அல்ட்ராவயலட் சென்ஸார் வசதியுடன் முதல் ஸ்மார்ட்போன்

அல்ட்ராவயலட் சென்ஸார் வசதியுடன் முதல் ஸ்மார்ட்போன்
Updated on
1 min read

கொரிய நிறுவனமான சாம்சங் ஸ்மார்ட் போன் மார்க்கெட்டில் தனியிடம் பிடித்துள்ளது. இந்நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பரில் சாம்சங் கேலக்ஸி நோட் 3 ஐ அறிமுகப்படுத்தியது. ஆண்டுதோறும் ஜெர்மனியில் நடைபெறும் ஐரோப்பாவின் பெரிய டெக்லானஜி எக்ஸ்போவை (ஐஎஃப்ஏ) ஒட்டியே சாம்சங் கேலக்ஸி நோட் 3 வெளியிடப்பட்டது.

இதே போன்று இந்த ஆண்டும் ஜெர்மனியின் பெர்லின் நகரில் வரும் செப்டம்பரில் ஐஎஃப்ஏ நடைபெற உள்ளது. இதற்குச் சில தினங்கள் முன்னதாக செப்டம்பர் 3 அன்று சாம்சங் கேலக்ஸி நோட் 4 ரிலீஸாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஐஎஃப்ஏ நிகழ்வை ஒட்டி ஆப்பிளின் ஐபோன் 6 அறிமுகமாகும் எனச் செய்திகள் பரவியுள்ள சூழலில் அதற்கு முன்னதாகவே தனது புதிய கேட்ஜெட்டைக் களமிறக்க சாம்சங் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்தச் செய்தி டெக்னாலஜி பிரியர்களைக் குதூகலப்படுத்தியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 4-ன் அறிமுக விழா தொடர்பான அதிகாரபூர்வ அழைப்பிதழை விரைவில் அந்நிறுவனம் அனுப்ப உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. நோட் 4 ஸ்மார்ட்போனும் டேப்லெட்டும் இணைந்த ஃபேப்லெட் வகையைச் சேர்ந்தது.

மேலும் இதுதான் அல்ட்ரா வயலட் சென்ஸார் கொண்ட முதல் ஸ்மார்ட் போன் என்றும் தெரிகிறது. நோட் 4-ல் நிறுவப்பட்டுள்ள ‘எஸ் ஹெல்த்’ என்னும் மொபைல் ஆப்ஸ் அல்ட்ரா வயலட் கதிர்களை உணர உதவுகிறது.

நான்காம் தலைமுறை எல்டிஇ மொபைல் வயர்லெஸ் டெக்னாலஜி எனச் சொல்லப்படும் தொழில்நுட்பத்திற்கு உதவும் வகையில் க்வால்காம் (Qualcomm) புராசஸர்ஸ் இதில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தொழில்நுட்பம் தகவல்களை திறமையாகவும் விரைவாகவும் பரிமாற உதவுகிறது; டவுண்லோடு, அப்லோடு திறனை மேம்படுத்துகிறது. சாம்சங் கேலக்ஸி நோட் 4-ன் டிஸ்ப்ளே 5.7 இஞ்ச் என்றும் இந்த டிஸ்ப்ளே க்வாட்-ஹெச்டு தொழில்நுட்பத்தைக் கொண்டிருப்பதால் படங்கள் துல்லியமாகத் தெரியும் என்றும் ஓர் இணையதளம் குறிப்பிடுகிறது. நோட் 4-ல் 16 எம்பி ரியர் கேமராவும் 2 எம்பி ஃப்ரண்ட் கேமராவும் பொருத்தப்பட்டிருக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in