

கோடைக்காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருள்படுத்தாமல் ஏதாவது ஓர் இடத்துக்குச் சுற்றுலா சென்று வர வேண்டுமென்பது நண்பர்கள் குழுவில் எழுதப்படாத விதி. சுற்றுலா என்பது அதிகம் அறியப்படாத இடமாக இருக்க வேண்டும், த்ரில் அனுபவத்தைத் தர வேண்டும், இன்ஸ்டகிராம் ‘ரீல்ஸ்’ எடுப்பதற்கு ஏதுவான இடமாக இருக்க வேண்டும், மறக்க முடியாத பயணமாக இருக்க வேண்டும் என நண்பர்கள் மத்தியில் லிஸ்ட் நீளலாம்.
இதுபோன்ற யோசனைகளையொட்டிச் சுற்றுலாவைத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால், உங்களுக்குத்தான் இந்தப் பரிந்துரைகள்.
அலைச்சறுக்கு: கடலையும் சாகசத்தையும் விரும்புவோருக்கு ஏற்றது ‘சர்ஃபிங்’ எனப்படும் அலைச்சறுக்கு சாகச விளையாட்டு. மிதவைப் பலகையின் மீது நின்றுகொண்டு கடல் அலைகளுக்குள் முன்னேறி சாகசத்தில் ஈடுபவதுதான் அலைச்சறுக்கு. நீளமான கடற்கரையைக் கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் மிக நீண்ட கடற்கரையைக் கொண்டுள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று.
அந்த வகையில் அலைச்சறுக்கு சாகச விளையாட்டுக்கெனச் சிறந்த இடங்கள் தமிழ்நாட்டிலும் உள்ளன. இவற்றில் ‘அலைச்சறுக்கின் கிராமம்’ என்று அழைக்கப்படுகின்றன சென்னையை அடுத்த கோவளம், மாமல்லபுரம் ஆகிய கடற்கரைப் பகுதிகள். அலைச்சறுக்கு சாகச விளையாட்டை அனுபவிக்கச் சிறந்த இடங்கள் இவை. சென்னையின் கிழக்குக் கடற்கரைச் சாலையிலிருந்து 45 நிமிடப் பயணத்தில், ஒரு ‘மினி ’ சுற்றுலாவுக்குப் பொருத்தமான இடங்களும்கூட.
இந்த இடங்களில் அலைச்சறுக்கு விளையாட்டுக்கான பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. சில மணி நேரம் முதல் சில வாரங்கள் வரை நீடிக்கும் இந்த அலைச்சறுக்குப் பயிற்சி ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம். சீறும் கடல் அலைகளைக் கிழித்துக்கொண்டு மிதப்பது போன்று தனித்துவமான அனுபவத்தைத் தரும் அலைச்சறுக்கு விளையாட்டை, இந்தக் கோடையில் தவறவிடக் கூடாது. தமிழ்நாட்டில் சென்னையைத் தவிர, தூத்துக் குடியின் மணப்பாடு, ராமேஸ்வரம் கடற்கரைகளிலும் புதுச்சேரியிலும் அலைச்சறுக்கு விளையாட்டை அனுபவிக்கலாம்.
மலைப் பயணம்: மலையேற்றங்கள் செய்வதற்கெனத் தமிழ்நாட்டில் நிறைய இடங்கள் இருக்கின்றன. ஆனால், இயற்கையை நேசிக்கவும் புத்துணர்வைப் பெறவும் சில இடங்கள் மட்டுமே உள்ளன. அவற்றில் முக்கியமானவை வெள்ளகவி. அழகான மலையும் அருவியும் சேர்ந்து அமையப்பெற்ற இடம் இது. பலரும் அறிந்திடாத இடமும்கூட. இந்த வெள்ளகவி மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் உள்ளது.
கொடைக்கானலிலிருந்து 6 கி.மீ. தொலைவில் வட்டக்கனல், அங்கிருந்து மேலும் 6 கி.மீ. தூரம் சென்றால், அழகான வெள்ளகவி கிராமத்தைத் தரிசிக்கலாம். கொடைக்கானலிலிருந்து வெள்ளகவி செல்லும் வழியில் இறங்கி, ஏறும்போது மலையேற்றம் போன்ற பயணம் அமையும்.
வழி சவாலான பாதையாக இல்லாதது இன்னொரு சிறப்பம்சம். வெள்ளகவி செல்வோர், பெரியகுளம் நோக்கிக் கீழே இறங்கினால், எழில் கொஞ்சும் கும்பக்கரை அருவியையும் பார்த்துவிட்டு வரலாம். சிறப்பான மலையேற்ற அனுபவத்துக்கும் அருமையான ‘வியூ-பாய்ண்ட்’ பார்ப்பதற்கும் வெள்ளகவி சரியான தேர்வாக அமையும்.
ஒளிப்படச் சுற்றுலா: இப்போதெல்லாம் சுற்றுலா செல்வதே ஒளிப்படம் எடுக்கவும், யூடியூப் வீடியோ பதிவேற்றவும் ஃபேஸ்புக், இன்ஸ்டகிராமில் ரீல்ஸ் போடுவதற்காகவும் என்றாகிவிட்டது. திறன்பேசி வைத்திருப்போர் எல்லாருமே ‘டிராவல் விளாக்கர்ஸ்’ ஆகிவிட்டதால், ஒளிப்படம், வீடியோ எடுப்பதற்காகவே சுற்றுலாவுக்குச் செல்கிறார்கள். இது போன்றவர்களுக்கு ஏற்ற இடமாக கழுகுமலை உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலிருந்து 22 கி.மீ. தொலைவில் கழுகுமலை அமைந்துள்ளது.
ஒரே பாறையில் செதுக்கப்பட்ட ‘வெட்டுவான்’ கோயிலும் இங்குதான் உள்ளது. அழகும் வரலாறும் புதைந்து கிடக்கும் இடம்தான் கழுகுமலை. ‘ரீல்ஸ்’ பிரியர்களுக்கு இது சரியான இடம். ‘சிற்பிகளின் சொர்க்கம்’ என்று அழைக்கப்படும் இந்தக் கழுகுமலை அட்டகாசமான ‘ஃபோட்டோஷூட்’டுக்களுக்கான இடமாக உள்ளது. கழுகுமலையின் உயரம் குறைவுதான் (300 அடி) என்றாலும், அகலமாகப் பரவியிருக்கும் பெரிய மலைக்குக் கண்டிப்பாக ஒரு விசிட் அடிக்கலாம்.