பாப்கார்ன்: ஏ.ஐ. சர்வர் ரோபாட்!

பாப்கார்ன்: ஏ.ஐ. சர்வர் ரோபாட்!
Updated on
2 min read

உலகம் முழுவதும் ஹோட்டல்களில் சர்வராக ரோபாட்கள் பயன்படுத்துவது புதிய செய்தி அல்ல. ஆனால், சீனாவில் உள்ள ஒரு ஹோட்டலில் சர்வர் வேலையில் ஈடுபடுத்தப்படும் ஒரு ரோபாட்டைப் பார்த்தவர்கள் வாயைப் பிளக்கிறார்கள். இந்த ரோபாட் பார்ப்பதற்கு அச்சு அசலாகப் பெண்ணைப் போன்ற தோற்றத்தில் இருக்கிறது.

அதாவது, இந்த சர்வரை ரோபாட் என்று சொன்னால்தான் மற்றவர்களுக்கே தெரியும். அந்தளவுக்குத் துல்லியமாக ரோபாட் சர்வரை வடிவமைத்திருக்கின்றனர். சீனப் பெண்ணை மனதில் கொண்டு இந்த ரோபாட்டை வடிவமைத்துள்ளனர். செயற்கை நுண்ணறிவின் (ஏ.ஐ.) உதவியுடன் இந்த ரோபாட் சாத்தியமாகியிருக்கிறது.

அதேபோல அந்த ரோபாட்டால் பேசவும் முடியும். இந்த ரோபாட் ஹோட்டலுக்கு வருகை தரும் ஒவ்வொரு வாடிக்கையாளரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இங்கு வருவோர் செல்ஃபி எடுக்காமல் செல்வதில்லை. விரைவில் சீனாவின் முன்னணி ஹோட்டல்களில் இதுபோன்ற சர்வர் ரோபாட்களைக் காண முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செல்ஃபி புள்ள சிலை! - திறன்பேசிகள் மலிந்திருக்கும் இந்தக் காலத்தில் செல்ஃபி எடுக்காதவர்கள் என யாருமே இருக்க வாய்ப்பில்லை. எல்லாருக்கும் செல்ஃபி எடுக்கத் தோன்றியது. ஆனால், செல்ஃபி எடுப்பதுபோல சிலை எடுக்க வேண்டுமென இங்கே யாருக்காவது தோன்றியதா? ஆனால், அமெரிக்கர்களுக்கு அப்படி ஓர் எண்ணம் தோன்றியது, எண்ணத்தோடு நின்றுவிடவில்லை.

செல்ஃபிக்குச் சிலையும் வைத்துவிட்டார்கள். அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள சுகர் லேண்ட். என்கிற இடத்தில்தான் இந்த செல்ஃபி சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த நகரின் டவுண் ஹாலில் வைக்கப்பட்ட செல்ஃபி சிலை அனைவரையும் கவர்ந்திழுக்கிறது. இரண்டு இளம் பெண்கள் தங்களை செல்ஃபி எடுத்துக்கொள்ளும் காட்சிதான் அங்கே சிலையாக வடிவம் பெற்றிருக்கிறது.

தக்காளிச் சண்டை! - சுமார் எண்பது ஆண்டுகளாக நடைபெறும் தக்காளிச் சண்டை, ஸ்பெயின் நாட்டில் மிகப் பிரபலம். புனோல் நகரில் ‘லா டோமாட்டினா’ (La Tomatina) என்கிற பெயரில் நடைபெறும் திருவிழா உலகளவில் பிரசித்திப் பெற்றது. ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் கடைசி புதன்கிழமை இந்தத் திருவிழா நடைபெறும்.

இந்தத் திருவிழாவின்போது மக்கள் ஒருவரை இன்னொருவர் தக்காளிகளால் அடித்துக்கொள்வார்கள். உலகின் மிகப்பெரிய ‘உணவுச் சண்டை’யாக இது கருதப்படுகிறது இந்தத் தக்காளி திருவிழா. 1945 இல் ஓர் அணிவகுப்பின் போது கீழே தள்ளிவிடப்பட்ட நபர், கையில் கிடைத்த காய்கறிகளையெல்லாம் எடுத்து அனைவரையும் தாக்கத் தொடங்கினார்.

அதிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் இந்தத் தக்காளி சண்டை நடைபெறத் தொடங்கியது. பல ஆண்டுகளுக்கு இந்தத் திருவிழா அங்கீகரிக்கப்படவில்லை. 1957இல்தான் இத்திருவிழாவை ஸ்பெயின் அரசு அங்கீகரித்தது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in