‘பேய்’ பரிமாறும் கஃபே

‘பேய்’ பரிமாறும் கஃபே
Updated on
2 min read

நண்பர்களோடு ஒருசேர அரட்டை அடிக்க தேநீர்க் கடைதான் சரியான இடம் என்றிருந்த காலம் மலையேறிவிட்டது. கடந்த சில ஆண்டுகளில் நகரமெங்கும் ‘கஃபே’கள் மயமாகிவிட்ட நிலையில், இளைய தலைமுறையினரின் ஃபேவரைட் ‘ஸ்பாட்’டாக அவை மாறிவிட்டன. இதில் சாதாரண கஃபே முதல் ‘தீம்’ கஃபேகள் வரை பல ரகங்கள் உண்டு.

செல்லப் பிராணிகள் கஃபே: பெரும்பாலும் பொது இடங்களில், உணவகங்களில் வாடிக்கையாளர் எவரும் செல்லப் பிராணிகளை அழைத்து வர அனுமதியில்லை. ஆனால், செல்லப் பிராணி விரும்பிகளுக்கான பிரத்யேக கஃபேகள் சில சென்னையிலும் கோவையிலும் இயங்கி வருகின்றன. ‘

ட்விஸ்டி டேல்ஸ்’, ‘பொவ் பொவ் பிளிஸ்’ போன்ற கஃபேகளில் உணவகத்தைத் தவிர ‘பெட் ஏரியா’ ஒன்று, அதே வளாகத்துக்குள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், சில பூனைகளும் நாய்களும் வளர்க்கப்படுகின்றன.

செல்லப் பிராணியுடன் வருபவர்கள் தங்களுடைய பூனை, நாய்க் குட்டியை அந்த இடத்தில் விட்டுவிட்டு, புறப்படும்போது அழைத்துச் செல்லலாம். அதுவரை அங்குள்ள பராமரிப்பாளர்கள் கவனித்துக் கொள்வார்கள். செல்லப் பிராணிகள் இல்லை, ஆனால் அவற்றைப் பிடிக்கும் என்பவர்கள் இந்த கஃபேவுக்குச் சென்று, அங்கிருக்கும் பூனை, நாய்களுடன் நேரத்தைச் செலவிட்டும் வரலாம்.

‘ஓபன்’ கஃபே: பல வகை கஃபேகள் புதிதாகத் தோன்றினாலும் இந்த ‘ஓபன்’ கஃபேகளுக்கான மவுசு மட்டும் எப்போதும் குறைவதில்லை. வழக்கமாக நான்கு சுவருக்குள் அமைக்கப்படும் கஃபே போல் அல்லாமல், செடி, கொடிகள் சூழ்ந்த, அழகிய மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட, மனதுக்கு இதமான இசையை ஓடவிடக்கூடிய ‘செட்-அப்’போடு இருப்பது ‘ஓபன்’ கஃபே’யின் சிறப்பம்சம். ‘ஓபன்’ கஃபேகள் காதலர் அதிகம் கூடும் இடமாக இருந்தாலும், நண்பர்களின் அரட்டைக் கச்சேரிகளுக்கும் ஏற்ற இடமே!

திகில் கஃபே: ‘ஓபன்’ கஃபேவுக்கு நேரெதிரான ‘செட்-அப்’பில் இயங்குவதுதான் திகில் கஃபே. பளிச்சென்ற மின்விளக்குகளும் மெல்லிய இசையும் இன்றி மெழுகுவத்தி வெளிச்சமும் அச்சம் தரும் சுவரோவியங்களும் பொம்மைகளும் சூழ இந்த கஃபேகள் அமைக்கப்படுகின்றன.

சென்னையின் சில இடங்களில் இயங்கும் திகில் கஃபேகளில் உணவு கொண்டுவருபவரும் ‘பேய்’ போன்ற தோற்றத்தில்தான் உணவு வகைகளைப் பரிமாறுவாராம்! பயமும் சாகசமும் கலந்த ஒரு புதிய அனுபவத்துக்குத் திகில் கஃபேவுக்குச் சென்று பார்க்கலாம்!

‘கேம்’ கஃபே: சாப்பிட்டுக்கொண்டே கேரம், செஸ், ட்ரம்ப் கார்ட்ஸ் போன்ற விளையாட்டுகளை விளையாடினால் எப்படி இருக்கும்? அப்படிச் சாப்பிட்டுக்கொண்டே விளையாடுவதற்காக சில கஃபேகள் இருக்கின்றன. ‘போர்டு கேம்ஸ்’ விளையாட்டுகள் குவிந்து கிடக்கும் சென்னையில் ‘போர்டு லாஞ்ச்’, ‘போர்டு ரூம்’ கஃபேகள் இந்த ரகத்தைச் சேர்ந்தவை.

‘கேம்’ கஃபேவுக்குச் சென்று, உணவு வகைகளை ஆர்டர் செய்துவிட்டு, அங்கு வைக்கப்பட்டிருக்கும் ‘போர்டு’ விளையாட்டுகளை எடுத்து விளையாடலாம். மூளைக்கு வேலை தரக்கூடிய பல ‘போர்டு’ விளையாட்டுகள் கண்டிப்பாகப் புது அனுபவத்தைத் தரும்.

‘புக்’ கஃபே: குழந்தைகள், பெரியவர் என அனைவரும் கூடும் இடமாக கஃபேகள் இருப்பதால், சில கஃபேகளில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. சென்னையில் பிரபலமான ‘ரைட்டர்ஸ் கஃபே’, ‘காஃபி அன் ரீசார்ஜ்’ போன்ற இடங்களில் உணவு சாப்பிடுவதற்கான ‘டைனிங்’ இடத்தைத் தாண்டிச் சில நூறு புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

‘மினி’ நூலகமாகச் செயல்படும் இவை, உணவக வளாகத்துக்குள்ளேயே உள்ளன. ஒரு காபியைப் பருகுவதற்குள் அங்கிருக்கும் புத்தகங்களின் சில பக்கங்களைப் புரட்டிப் பார்த்தும், விருப்பம் இருந்தால் புத்தகங்களை வாங்கியும் வரலாம். வாசிப்புப் பிரியர்களுக்கான பிரத்யேக கஃபே இவை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in