

கேபர் வாசுகியின் சுயாதீன இசைப் பாடல்களின் ஊர்வலம் சென்னையிலும் கோவையிலும் அண்மையில் நடைபெற்றது. அடுத்து, மே 18 அன்று பெங்களூருவிலும் அதைத் தொடர்ந்து வெளிநாடுகளிலும் நடைபெற உள்ளது.
"திரைப்பாடல்கள் இல்லாத ஒரு நிகழ்ச்சிக்குக் கிடைக்கும் வரவேற்பை, தமிழ்த் தனியிசை புதிய உச்சத்தைத் தொடுவதற்கான நல்ல நேரமாகப் பார்க்கிறேன். எந்த ரிகார்டிங் கம்பெனியின் லேபிலோ, தனியார் தொலைக்காட்சிகளோ, தனியார் வானொலிகளின் உதவியோ எதுவும் இல்லாமல், சமூக வலை தளங்களை மட்டுமே முதன்மையாகக் கொண்டு உருவாகிய ரசிகர்கள் கூட்டத்தை நம்பி இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம். பாட்டைக் கேட்கும் ரசிகர்களின் வயது 17 முதல் 25 வரைதான் இருக்கும்.
பாடல் வரிகளைப் புத்தகமாகவும் வெளியிட்டிருக்கிறோம்" என்கிறார் கேபர் வாசுகி. திரைப்படப் பாடல்களுக்கு நிகராகத் தற்போது சுயாதீன இசையை விரும்பும் ரசிகர்கள் ஏராளமாக இருப்பதை அண்மையில் சென்னை தரமணியில் உள்ள பரதகலாஞ்சலி நாட்டியப் பள்ளியின் டீச்சர் ஆடிட்டோரியத்தில் கேபர், நடத்திய இசை நிகழ்ச்சியில் பார்க்கமுடிந்தது.
பொதுவாகப் பாடல்களைக் கேட்பதற்குத்தான் ரசிகர்கள் வருவார்கள். ஆனால் கேபரின் நிகழ்ச்சியில், அவரின் `நீ வெட்கம் கோரிப் பேசாத உண்மைகள்; நான் மேடையேறிப் பாடவந்தேன்', `ராசாத்தி' மற்றும் `ராக் ஸ்டார்' பாடல்களை ரசிகர்களே பாட ஆரம்பித்துவிட்டனர். அதன்பின் கேபர், ரசிகர்களிடம் “நான் பாடலாமா?” என அனுமதி கேட்டுப் பாடியது நிகழ்ச்சியை சுவாரசியப்படுத்தியது.
கேபரின் அடுத்த நிகழ்ச்சி பெங்களூருவில் உள்ள `மேடை தி ஸ்டேஜில்' நடைபெற இருக்கிறது. கேபர் வாசுகியின் நான்கு பாடல்களை கே.ஒய்.என். ரெக்கார்ட் லேபில் வெளியிட இருப்பது அவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.