை முறைக்கு இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தாலும் எதிர்ப்புகள் இல்லாமல் இல்லை. ஏனெனில் ஒரு நாட்டின் வருங்காலமே இளைஞர்களை நம்பித்தான் இருக்கிறது. சீன இளைஞர்களின் இந்த விபரீத வாழ்க்கைமுறை நாட்டின் பொருளாதாரத்துக்கு எந்த வகையிலும் உதவாது என இளைஞர்களுக்குச் சீனத் தலைவர்கள் அறிவுரைக் கூறத் தொடங்கியுள்ளனர்.
ஆனால், வேலையால் வாழ்க்கையைத் தொலைப்பதாக நம்பும் சீன ‘ஹங் இங்’ இளைஞர்கள், தங்கள் சுயத்தை அடைய இது உதவுவதாக உறுதியாக நம்புகின்றனர்.