

வரும் மக்களவைத் தேர்தலில் இந்தியா முழுவதும் 1.8 கோடி பேர் முதல் முறையாக வாக்களிக்க உள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10. 45 லட்சமாக அதிகரித்துள்ளது. தமது வாக்குகளை முதல் முறையாகப் பதிவுசெய்ய இருக்கும் இளைய தலைமுறையினர் தேர்தல் பற்றியும், தங்கள் எதிர்பார்ப்புகள், தங்கள் வாக்கு யாருக்கு என்பது பற்றியும் என்ன சொல்கிறார்கள்?
l யுவஸ்ரீ , கல்லூரி மாணவி, சென்னை
நான் பொத்தாம் பொதுவாக வாக்களிக்க மாட்டேன். என்னுடைய தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார், அவர்கள் அளித்துள்ள வாக்குறுதிகள் என்ன என்பன போன்றவற்றையெல்லாம் தெரிந்து கொண்டுதான் என்னுடைய வாக்கைச்செலுத்துவேன்.
என்னைப் பொறுத்தவரை ஒரு வேட்பாளர் தொழில்நுட்பம், வளர்ச்சி என்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல் நாட்டின் ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். 360 டிகிரியிலும் சிந்திக்கக்கூடிய ஒரு நல்ல வேட்பாளருக்கே என்னுடைய வாக்கைச் செலுத்துவேன். ’இந்த பாலிடிக்ஸ் வேண்டாம்’ எனச் சிலர் ஒதுங்கிக் கொள்கிறார்கள். அப்படி இருக்கக் கூடாது என நினைக்கிறேன். வாக்குரிமை பெற்ற ஒவ்வொருவரும் கண்டிப்பாக வாக்கைச் செலுத்த வேண்டும்.
l வனிதா, கல்லூரி மாணவி, கிருஷ்ணகிரி
முதல் முறையாக வாக்களிக்க இருக்கிறேன் என்பதை நினைத்தாலே கொஞ்சம் பதற்றமாகத்தான் உள்ளது. என்னுடைய வாக்கை வீணடிக்காமல் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருக்கிறேன்.
என்னுடைய சொந்த ஊர் கிருஷ்ணகிரி என்றாலும் வேறு மாவட்டத்தில்தான் தங்கிப் படிக்கிறேன். எனவே, ஊரில் நடக்கும் விஷயங்கள் பற்றி அவ்வளவாகத் தெரியவில்லை. எனினும் ஊர் நிலவரம், வேட்பாளர், கட்சிகள் ஆகியவற்றைப் பற்றித் தெரிந்துகொண்டு என்னுடைய வாக்கைச் செலுத்துவேன்.
l கோகுல கிருஷ்ணன், உணவக ஊழியர், திருவள்ளூர்
வாக்காளர் அடையாள அட்டை வந்துவிட்டது. தேர்தலும் வந்துவிட்டது. நானும் வாக்களிக்க தயாராகிவிட்டேன். முதல் முறையாக என்னுடைய வாக்கைச் செலுத்த இருப்பதால், அதை எண்ணி ஆர்வமாக உள்ளேன். எந்தக் கட்சிக்கு என்னுடைய வாக்கு என்பதைவிட, சிறந்த வேட்பாளருக்கே என்னுடைய வாக்கைச் செலுத்துவேன்.
சிலர் எல்லா வேட்பாளர்களையும் நிராகரித்து ’நோட்டா’வுக்கு வாக்களிக்கிறார்கள். என்றாலும், ’நோட்டா’வுக்கு வாக்களிப்பது என்பது அவரவர் விருப்பம். வாக்களிக்காமல் விளையாட்டுத்தனமாக இருப்பதைவிட ’நோட்டா’வுக்கு வாக்களிப்பது எவ்வளவோ மேல்.
l பூர்ணஸ்ரீ , கல்லூரி மாணவி, ஈரோடு
என்னுடைய நண்பர்களில் சிலர் வாக்களிக்க ஆர்வம் காட்டுவ தில்லை. அப்படி இருக்கக் கூடாது. வாக்களிப்பது அனைவருடைய கடமை என்பதை உணர்ந்துள்ளேன். 18 வயதை எட்டியப் பிறகு ஒருவருக்குக் கிடைக்கும் முதல் உரிமை இது. எனவே வாக்குரிமையை விட்டுக்கொடுக்காமல் கண்டிப்பாக அனைவரும் வாக்களிக்க வேண்டும்.
அப்பா, அம்மா எனக் குடும்பத்தில் யாருடைய தூண்டுதல் இல்லாமலும் சுயமாகச் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. வெற்றிபெறும் ஒவ்வொரு வேட்பாளரின் எண்ணிக்கையும் முக்கியம் என்பதாலும், அடுத்து யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டும் நல்ல கட்சிக்கே என்னுடைய வாக்கைச் செலுத்துவேன்.
l பவ்யா, தனியார் நிறுவன ஊழியர், கந்தவர்க்கோட்டை
மக்களவைத் தேர்தலில் இதுவே என்னுடைய முதல் வாக்கு. இந்தத் தேர்தலின் முடிவில் அமைய இருக்கும் அரசுக்குத்தான் சட்டங்களை மாற்றி அமைக்கக்கூடிய அதிகாரம் கிடைக்கும். எனவே ஒரு பெண்ணாக எனது எதிர்காலத்தை எண்ணி, பெண்கள் முன்னேற்றம், உரிமைகள், அதற்கான சட்டங்கள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கக்கூடிய கட்சிக்குத்தான் என்னுடைய வாக்கைச் செலுத் துவேன்.
தேர்தல் பற்றியும், வாக்குரிமை பற்றியும் சமூக வலைதளங்களில் எழுதி, பேசினால் மட்டும் போதாது. ஒவ்வொருவரும் வாக்குகளைப் பதிவுசெய்ய வேண்டும். முக்கியமாக ’நோட்டா’வுக்கு வாக்களித்து எனது வாக்கை வீணடிக்க மாட்டேன். வேட்பாளருக்கே வாக்கைச் செலுத்துவேன். ’நோட்டா’வுக்கு வாக்களித்தால் தகுதியற்ற வேட்பாளருக்குச் சாதகமாகக் கூடும். இதனால் ’நோட்டா’வுக்கு வாக்களிக்க மாட்டேன்.
l மின்மினி, பால் புதுமையர், சென்னை
ஒரு நபர் தனது பாலின அடையாளத்தைத் தீர்மானம் செய்து வெளிப்படையாக அறிவிக்கவே இச்சமூகம் இன்னும் இடம் தரவில்லை. இதனால், பால்புதுமையினருக்கு வாக்குரிமை கிடைப்பதில் பல தடைகளும், சிக்கல்களும் நிலவு கின்றன. 18 வயதைத் தாண்டிய பலர் இன்னும் வாக்காளர் அடையாள அட்டை கிடைக்காமல் உள்ளனர். பால்புதுமையினரின் வாக்குகளும் முக்கியம் என்பதால் அனைவருக்கும் வாக்குரிமை கிடைக்க வேண்டும்.
l கோகுல், கல்லூரி மாணவர், பொன்னேரி
அரசியலில் களம் காணும் முதல் தலைமுறை வேட்பாளருக்கும், இளைஞர்களாக இருப்பவர்களுக்கும் எனது ஆதரவை அளிப்பேன். அதுமட்டுமல்ல, ஒரு வேட்பாளரின் கல்வியறிவு, அனுபவம், சமூகப் பணிகள் ஆகியவற்றை கருத்தில்கொண்டு வாக்களிப்பேன். தொகுதி வேட்பாளர்கள் பற்றிய விவரங்களை இணையத்தில் அலசி ஆராயும் வசதி இருப்பதால், வாக்களிக்கும் முன் இதுபோன்ற தகவல்களைத் தெரிந்து கொண்ட பிறகே என்னுடைய வாக்கைச் செலுத்துவேன்.