போர்டு விளையாட்டும் உயிர்பெறும் கலைஞர்களும்

போர்டு விளையாட்டும் உயிர்பெறும் கலைஞர்களும்
Updated on
2 min read

சென்னையில் இருக்கும் கலைஞர்களுக்கு (ஓவியர், பாடகர், கவிஞர், கதைசொல்லியாக இருக்கலாம்), அவர்களின் திறமையை மேடையேற்றும் வாய்ப்பை வழங்குவதற்காக, ஓர் ஆண்டுக்கு முன்பாக ஜான் ஃபாஸ்ட் என்பவரால் `சன்ஷைன் ஹார்ட் ஹவுஸ்' என்கிற அமைப்பு தொடங்கப்பட்டது.

அண்மையில் இந்தக் குழுவினர் ‘மார்க்கெட் ஆஃப் ரீபர்த்’ என்னும் நிகழ்ச்சியை நடத்தினர். `டஞ்சன்ஸ் அண்ட் டிராகன்ஸ்' கடந்த 35 ஆண்டுகளாக விளையாடப்படும் ஒரு போர்டு கேம். ஒரே நேரத்தில் எட்டுப் பேர் வரை இந்த விளையாட்டை விளையாடலாம். இதில் விதவிதமான கதாபாத்திரங்களை விளையாட்டில் பங்கேற்பவர்கள் ஏற்பார்கள். டஞ்சன்ஸ் மாஸ்டர் கதாபாத்திரங்களை வழிநடத்துவார்.

"பர்ப்பிள் என்னுடைய அடையாளம். வரையும்போதும் கதை சொல்லும்போதும் இந்தப் பிரபஞ்சமே நான்தான் என்று எனக்குத் தோன்றும். பிரபஞ்சமே பர்ப்பிள் நிறத்தில் ஒளிர்வதுபோல் தோன்றும். எனவே, என்னுடைய அடையாளமே என் பெயரானது. கடந்த ஆண்டில் `ஹானிமாஸரி' என்னும் பெயரில் ஒரு கலை விழாவை நடத்தினோம். இதில் ஏறக்குறைய 50-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கெடுத்தனர்" என்கிறார் குழுவை வழிநடத்தும் பர்ப்பிள் என்கிற கலைஞர்.

ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் தனிப்பட்ட திறமை இருக்கும். எல்லாத் திறமைகளும் ஒன்றிணையும் போதுதான் உலகின் சமநிலை காக்கப்படும் என்கிற நீதியைக் கருவாகக் கொண்டது இந்தக் கதை. கதைக்கென்று பிரத்யேகமான விதிமுறைகள் இருக்கின்றன. இதற்கென பிரத்யேகமான ‘டைஸ்’கள் (பகடைகள்), கதாபாத்திரங்கள் பயன்படுத்தும் சாதனங்களைத் தங்களின் கற்பனையில் உருவாக்கியிருக்கும் கலைஞர்கள், அதை விற்பனைக்கும் வைத்திருந்தார்கள். அவர்களும் இதில் பங்கெடுத்தார்கள்.

குழுவாகச் சேர்ந்து விளையாடுவதுதான் 'டஞ்சன்ஸ் அண்ட் ட்ராகன்ஸ்' என்கிற விளையாட்டின் மையம். இந்த விளையாட்டு முதன்முதலில் 1974-இல்வெளியிடப்பட்டது. 2004-க்குள் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விளையாடும் விளையாட்டாக மாறியது. இப்போது உலகெங்கும் பிரபலமாக விளையாடப்படும் இந்த விளையாட்டு, சென்னையில் ‘கேம் கஃபே’கள், ‘கிளப் மீட்’டுகள், தனியார் கூட்டங்களிலும் விளையாடப்பட்டு வருகிறது.

ஏழு தனிப்பட்ட கலைநிகழ்ச்சிகள், 2 குழு கலைநிகழ்ச்சிகள், 12 கலை அனுபவ நிகழ்வுகள், 5 பாப்அப் நிகழ்வுகள், 9 கலை பட்டறைகள், ஓபன் மைக் நிகழ்ச்சிகள் சன்ஷைன் ஹவுஸில் நடத்தப்பட்டன. செல்போன் விளையாட்டுகளிலேயே மூழ்கிக் கிடக்கும் இளைய தலைமுறை, ஒருமித்த கருத்துடைய தங்கள் வயதினரோடு பேசிப் பழகி, உரையாடுவதற்கும் தங்களின் திறமையைப் பல்வேறு கலை வடிவங்களின் வழியாக மேம்படுத்திக் கொள்வதற்கும் முன்வருவது ஆரோக்கியமான விஷயம் அல்லவா!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in