

ஐபிஎல் கிரிக்கெட் இறுதிக் கட்டத்தில் உள்ளது. 2024 ஐபிஎல் தொடரில் ஏராளமான இளம் இந்திய வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அவர்களில் சிலர் சூப்பர் ஸ்டார்களாக உருவெடுத்து, கிரிக்கெட் ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தனர். இதுவரை பெரிய அளவில் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்காமல் இந்த ஐபிஎல்லில் சாதித்த சில வீரர்கள்:
அபிஷேக் சர்மா: சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைச் சேர்ந்த 23 வயதான அபிஷேக் சர்மா, முன்வரிசை வீரராகக் களமிறங்கி கருணையில்லாமல் எதிரணி பந்துவீச்சுகளைச் சிதறடிக்கும் ஆற்றல் கொண்டவர். இவருடைய சூறாவளி பேட்டிங்கால் ஹைதராபாத் அணி பலன் அடைந்தது.
இந்த ஐபிஎல் தொடரில் 13 சுற்றுப் போட்டிகளில் விளையாடி 467 ரன்களைக் குவித்திருக்கிறார் அபிஷேக். இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 209.42. இந்தத் தொடரில் 41 சிக்ஸர்களை விளாசி, ஒரு ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரராகவும் உருவெடுத்திருக்கிறார்!
சாய் சுதர்சன்: சென்னையைச் சேர்ந்த 22 வயதான சாய் சுதர்சன், 2022இல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ரூ. 20 லட்சம் என்கிற அடிப்படை விலையில் வாங்கப்பட்டவர். 2023இல் கேன் வில்லியம்சன் அடைந்த காயத்தால் குஜராத் ஆடும் லெவனில் இவருக்கு இடம் கிடைத்தது. அதை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டார்.
கடந்த ஆண்டு ஐபில் இறுதிப் போட்டியில் சென்னைக்கு எதிராக சாய் சுதர்சன் விளாசிய 96 ரன்கள், அவரைத் திரும்பிப் பார்க்க வைத்தது. இந்த ஐபிஎல் சீசனில் தொடக்க வீரராக 12 போட்டிகளில் களமிறங்கி 527 ரன்களைக் குவித்தார். இதில் சென்னைக்கு எதிராக விளாசிய ஒரு சதமும் அடங்கும். அதிக ரன் குவித்தவர்களின் பட்டியலிலும் சாய் சுதர்சன் ஐந்தாமிடத்தைப் பிடித்தார்.
சிவம் துபே: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த 30 வயதான சிவம் துபே, அநாயசமாக சிக்ஸ்ர்களை விளாசுவதில் வல்லவர். இதனாலேயே ‘ஆறுச்சாமி’ என்று செல்லமாகச் சென்னை ரசிகர்கள் அழைத்தனர். இந்தத் தொடரில் நடுவரிசையில் இறங்கி, அதிரடியாக விளையாடி, சென்னை அணிக்குச் சில வெற்றிகளைத் தேடித்தந்தார். இந்தத் தொடரில் 14 லீக் போட்டிகளில் விளையாடி 396 ரன்களைக் குவித்தார்.
இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 162.30. இந்தத் தொடரில் 28 சிக்ஸர்களை விளாசி ரசிகர்களைக் கவர்ந்திருந்தாலும் கடைசிக் கட்டத்தில் சிவம் துபே சொதப்பவும் செய்தார். இவருடைய ‘பவர் ஹிட்’ சிக்ஸூக்காகவே 2024 டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணியில் தேர்வாகியுள்ளார்.
ஆயுஷ் பதோனி: லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணியைச் சேர்ந்த 24 வயதான ஆயுஷ் டெல்லியைச் சேர்ந்த பேட்ஸ்மேன். ஆஃப் பிரேக் பந்துவீசவும் இவருக்குத் தெரியும். 2023இல் லக்னோ அணி பதோனியை ரூ. 20 லட்சத்துக்கு வாங்கியது. அதிரடிப் பாணியைப் பின்பற்றாமல் நேர்த்தியாக விளையாடி ரன்களைக் குவிப்பவர்.
இந்த ஐபிஎல் சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 235 ரன்களைக் குவித்தார். இதில் 2 அரைச் சதங்களும் அடங்கும். இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 137.43. வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரரான இவர், வருங்காலத்தில் இன்னும் உயரங்களை எட்ட வாய்ப்புள்ள வீரர்.
ப்ரப்சிம்மன் சிங்: கடந்த ஐபிஎல் சீசனில் ஒரு சதம் விளாசித் திரும்பிப் பார்க்க வைத்தவர் பஞ்சாப் கிங்ஸ் அணியைச் சேர்ந்த 23 வயதான ப்ரப்சிம்மன் சிங். இந்தத் தொடரிலும் சீராக விளையாடி எதிரணி பந்துவீச்சைச் சிதறடித்தார். ஹைதராபாத் அணிக்கு எதிராக ப்ரப்சிம்மன் அடித்த 71 ரன் பேசப்பட்டது.
ஆனால், பஞ்சாப் அணியைத் துரத்தும் துரதிர்ஷ்டம் இந்த ஆண்டும் தொடர்ந்ததால், ப்ரப்சிம்மனின் ஆட்டம் அந்த அணிக்குக் கைகொடுக்காமல் போனது. இந்தத் தொடரில் 14 ஆட்டங்களில் விளையாடி 334 ரன்களைக் குவித்தார். இதில் 20 சிக்ஸர்கள் அடங்கும். இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 156.81.
ரியான் பராக்: இந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 22 வயதான ரியான் பராக், டி20 சூறாவளியாகப் புறப்பட்டிருக்கிறார். இவருடைய பேட்டிங் ராஜஸ்தான் அணிக்குப் பக்கபலமாக இருந்தது. நடுவரிசையில் இறங்கி, அணிக்குத் தேவையானதைச் செய்தார். இது ராஜஸ்தான் அணி பிளேஆஃப் செல்ல உதவியது. இந்தத் தொடரில் 12 லீக் போட்டிகளில் 531 ரன்களை ரியான் குவித்தார்.
இவருடைய சராசரி 59. ஸ்ட்ரைக் ரேட் 152.58. இந்த ஆண்டு அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் நான்காமிடம் ரியானுக்குத்தான். இவருடைய துடிப்பான ஆட்டம், ரசிகர்களை ஈர்த்ததைப் போல் தேர்வாளர்களையும் ஈர்த்தால், இந்திய அணியிலும் இவரைப் பார்க்கலாம்.
ஷஷாங்க் சிங்: ஐபிஎல்லில் ஒரு வீரரைத் தேர்ந்தெடுத்த ஓர் அணி, தவறுதலாகத் தேர்ந்தெடுத்துவிட்டோம் என்று கூறினால், அந்த வீரரின் மன உறுதி எப்படி இருக்கும்? அப்படி பஞ்சாப் அணியால் அறிவிக்கப்பட்டவர் 32 வயதான ஷஷாங்க் சிங்.
ஆனால், அணி நிர்வாகத்தின் அந்த எண்ணத்தைத் தன்னுடைய செயல்பாடுகளால் தவிடுபொடியாக்கினார். 2022 சீசனில் ஷஷாங்க் சொதப்பியிருந்தாலும், இந்த சீசனில் 14 லீக் போட்டிகளில் விளையாடி 354 ரன்களைக் குவித்தார். இதில் அதிகபட்சம் 68. ஸ்ட்ரைக் ரேட் 164.65.
துஷார் தேஷ்பாண்டே: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆஸ்தான பந்துவீச்சாளர் 29 வயதான துஷார் தேஷ்பாண்டே. 2020 சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக 3 போட்டிகளில் மட்டுமே விளையாடிய தேஷ்பாண்டே, பின்னர் மஞ்சள் ஆர்மியில் இணைந்தார். டி20 போட்டிகள் பந்துவீச்சாளர்களுக்குச் சவாலானதாக மாறிவிட்ட நிலையில் ஓரளவுக்குக் கட்டுக்கோப்பாகப் பந்துவீசுகிறார்.
ஆனால், சில நேரத்தில் பிரஷர் தலைக்கு ஏறும்போது வைடாகவும் ஃபுல்டாஸாகவும் பந்துவீசி ரன்களை வாரிவழங்குவது இவருடைய பலவீனங்களில் ஒன்று. என்றாலும் விக்கெட் வீழ்த்துவதில் வல்லவராகவே இருக்கிறார். இந்த சீசனில் 13 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவருடைய பந்துவீச்சு ரன் விகிதம் 8.83. முந்தைய சீசன்களைவிட இந்த சீசனில்தான் குறைந்த ரன்களை விட்டுக்கொடுத்திருக்கிறார்.