

க
ல்லூரிக்கு வந்தால் படித்தோமா நண்பர்களோடு சேர்ந்து சுற்றினோமா என்பதுதான் மாணவ மாணவிகள் பலரின் எண்ணமாக இருக்கும். ஆனால், இதிலிருந்து மாறுபட்டவர்களாக இருக்கிறார்கள் சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவ கல்லூரியில் படிக்கும் நான்கு மாணவிகள். படிப்புக்கு இடையே இவர்கள் ஒன்றாகச் சேர்ந்து ஈவென்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தைத் தொடங்கி நடத்திவருகிறார்கள்.
படிக்கும்போதே இது எப்படி சாத்தியமானது என்று கேட்டதும் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். “நாங்க நாலு பேருமே நல்ல நண்பர்கள். எங்களுக்கு தனித் தனி விஷயத்துல ரொம்ப ஆர்வம் இருந்துச்சு. எனக்கு ஃபேஷன் டிசைனர் ஆகணும்னு ஆசை. ஆடைகளை வடிவமைக்க ரொம்பப் பிடிக்கும். என்னோட தோழி வினோதினிக்கு ஒளிப்படங்கள் எடுக்க ஆர்வமும் விருப்பமும் அதிகம். இன்னொரு தோழி எங்களுடைய எல்லா வேலையயும் சரியா ஒருங்கிணைப்பா. எங்க நாலு பேருக்கும் நாலு விதமான திறமை இருந்ததால ‘மிராக்கிள்ஸ் அப்’ என்ற பெயரில் நிகழ்ச்சிகளை நடத்தித்தரும் நிறுவனத்தைத் தொடங்கினேம்” என்கிறார் ஆடை வடிவமைப்பாளரான கிருத்திகா.
இந்த நிறுவனத்தை இவர்கள் இரண்டாம் ஆண்டு படிக்கும்போது தொடங்கியிருக்கிறார்கள். நிறுவனம் தொடங்கி ஓராண்டு ஆகிவிட்ட நிலையில், ஓரளவு வளர்ச்சி பெற்றிருக்கிறார்கள். “கடந்த ஆண்டு ஏப்ரல்ல இந்த நிறுவனத்த தொடங்குறப்ப எங்களுக்கு ஒன்னுமே தெரியாது. ஆனால், நம்பிக்கை மட்டும் இருந்துச்சு. பல நிகழ்ச்சிகள நாங்க நடத்திக்கொடுத்திருக்கிறோம். படிக்கும் மாணவிகள்னு பார்க்காமல் எங்களுக்கு பலரும் வேலை கொடுத்தாங்க. முதலாமாண்டு விழாவை வெற்றிகரமா கொண்டாடப்போறதை நினைச்சாலே ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு” என்கிறார் இந்த நிறுவனத்தின் டிசைனரான சரண்யா.
கல்லூரிக்குச் சென்று திரும்பியதும் வீட்டில் தனக்கென ஆரம்பித்த ஸ்டுடியோ வேலைகளை செய்வது வினோதினியின் வேலை. நிகழ்ச்சிகளுக்கு ஆர்டர் எதுவும் வந்தாலும்கூட, கல்லூரிக்கு விடுப்பு எடுக்காமல் நிகழ்ச்சிகளை முடித்துகொடுத்துவிடுகிறார்கள். பிறந்த நாள், திருமணம், தனியார் நிகழ்ச்சிகள் என அனைத்துவிதமான நிகழ்ச்சிகளையும் இவர்கள் நடத்தித் தருகிறார்கள். ஆனால், படிக்கும் காலத்தில் நிறுவனம் ஆரம்பிக்கப் போவதாக இவர்கள் அவர்களது வீடுகளில் சொன்னபோது யாருமே ஆதரவு கொடுக்க முன்வர இல்லை. ஆனால், வீட்டில் ஆதரவு இல்லாவிட்டாலும் நிறுவனம் தொடங்குவதில் உறுதியாக இருந்திருக்கிறார்கள் இவர்கள்.
“படிக்குறப்ப ஏன் இந்த வேலைன்னுதான் வீட்டுல திட்டுனாங்க. படிப்பை பாருங்கன்னு நிறைய அறிவுரை சொன்னாங்க. ஆனா, வினோதினி அம்மா கொடுத்த தைரியத்தால்தான் கம்பெனிய தொடங்கினோம். அவுங்க ஆதரவு கொடுக்கலைன்னா இன்னிக்கு நாங்க இந்த நிலைமைக்கு வந்து இருக்கவே மாட்டோம். அதோட படிப்புக்கும் பங்கம் வராம பார்த்துக்கிட்டோம். இப்போ வீட்ல புரிஞ்சுக்கிட்டு ஆதரவு கொடுக்க ஆரம்பிச்சிருக்காங்க” என்கிறார் நிகழ்ச்சி அமைப்பாளரான வைஷ்ணவி.