

ஒரே நேரத்தில் ஒரு இயர் போனில் ஒருவர் மட்டுமே பாடல்களைக் கேட்க முடியும். ஆனால், ஒரே இயர் போனில் இரண்டு பேர் வெவ்வேறு பாடல்களைக் கேட்கலாம் என்றால் உங்களுக்கு ஆச்சரியம்தான் ஏற்படும்.
இப்படி வெவ்வேறு பாடல்களைக் கேட்க ‘டியோ மியூசிக்’ (DUO MUSIC) என்கிற செயலியைப் பதிவிறக்கம் செய்தால் போதும். இரண்டு வெவ்வேறு பாடல்களைக் கேட்க முடியும். செயலிகளின் கூடாரமான ‘கூகுள் பிளே’ ஸ்டோரில் ‘டியோ மியூசிக்’ செயலியைப் பதிவிறக்கம் செய்துகொள்ளவும். அந்தச் செயலியின் உள்ளே சென்று மியூசிக் பிளேயரைப் போல் இடது மேல் பக்கம் ‘டியோ மியூசிக்’ பட்டன் இருக்கும். அதை ‘கிளிக்’ செய்தால் உங்களுக்கு அந்தச் செயலி இரண்டு பிளேயர் என்கிற தேர்வைக் காட்டும்.
இருவேறு ‘பிளேய’ரை இயக்கினால் வெவ்வேறு பாடல்கள் கேட்கும். ஒரு ‘பிளேய’ரை இயக்கினால் மெலடிப் பாடலையும் இன்னொரு ‘பிளேய’ரை இயக்கினால் டப்பாங்குத்து பாடலையும் கேட்க முடியும். இரண்டுவிதமான பாடல்களைக் கேட்க இயர் போன் மட்டுமல்ல, டி..டபுள்யூ.எஸ். ஸும்(இயர் பட்ஸ்) உதவுகிறது. ஆனால், இப்படிப்பாடல்களைக் கேட்க உங்கள் திறன்பேசியில் நீங்கள் பாடல்களைப் பதிவிறக்கம் செய்து இருக்க வேண்டும். அப்போதுதான் இது சாத்திய மாகும்.
பொதுவாகப் பயணத்தின்போது பலர் இந்த வடிவில் பாடல்களைக் கேட்டு மகிழ, இந்தச் செயலி உங்களுக்கு உதவியாக இருக்கும்.
- சுரேஷ். ஜி