

வா
ழ்க்கையில் ஒரு நாளாவது விமானத்தில் பறக்க வேண்டும். இது பலருக்கும் உள்ள ஆசைதான். ஆனால், சீனாவில் லியோனிங் மாகாணத்தைச் சேர்ந்த விவசாயி ஸு யூவுக்கு (Zhu yue) விமானத்தில் பறக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, சொந்தமாக ஒரு விமானத்தை வாங்க வேண்டும் என்றும் ஆசை. அந்த ஆசைக்கு வடிவம் கொடுக்கும் வகையில் சொந்தமாக விமானம் வடிவமைக்கும் பணியிலும் அவர் இறங்கியிருக்கிறார்.
ஒரு விவசாயியால் எப்படி விமானத்தை வடிவமைக்க முடிகிறது? தனது இளமைக் காலத்தில் விவசாயப் பணிகளை மேற்கொண்ட ஸு யூ, பின்னர் வெல்டராகவும், மோட்டார் பைக் மெக்கானிக்காகவும் பல அவதாரங்களை எடுத்தார். இதில் கிடைத்த அனுபவப் பாடங்களைக்கொண்டே சொந்தமாக விமானம் உருவாக்கும் முடிவுக்கு வந்தார் ஸு யூ. அதற்குத் தேவையான பணத்தைச் சேர்த்து வந்த அவர், தன் நண்பர்கள் 5 பேரிடம் தனது கனவுத் திட்டம் பற்றி எடுத்துச் சொன்னார். இதில் ஆச்சரியமடைந்த நண்பர்களும் அவருக்கு உதவிக்கரம் நீட்டினார்கள்.
நண்பர்கள் துணை கிடைத்ததால் உற்சாகமடைந்த ஸு யூ, தனது விமானம் எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பாகப் பல்வேறு விஷயங்களை இணையதளங்கள் மூலம் தெரிந்துகொண்டார். சுமார் 3 மாத கால ஆய்வுக்குப் பின்னர் 2016-ம் ஆண்டில் ஒரு நல்ல நாள் பார்த்து தனது கனவு விமானத்தை வடிவமைக்கும் பணியை ஆரம்பித்தார்.
லியோனிங் மாகாணத்தில் செயல்படும் கையூன் (Kaiyuan) தொழிற்பூங்காவில் ஓர் இடத்தை வாடகைக்கு எடுத்து அங்கே விமானம் கட்டும் பணியை மேற்கொண்டார். ஆரம்ப காலத்தில் சிரமங்களைச் சந்தித்தாலும், தனது சிறுவயது கனவை அடைய வேண்டும் என்ற உத்வேகமும் நண்பர்களின் உதவியும் இருந்ததால் மனம் தளராமல் கனவு விமானத்தைக் கட்டுவதில் ஆர்வம் காட்டினார் ஸு யூ.
தற்போதைய நிலவரப்படி 85 சதவீதப் பணிகள் முடிந்துவிட்டன. 40 டன் கம்பி, இரும்பு, பிளாஸ்டிக், கண்ணாடியைக் கொண்டு தனது கனவு விமானத்தை இழைத்துவருகிறார் ஸு யூ. தற்போதுவரை ₹70 லட்சத்தை இதற்காகச் செலவு செய்திருக்கிறார் இவர். கனவு விமானம் கட்டுமானப் பணியைச் சமூக ஊடங்களில் அவ்வப்போது நேரடியாக ஒளிபரப்பியதால், அவரது கனவுத் திட்டம் சீனாவின் பல பகுதி மக்களுக்கும் சென்றடைந்திருக்கிறது.
ஸு யூ கட்டிய கனவு விமானம் பார்ப்பதற்கு ஏர் பஸ் ஏ-320 விமானம் போலவே இருக்கிறது. உண்மையான விமான பாகங்கள் அனைத்தையும் இதில் பொருத்தியிருப்பது விமானத்துக்கு அழகைக் கூட்டியிருக்கிறது. இன்னும் இரண்டு மாதங்களில் விமானம் கட்டும் பணியை நிறைவு செய்யத் திட்டமிட்டுள்ளார் ஸு யூ. இதே விமானத்தில் தனது குடியிருக்கவும் திட்டமிட்டுள்ளார்.
இப்படியும் ஒரு விவசாயி!