அமெரிக்கத் தூதருக்குச் சமர்ப்பணம்!

அமெரிக்கத் தூதருக்குச் சமர்ப்பணம்!
Updated on
2 min read

‘உ

ணவு விடுதிகளைவிட, எங்கள் நாட்டில் நூலகங்கள் அதிகம்’ என்று அமெரிக்கர்கள், எப்போதும் பெருமைப்பட்டுக் கொள்வார்கள். நூலகங்களைக் கொண்டாடுவதற்கென்றே ஒரு வாரத்தை (ஏப்ரல் 8 முதல் 14 வரை) அர்ப்பணித்த நாடு அமெரிக்கா எனும்போது, அந்தப் பெருமை இருக்காதா என்ன?

அமெரிக்காவில் ‘தேசிய நூலக வாரம்’ கொண்டாடப்பட்ட அந்தத் தருணத்தில், சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திலும் அந்தக் கொண்டாட்டத்தின் சந்தோஷம் எதிரொலித்தது. புகழ்பெற்ற புத்தகம் ஒன்றிலிருந்து சில அத்தியாயங்களை, இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக நியமிக்கப்பட்டிருக்கும் கென்னத் ஜஸ்டர் வாசித்ததுதான் அந்தக் கொண்டாட்டத்தின் சிறப்பு.

அமெரிக்காவைச் சேர்ந்த நார்டன் ஜஸ்டர், அடிப்படையில் ஒரு கட்டிடக் கலைஞர். அவர் எழுதவும் செய்தார். அவருடைய எழுத்தில் ‘தி பேன்டம் டோல்பூத்’ எனும் குழந்தைகளுக்கான நாவல் 1961-ம் ஆண்டு வெளியானது. கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றியும், அதைத் தேடிச் செல்லும் சிறுவன் ஒருவன் சந்திக்கும் சாகசங்களும், அதன் மூலமாக அவன் கண்டடையும் அனுபவ அறிவும்தான் இந்த நாவலின் மையம். புத்தகம் வெளியான காலத்தில் சுமார் 30 லட்சம் பிரதிகள் விற்று சாதனை படைத்தது.

இதற்கு அடுத்து ‘தி டாட் அண்ட் தி லைன்’ எனும் புத்தகத்தை எழுதினார் நார்டன். 1963-ல் வெளியான இந்தப் புத்தகத்தை 1965-ல் சக் ஜோன்ஸ் எனும் பிரபல அனிமேஷன் பட இயக்குநர், அனிமேஷன் குறும்படமாக இயக்கினார் (யூடியூப்பில் பார்க்க: https://bit.ly/2djVxFp). இந்தப் படம், அந்த ஆண்டுக்கான சிறந்த அனிமேஷன் குறும் படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்றது.

படமாக வெளிவந்து ஆஸ்கர் விருது வென்ற புத்தகத்தை வாசிக்காமல், நார்டன் ஜஸ்டரின் முதல் புத்தகம் ‘தி பேண்டம் டோல்பூத்’த்தை இந்த நிகழ்வுக்குத் தேர்வு செய்தது ஏன் என்று விசாரித்தோம். அதற்கு அமெரிக்கத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் லாரன் லவ்லேஸ், “கென்னத் ஜஸ்டர், அமெரிக்கத் தூதராகப் பதவியேற்ற பிறகு, முதன் முறையாக இந்த நூலகத்துக்கு வந்தார். இங்குள்ள நூல்களைப் பார்வையிட்ட அவர், எங்களிடத்தில், ‘எல்லாம் நன்றாக இருக்கிறது. ஆனால், ஒரே ஒரு புத்தகம் மட்டும் இல்லை’ என்றார். ‘என்ன புத்தகம்?’ என்று அவரிடம் கேட்டபோது, ‘தி பேன்டம் டோல்பூத்’ புத்தகத்தைச் சொன்னார். அதனால்தான், இந்த நிகழ்ச்சிக்கு இந்தப் புத்தகத்தைத் தேர்வுசெய்தோம்” என்றார்.

அது சரி… அமெரிக்கத் தூதர் ஏன் குறிப்பாக இந்தப் புத்தகத்தைப் பற்றிக் கேட்டார். வேறொன்றுமில்லை, கென்னத் ஜஸ்டரின் சித்தப்பாதான் நார்டன் ஜஸ்டர். கென்னத் சிறுவனாக இருந்தபோது, நார்டனுக்குத் திருமணமாகியிருக்கவில்லை. அப்போது, அவர் புத்தகம் ஒன்றை எழுதிக்கொண்டிருப்பதாக கென்னத்திடமும் அவருடைய சகோதரரிடமும் சொல்லியிருந்தார் நார்டன். அதனால், தினமும் ஜஸ்டர் சகோதரர்கள், நார்டனிடம் ‘எப்போது அந்தப் புத்தகம் வெளியாகும்?’ என்று நச்சரித்துக்கொண்டே இருந்தார் களாம். அதனால், அந்தப் புத்தகத்தை, அவர்கள் இருவருக்கும் அர்ப்பணித்தார் நார்டன்!

பாவம்… கென்னத் ஜஸ்டர் பின்னாளில் அமெரிக்கத் தூதராக வருவார் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார் நார்டன். அப்படி எதிர்பாத்திருந்தால், ‘அமெரிக்கத் தூதருக்குச் சமர்ப்பணம்’ என்று கையெழுத்திட்டிருப்பாரோ…?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in