

உடல் பாகங்களில் ஆசையாகத் தீட்டிக்கொள்ளும் டாட்டூகளையே விஞ்சிவிட்டன ‘பாடி ஆர்ட்’ எனப்படும் உடல் ஓவியக் கலை. ஒட்டுமொத்த உடலையும் வண்ணமயமான ஓவியக்கூடமாக்கி அசத்துகிறார்கள் இந்தக் காலத்து இளைய தலைமுறையினர். ‘பாடி ஆர்ட்’டும் பார்ப்பதற்கு டாட்டூ போலவேதான் இருக்கிறது.
ஆனாலும், இது டாட்டூ வகையைச் சார்ந்தது அல்ல. உடல் பாகங்களில் வரையப்படும் டாட்டூ நிரந்தரமாக இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால், ‘பாடி ஆர்ட்’ தற்காலிகமாகத்தான் உடலில் இருக்கும். எனவே, இளைய தலைமுறையினர் மத்தியில் இதன் மீதான ஆர்வம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
அதற்கேற்ப உடல் ஓவியக் கலையும் உலக அளவில் வளர்ந்து வருகிறது. குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் இதற்கெனப் பிரத்யேகமாக இருக்கும் ஓவியர்களுக்கும் வரவேற்பு கூடிவிட்டது. இளைஞர்களும் யுவதிகளும் மனதுக்குப் பிடித்த ஓவியங்கள் தொடங்கி, விசித்திரமான தோற்றங்கள், விதவிதமான ஒப்பனைகள், விநோதமான அலங்காரங்கள் என உடலில் வண்ணங்களைக் கொட்டி தங்கள் உடலையே மாற்றிக் கொள்கின்றனர்.
உடலுக்குத் தீங்கிழைக்கும் எந்த ஒரு புதுமையான செயலுக்கும் எதிர்ப்பு இருக்கவே செய்யும் அல்லவா? ‘பாடி ஆர்ட்’டுக்கு ஆதரவு இருப்பது போலவே எதிர்ப்பும் இருக்கவே செய்கிறது. உடலைத் திரைச் சீலையாக்கிப் பல வண்ணக் குவியல்களை உடலில் கொட்டுவதால் தோல் பாதிக்கப்பட்டு நோய் உண்டாகும் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
என்றாலும் இந்தக் காலத்தில் உடலில் வரையப்படும் ஓவியங்கள் மூலம் உலகின் முக்கியப் பிரச்சினைகளைப் பேசுவது, மறுக்கப்படும் மனித உரிமைகளைப் பேசுவது, சமூகப் பிரச்சினைகளைப் பேசுவது, வெற்றிகளைக் கொண்டாடுவது, உடல் பாகங்களின் வழியே வண்ண அழகை படைப்பது என்று உலகம் முழுவதும் ‘பாடி ஆர்ட்’டுக்கு ஆதரவும் அபரிமிதமாகவே இருக்கிறது. இதனால், ‘பாடி ஆர்ட்’ அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துவிட்டது.