

சென்னை லலித் கலா அகாடமியில் ‘சென்னை வீக்கெண்ட் கிளிக்கர்ஸ்’ குழுவைச் சேர்ந்தவர்கள் பிரம்மாண்ட ஒளிப்படக் கண்காட்சியை அரங்கேற்றியுள்ளனர். கண்களுக்கு விருந்தளிக்கும் இந்த ஒளிப்படக் கண்காட்சியில் 200க்கும் மேற்பட்ட படைப்புகள் இடம் பெற்றுள்ளன.
யார் இந்த ‘வீக்கெண்ட் கிளிக்கர்ஸ்?’ - சென்னையில் 2009இல் இரண்டு ஒளிப்படக்காரர்கள் சேர்ந்து தொடங்கியதுதான் ‘சென்னை வீக்கெண்ட் கிளிக்கர்ஸ்’ குழு. இக்குழுவில் தற்போது 18,000க்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக உள்ளனர். ஒளிப்படங்கள் எடுப்பதில் ஆர்வமிருக்கும் யார் வேண்டுமானாலும் இக்குழுவில் சேர்ந்து பயணிக்கலாம். வயது ஒரு தடையே இல்லை.
ஒவ்வொரு வார இறுதியிலும் சென்னையிலுள்ள முக்கியத் தலங்களில் கூடும் ஒளிப்படக்காரர்கள் ‘போட்டோ வாக்’ என்கிற நிகழ்வை நடத்துகின்றனர். விடுமுறை தினங்களில் சென்னையைத் தாண்டி பல்வேறு ஊர்களுக்குப் பயணம் செய்து ஒளிப்படங்கள் எடுக்கின்றனர்.
கடந்த 14 ஆண்டுகளில் 900க்கும் அதிகமான ‘போட்டோ வாக்’ நிகழ்வுகள், 180க்கும் அதிகமான வெளியூர் பயணங்களை மேற்கொண்டு காலச் சக்கரத்தை ஒளிப்படங்களால் ஆவணப்படுத்தி யுள்ளனர்.
10ஆவது கண்காட்சி: 2009 முதலே ஆண்டுதோறும் ஒளிப்படக்காரர்களின் சிறந்த ஒளிப்படங்களை கேலரியில் காட்சிப்படுத்துவதை இக்குழு வழக்கமாகக் கொண்டுள்ளது. அந்த வகையில் தற்போது 10ஆவது ஒளிப்படக் கண்காட்சி சென்னையில் நடைபெற்று வருகிறது.
ஆரம்ப நிலை ஒளிப்படக்காரர்களை ஊக்குவிப் பதையும், தொழில்முறையில் அடுத்த கட்டத்துக்கு அவர்களை நகர்த்துவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்தக் கண்காட்சி ஒருங்கிணைக்கப் படுகிறது.
“இக்குழுவைப் பொறுத்த வரை சீனியர், ஜூனியர் என்கிற பாகுபாடு கிடையாது. சொந்தமாக கேமரா இல்லாதவரும்கூட இக்குழுவோடு சேர்ந்து பயணிக்கலாம், கற்றுக் கொள்ளலாம். பழகப் பழக திறம்பட ஒளிப்படங்களை எடுக்க முடியும் என்பதுதான் ‘கான்செப்ட்’.
இதனால் வாரந்தோறும் அல்லது நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒளிப்படங்கள் எடுத்துக் கொண்டே இருப்போம். ஒருவருக்கு இன்னொருவர் விமர்சனங்களைப் பகிர்ந்து கொள்வோம். அடுத்த முறை திறம்பட ‘கிளிக்’ செய்ய முயல்வோம்.
இக்குழுவில் சேரக் கட்டணம் ஏதும் கிடையாது. சேர்ந்துவிட்டால் ஒன்றாகத்தான் பயணிக்க வேண்டுமென்கிற நிர்பந்தமும் இல்லை. அவரவர் வாழ்க்கைச் சூழலுக்கேற்ப இக்குழுவில் பயணிக்கலாம். வெளியூர் செல்லும்போதும், இது போன்ற கண்காட்சிகள் நடத்தும்போதும் ஆகும் செலவை அனைவரும் பகிர்ந்துகொள்வோம்” என்கிறார் ஒளிப்படக்காரர் ராம்குமார்.
ஒரு தாயின் கதை: நீலகிரி மாவட்டம் மசினகுடி பொக்காபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார். பெட்டக் குறும்பர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவரான இவர், தனது தாயாரின் பணிச்சூழலை கேமராவில் பதிவு செய்துள்ளார். மலைப் பகுதிகளில் ஆடு, மாடு மேய்ச்சல், சாணம் விற்பனை போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறார் அவருடைய தாய் மேதி.
அவருடைய அன்றாடப் பணிச்சூழலை ஒளிப்படங்களின் வழியே கதையாகச் சொல்ல முயன்றிருக்கிறார் ரவிக்குமார். இவரைப் போல 90க்கும் அதிகமான ஒளிப்படக் கலைஞர்களின் 200க்கும் மேற்பட்ட படைப்புகள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
இந்த ஒளிப்படக் கண்காட்சி ஏப்ரல் 21 வரை நடைபெறுகிறது.