

தமிழ்நாட்டில் கிராமங்களில் மஞ்சள் தண்ணீர் ஊற்றிக் கொண்டாடும் திருவிழா பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பழைய பாரதிராஜா படங்களில் செம்பில் மஞ்சள் தண்ணீரை எடுத்துக்கொண்டு பெண்கள் சுற்றிச் சுற்றி வருவார்கள். அதுபோன்ற ஒரு திருவிழாதான் ‘களிமண் திருவிழா’. மஞ்சள் தண்ணீருக்குப் பதில் ஒருவர் மேல் ஒருவர் களிமண்ணை வாரி இறைத்துக் கொண்டாடுகிறார்கள். இந்தத் திருவிழா தென் கொரியாவில் பிரபலமான கேளிக்கைகளில் ஒன்றாகிவிட்டது. 1998இல் போராயாங் என்னும் தென் கொரியக் கடற்கரை நகரில்தான் இந்தத் திருவிழா முதன்முதலில் கொண்டாடப்பட்டது.
16 வகை நிகழ்ச்சி: போராயாங் நகரக் கடற்கரையான டெய்சனில் கிடைக்கும் களிமண் விஷேச குணமுடையது. சாக்கடலில் கிடைக்கும் களிமண்தான் உலகத்திலேயே கனிம வளமிக்க களி மண்ணாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இந்தக் களிமண்ணைவிட டெய்சன் கடற்கரைக் களிமண்ணில் கனிம வளம் அதிகம். ஜெர்மானியம், பெண்டோனைட், ரேடியட் போன்ற கனிமங்கள் இந்த மண்ணில் இருக்கின்றன. இந்தக் களிமண்ணைப் பயன்படுத்திப் பலவிதமான அலங்காரப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஒப்பனைப் பொருள்களைப் பயன்படுத்துவதன் மூலம் இயற்கையான முறையில் உடல்பொலிவு பெற முடியும் என்று நம்பப்படுகிறது.
ஒப்பனைப் பொருள்கள் தயாரிப்பது அந்தப் பகுதியின் முக்கியத் தொழில். இந்தக் களிமண் ஒப்பனைப் பொருள்களுக்குத் தென் கொரியா முழுவதும் வரவேற்புண்டு. இதன் சிறப்பை மேலும் விரிவுபடுத்தவே களிமண் திருவிழாவை போராயாங் நகர நிர்வாகம் ஒருங்கிணைக்கத்தது. இதன் விளைவால் இந்தத் திருவிழா தென்கொரியாவைத் தாண்டி தற்போது உலகின் பல நாடுகளிலும் பரவியிருக்கிறது.
முதன்முதலில் 16 விதமான ஒப்பனைப் பொருள்கள் தயாரிக்கப்பட்டதை நினைவுபடுத்தும் வகையில் 16 வகையான நிகழ்ச்சிகளுடன் இந்தத் திருவிழா நான்கு நாள் கொண்டாடப்பட்டது. அதன் பிறகு இந்தத் திருவிழாவுக்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து ஏழு நாள் கொண்டாட்டமாகி, இப்போது பத்து நாட்களாகவும் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. இப்போது இந்தத் திருவிழாவில் உலகெங்கிலுமிருந்து 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கிறார்கள்.
வண்ணக் களிமண்: தென் கொரியர்கள் மட்டுமல்ல, மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் உற்சாகத்துடன் இதில் பங்கேற்கிறார்கள். தென் கொரியாவின் ஈர்க்கக்கூடிய சுற்றுலா அம்சங்களில் இந்தக் களிமண் திருவிழாவும் ஒன்று. இந்தக் களிமண் திருவிழாதான் தென்கொரியாவில் வெளிநாட்டவர் அதிகம் பங்குகொள்ளும் திருவிழாவாகவும் இருக்கிறது. உலகெங்கிலும் கொண்டாடப்படும் திருவிழாக்களில் சிறந்த திருவிழா என்னும் விருதையும் இது வாங்கியிருக்கிறது.
இந்தத் திருவிழாவில் பல வண்ணங்கள் உள்ளன. களி மண்ணைப் பீய்ச்சி அடிப்பது, வண்ணக் களிமண்ணைப் பூசுவது என அட்டவணை இட்டுக் கொண்டாடுகிறார்கள். சிறைக்கூடம்போல பலூன் கூடம் உருவாக்கி அதற்குள் ஒளிந்து விளையாடும் முறையும் உள்ளது. பார்வையாளர்கள் தங்களுக்குள் மண்பூசி விளையாடுவதும் உள்ளது. களிமண் மூலம் தயாரிக்கப்பட்ட ஒப்பனைப் பொருள்களின் விற்பனைக் கண்காட்சியும் நடைபெறுகிறது. கோடைக்காலமான ஜூன், ஜூலை மாதங்களில்தான் இந்த விழா கொண்டாடப்படுகிறது. ஆனால், இப்போதிருந்தே உலகெங்கிலுமிருந்தும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்க போராயாங் நகரம் தயாராகிவிடும்.