

நீங்கள் பைக்கில் செல்லும் பயணத் தூரத்தைகக் கணக்கிடுவதற்கு என்ன செய்வீர்கள்? சிலர் வண்டியில் இருக்கும் ஸ்பீடா மீட்டரை வைத்தே கணக்கிடுவார்கள். சிலர் அதைக் கணக்கிடச் சற்றுச் சிரமப்படுவார்கள். அப்படிப்பட்டவராக நீங்கள் இருந்தால், இத்தகவல் உங்களுக்குத்தான். ஒரு செயலி மூலம் இந்தக் கணக்கீட்டை எளிதாகப் பார்த்துவிடலாம். கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ‘GPS Speedometer - Odometer’ செயலியைப் பதிவிறக்கம் செய்வதன் மூலம் இதற்குத் தீர்வு காண முடியும்.
சரி, இதை எப்படிப் பயன்படுத்துவது? இந்தச் செயலியின் உள்ளே சென்றவுடன் ‘GPS’ குறியீட்டை ஆன் செய்ய வேண்டும். அவ்வாறு செய்த பிறகு, டிஜிட்டல் மீட்டர் போல் ஒரு திரை தோன்றும். அதன் கீழே ‘Star trip’ என்கிற பட்டனை அழுத்தினால், அந்தச் செயலி நம் பயணத் தூரத்தைக் கணக்கிட ஆரம்பித்துவிடும்.
பிறகு நீங்கள் குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றடைந்த பிறகு ‘Stop trip’ என்கிற பட்டனை அழுத்தினால், நீங்கள் கடந்து வந்த பயணத்தின் கிலோ மீட்டரை கூகுள் மேப்புடன் காட்டிவிடும். நடுவில் உங்களுக்கு இந்தச் செயலியைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்றால் இடது பக்கத்திலுள்ள ‘Pause’ பட்டனை அழுத்தவும்.
தொடர நினைத்தால் ‘Resume’ என்று காட்டும் பட்டனை அழுத்தினால் விட்ட இடத்திலிருந்து தொடரும். மேலும் இந்தப் பயணத்தின் கிலோ மீட்டரை யாருக்காவது பகிர நினைத்தாலும் பகிரலாம். அதற்கான வசதியும் இச்செயலியில் உள்ளது.
இதுவரை நீங்கள் எங்கெங்கு சென்றிருக்கிறீர்கள், எவ்வளவு கிலோமீட்டர் சென்றிருக்கிறீர்கள், உங்களின் குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்சம் வேகம் என்ன? எவ்வளவு மணி நேரத்தில் சென்றிருக்கிறீர்கள் என்பது போன்ற பல தகவல்களை இந்தச் செயலி மூலம் தெரிந்துகொள்ளலாம். இப்படியாக உங்கள் பயணத்தின் கிலோமீட்டரை எளிதாகக் கணக்கிட்டு அதைச் சேமித்து வைத்துக்கொள்ளலாம். முயன்று பாருங்கள். - சுரேஷ். ஜி